அநுராதபுரம், இபலோகமவில் தாண்டவமாடும் இனவாதம்

0
3

உண்மையில் நடந்தது என்ன?

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வேண்டுகோளுக்கினங்க இபலோகம தொகுதியில் உள்ள வீடற்றவர்களுக்கு வீட்டுத் திட்டமொன்றை அமைப்பதற்கு பொருத்தமான இடம் குறித்து கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ‘பொது பலாத் தின’ கூட்டத்தில் இபலோகம பிரதேச செயலாளரினால் கருத்து வினவப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலக்கம் 516 புளியங்குளம் பிரிவைச் சேர்ந்த கிராம சேவகரான என்.பி.கே. விஜேசிங்க, தனது கிராம சேவகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீடமைப்பு திட்டத்தை மேற்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டு 10 ஏக்கர் நிலம் பற்றிய விபரத்தையும் தெரிவித்து 2017.11.22ஆம் திகதி இபலோகம பிரதேச செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இதில் கிழக்கு எல்லை தொல்பொருள் நிலம் என்பதும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களின் இணக்கப்பாட்டை பெற்று வீடமைப்பு திட்டத்தை அமுல்படுத்துமாறு வீடமைப்பு அதிகார சபைக்கு அறிவித்தல் வழங்கும் படி இபலோகம பிரதேச செயலாளர் மேற்படி கிராம சேவகரின் கடிதத்தில் குறிப்பொன்றை இட்டுள்ளார். கிராம சேவகரின் கடிதத்திற்கு பிரதேச செயலாளர் வழங்கிய குறிப்பை கவனத்திற்கொள்ளாமல் கிராம சேவகர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நிலம் பற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பதில் பிரதேச செயலாளரான ஆர்.எம்.டீ. ரத்நாயக்க வீட்டுத் திட்டத்திற்கு பொருத்தமான இடமொன்றை பரிந்துரை செய்தல் எனும் தலைப்பில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அநுராபுரம் மாவட்ட முகாமையாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

பிரதேச செயலாளரின் குறிப்பின் படி வேலை நடக்காவிடினும் இந்தக் கடிதத்திலும் கூட குறிப்பிட்ட நிலத்தின் கிழக்கு எல்லை தொல்பொருள் பகுதி என்பது தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நிலம் அடையாளங் காணப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட நிலம் வீடமைப்பு அதிகார சபைக்கு சட்டபூர்வமாக ஒப்படைக்கப்பட்டிருக்கவில்லை. நிலத்தினை ஆரம்பகட்டமாக அடையாளங்கண்டுகொள்வதின் மூலம் மாத்திரம் நிலத்தை வீடமைப்பு அதிகார சபைக்கு உரிமைப்படுத்திக்கொள்ளும் அதிகாரம் கிடைப்பதில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகளைப் பெற்று குறிப்பிட்ட நிலத்தை நிலையாகவே வேறுபடுத்திக்கொடுக்கும் நடவடிக்கைகள் இன்னும் எஞ்சியிருக்கையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 2018.04.09ஆம் திகதி வீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை நட்டியுள்ளது.

அடிக்கல் நட்டும் நிகழ்வுக்கு இபலோகம பிரதேச செயலாளருக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்படவில்லை என்பதும், அடிக்கல் நடப்படுவதாக அறிவித்தலொன்று மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த அறிவித்தலும் கூட குறிப்பிட்ட வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நடப்பட்டு முடிந்ததன் பிறகே பிரதேச செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே இதன்போது அந்த நடவடிக்கையை தடுக்கும் இயலுமைகளும் அவருக்கு காணப்படவில்லை. அத்துடன் குறித்த நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் சார்பில் ஒரு பிரதிநிதியேனும் சென்றிருக்கவுமில்லை. இவ்வாறு அரசியல் அதிகாரசபையின் சிற்சில தேவைகள் நிமித்தம் குறிப்பிட்ட விடயம் துரிதமாகவும் வலுக்கட்டாயமான முறையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரிகிறது.

இந்நிலையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை புளியங்குளம் மத்தியதர வகுப்பினருக்கான மாதிரிக் கிராமத்திற்கும், புளியங்குளம் குறைந்த வருமானங்களை பெறுவோருக்கான மாதிரிக் கிராமத்திற்கும் 48 பேரை நேர்முகப் பரீட்சையொன்றின் மூலம் தெரிவுசெய்திருந்தது. இந்தப் பெயர்பட்டியலை பிரதேச செயலகத்தின் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்துமாறும் அதற்கு ஏதும் எதிர்ப்பு வெளியிடப்பட்டால் எழுத்து மூலம் தனக்கு அறிவிக்குமாறும் மார்ச் மாதம் 19ஆம் திகதி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் டபிள்யூ.எம்.ஆர்.எஸ்.டீ.கே. விஜேரத்ன இபலோகம பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இவ்வறிவித்தலுக்கு அமைய வீடுகளைப் பெருவோரின் பெயர் விபரம் அறிவித்தல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வீடுகளை பெறுவதற்காக தெரிவுசெய்யப்பட்டோரில் இருவர் மாத்திரமே முஸ்லிம்கள். அத்துடன் இந்த 48 பேரும் இபலோகம பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்து இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவித்து விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க உடனடியாக இந்தத் திட்டத்தை அடுத்து வரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வரையில் இடைநிறுத்துமாறு 2018.04.04 ஆம் திகதி மின்னஞ்சல் மூலம் அறிவித்தல் வழங்கியுள்ளார். இது விடயம் தொடர்பில் 2018.04.04ஆம் திகதியன்றே இபலோகம பிரதேச செயலாளர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை குறித்த நிலத்தினை அபிவிருத்திசெய்யும் பணியை மேற்கொண்டு வந்துள்ளனர்.

பூகொல்லாகம பிரதேசத்தில் ஒரு நிலப்பகுதி பெகோ இயந்திரம் கொண்டு தரைமட்டமாக்கப்படுவதாகவும், அங்கு தொல்பொருட்கள் காணப்படுவதாகவும் இபலோகம பிரதேசசெயலாளருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்புக்கு இனங்க, அன்றைய தினமே கிராம சேவகர் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டு பிரதேச செயலாளரினால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொல்பொருள் நிலம் அழிக்கப்படுவதாக அநுராதபுரம் தொல்பொருள் திணைக்களத்திற்கு 2018.04.25 அன்று அறிவித்தல் கடிதமொன்றும் பிரதேச செயலாளரினால் அனுப்பப்பட்டுள்ளது. எனவே வீடமைப்பு திட்டம் தடைசெய்யப்பட்டதால் இந்தச் சிக்கலை விரைவாக தீர்த்துவிட வேண்டும் என்ற நோக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தொல்பொருள் திணைக்களத்திற்கு தமது வாகனத்தை கொடுத்து வெளிக்களப் பரிசோதனையை மேற்கொள்ளச் செய்துள்ளனர்.

இதன்படி 2018.05.03 ஆம் திகதியன்று தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்ட பரிசோதனையில் தொல்பொருள் வனப்பகுதி அழிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அநுராதபுரம் தொல்பொருட்கள் திணைக்களம் இபலோகம பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக தொல்பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இபலோகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளனர். இந்நிலையில் 2018.05.05 அன்று மாவட்ட செயலாளர் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் உள்ளிட்டோர் தொல்பொருட்கள் அழிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படும் இடத்திற்கு கள விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு பொதுமக்களிடமும் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். அன்றைய தினம் பொலிஸாரும் தொல்பொருள் வனப்பகுதியை நீங்கள் வீடமைப்பு அதிகாரசபைக்கு வழங்கினீர்களா? என பிரதேச செயலாரிடம் வினவியுள்ளனர். அதற்கவர், அப்படியொரு இடத்தையோ, தொல்பொருட்களை அழிப்பதற்கான அனுமதியையோ நாங்கள் வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

விசாரணையும் இடமாற்றமும்

இந்தப் பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் அநுராதபுரம் மாவட்ட செயலாளர், உதவி பிரதேச செயலாளரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு மாவட்ட செயலகத்திற்கு ஆஜராகுமாறு இபலோகம பிரதேச செயலாளருக்கு கடந்த 05ஆம் திகதி அறிவித்துள்ளார். லீவு நாட்களை தொடர்ந்து கடந்த 08ஆம் திகதி இபலோகம பிரதேச செயலாளர் மாவட்ட செயலகத்திற்கு சென்றுள்ளார். மறுதினம் 09ஆம் திகதி இவர் பளுகஸ்வௌ பிரதேச செயலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். மீண்டும் இவர் கடந்த 14ஆம் திகதி மாவட்ட செயலகத்திற்கு அழைக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பளுகஸ்வௌ பிரதேசத்திற்கு பிறிதொரு பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் கடமை புரியும் இவர் எதிர்வரும் காலங்களில் எந்தெந்தப் பகுதிகளில் எந்தெந்தப் பதவிகளில் அமர்த்தப்படுவார் என்பதில் நிச்சயமில்லாமல் உள்ளது. இந்நிலையில் கடந்த 15ஆம் திகதி அநுராதபுரம் மாவட்ட செயலாளர், இபலோகம பிரதேச செயலாளர் மற்றும் பூகொல்லாகம பிரிவு கிராம சேவகர் ஆகியோர் உள்விவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது அதிகாரிகளின் குறைகள் சுட்டிக்காட்டிய அமைச்சர் வஜீர அபேவர்தன விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அறிவித்துள்ளார். இதேவேளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் தொல்பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் பிரதேசத்திற்கு வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனவாதம்

இபலோகம பிரதேச செயலாளர் இனவாத நோக்கில் செயற்படவில்லை என்பதும், அவரது செயற்பாடுகளில் எவ்வித தவறுகளும் இல்லை என்பதும் மேற்படி விடயங்களிலிருந்து தெளிவாகிறது. இந்நிலையில் ஒரு சில சிங்கள ஊடகங்கள் தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க வனப்பகுதி அழிக்கப்படுவதாகவும், அதற்குரிய அனுமதியை இபலோகம பிரதேச செயலாளர் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்து விடயத்தை பூதாகாரப்படுத்தியுள்ளன. இபலோகம பிரதேச செயலாளர் ஒரு முஸ்லிம் என்பதால் இந்த விடயம் இனவாதிகளுக்கு கொளுத்த தீனியாய் அமைந்தது. கிழக்கு மாகாணத்தில் தொல்பொருட்கள் அழிக்கப்படுவதாகவும், வில்பத்து சரணாலயத்தில் முஸ்லிம்கள் குடியமர்த்தப்படுவதாகவும் கூச்சலிட்டு வந்த சிங்கள இனவாதிகளுக்கு இந்த விடயம் புதிய தலைப்பாய் மாறியுள்ளது. ஒரு ஊடக நிறுவனத்தின் செய்தித் தயாரிப்பாளர் ‘பிரதேச செயலாளர் முஸ்லிம் என்பதால் இபலோகம செய்தி வெற்றியளித்திருப்பதாகவும், நான்கைந்து நாட்களாக இந்தச் செய்தியை பிரசுரித்துச் செல்ல முடிந்ததாகவும்’ குறிப்பிட்டுள்ளார்.

இபலோகம பிரதேச செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்த விடயங்களுள் சில பகுதியை மாத்திரம் எடுத்து அவர் மீது குற்றம் சுமத்தப்படும் வகையில் சல சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மெடில்லே பங்ஞாலோக தேரரின் பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் ‘துட்டகைமுனு மன்னனின் இதயமான விஜிதபுர, பெலும்கல தொல்லியல் வனப்பகுதியை பெகோ இயந்திரம் கொண்டு அழித்த இபலோகம பிரதேச செயலாளருக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்து!, அவளிடம் இந்நாட்டின் பண்டைய வரலாறு தொடர்பில் இமியளவு கௌரவமேனும் இல்லாத பாவத்திற்கு பல ஆயிரம் வருடங்கள் இப்பூமியில் ஆரோகணித்திருந்த விஜிதபுர, பெலும்கல தொல்பொருள் வனப்பகுதி இன்று தரைமட்டமாக்கப்பட்டுள்ளது’ என பதிவிடப்பட்டிருந்தது.

இந்தப் பதிவினை சுமார் 9500 பேர் சயார் பன்னியுள்ளார்கள். 2000 பேர் தங்களது கருத்துக்களையும் பறிமாறியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இனவாதக் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். குறைந்தபட்சம் 4 லட்சம் பேருக்கு இந்தப் பதிவு சென்றிருக்கும் என நம்பப்படுகின்றது. முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சகல அரசாங்க அதிகாரிகளையும் நீக்க வேண்டும், முஸ்லிம்கள் திட்டமிட்ட அடிப்படையில் அரசாங்க சேவையில் அதிகாரத்தை பிடித்துள்ளார்கள், முஸ்லிம்களுக்கு தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களின் பெறுமதி தெரிவதில்லை என்றவாறு பல்வேறு கருத்துக்கள் மேற்படி கருத்துக்கு கீழால் பதிவிடப்பட்டிருந்தன.

சிங்கள ஊடகங்களில் வெளியான போலிச் செய்தியைத் தொடர்ந்து இபலோகம பிரதேச செயலகத்தை சுற்றிவளைத்த ராவண பலகாயவைச் சேர்ந்த தேரர்கள் ‘பிரதேச செயலாளரின் உறவினர்களுக்கு வழங்கவே தொல்பொருள் நிலம் அழிக்கப்பட்டுள்ளது’ என்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த 12ஆம் திகதி இபலோகம பிரதேசத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ‘சிங்கள பௌத்த இனத்தை அடிமைப்படுத்தி வேறு இனத்தவர்களை குடியமர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டம்’ என்பதாக கருத்து வெளியிட்டிருந்தார். பொதுபல சேனாவைச் சேர்ந்த தேரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இபலோகம பிரதேச செயலாளர் ஒரு முஸ்லிம், எனவே அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்ற கோணத்திலேயே இனவாதிகள் இந்த விடயத்தை அனுகியிருப்பது தெரிகிறது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பலவந்தத்திலும் அவசரத்திலும் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் காரணமாகவே தொல்பொருள் நிலம் அழிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. வீடுகளை பெறுவதற்கு நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவுசெய்யப்பட்டவர்களுள் இருவர் மாத்திரமே முஸ்லிம்கள். ஏனைய 46 பேரும் சிங்களவர்கள். அத்துடன் இவர்கள் எவரும் வெளியிடத்திலிருந்து அழைத்து வரப்படுவபவர்கள் அல்ல. இபலோகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்டவர்கள். வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையே நேர்முகப் பரீட்சையை நடாத்தி இவர்களை தெரிவுசெய்துள்ளது. அறிவித்தல் பலகையில் போடும் பணியை மாத்திரமே பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் பிரதேச செயலாளரின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக வேண்டி தொல்பொருள் நிலம் அழிக்கப்பட்டிருப்பதாக கூறும் கருத்தில் எவ்வித உண்மைத்தன்மைகளும் இல்லை. இது சிறுபிள்ளைத்தனமான கருத்துக்கள்.

சகவாழ்வுக்கான எடுத்துக்காட்டு

இபலோகம பிரதேச செயலாளர் சாஜிதா பானுவின் கனவரான எச்.என். சமீன் அளுத் கந்திரியாகம சிங்களப் பாடசாலையின் அதிபராக கடமையாற்றி வருகின்றார். கடந்த காலப்பகுதியில் மூடப்படவிருந்த கந்திரியாகம வித்தியாலயத்தை பாதுகாத்து சிறந்த முறையில் பாடசாலையை பராமரித்து வரும் அதிபராகவும் இவர் உள்ளார். 5ஆம் வகுப்பு வரையிலுள்ள இந்தப் பாடசாலையில் தற்பொழுது 120 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் கடiமாயற்றி வருகின்றனர். இங்கு 3 ஆசிரியர்கள் மாத்திரமே முஸ்லிம்கள். சகல மாணவர்களும் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே இங்கு 5 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி வருகின்ற சமீன் அதிபர் அவர்களை தொடர்ந்தும் இந்தப் பாடசாலையிலேயே கடமைபுரியுமாறு பிரதேசவாசிகள் வலியுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை (14) மாகாணக் கல்விப் பணிப்பாளரும் தன்னை தொலைபேசியில் அழைத்து ‘சமீம் முஸ்லிம் கிராமமொன்றை அமைக்கப்போகின்றீர்களா’? என தன்னிடம் வினவியதாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

மாணவர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே தனது தலையாய கடமையென்னும் குறிக்கோளில் மேலதிக வகுப்புக்களையும் நடாத்தி மாணவர்களின் நலனில் அதிக கரிசணை செலுத்தி வரும் இவரது குடும்பத்தில் பிரச்சினை என்று தெரிந்ததும் மக்களும் ஆசிரியர்களும் முன்வந்து உதவியுள்ளார்கள். எனவே இப்படிப்பட்ட மக்கள் வாழும் பிரதேசத்தில் சில சிங்கள இனவாத ஊடகங்களும் இனவாதிகளும் அத்துமீறிப் பிரவேசித்து அந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்ப முனைவது சகவாழ்வுக்கு விரோதமான செயற்பாடாகும். எனவே நல்லிணக்கம், சகவாழ்வு போன்ற துறைகளுக்கு பொறுப்பாகவுள்ள அமைச்சர்கள் இந்த விடயத்தில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறந்த அதிகாரிகள் எந்தச் சமூகத்தவர்களாக இருப்பினும் அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.

 – ஹெட்டி ரம்ஸி –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here