அனர்த்தம் உதவுவது போல…

0
0

 – அபு ஷாமில் –

‘அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்’ என்று சொல்லுவார்கள். முஸ்லிம் சமூகத்தின் அண்மைக் காலச் செல்நெறியில் அனர்த்தங்கள் உணர்த்தியது போல வேறு எதுவுமே முஸ்லிம்களின் பலத்தை உணர்த்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு முஸ்லிம் சமூகத்துக்கு அனர்த்தங்கள் செய்த உதவிகள் அனந்தம்.

மஹிந்த ஆட்சியில் தாண்டவமாடிய பொதுபலசேனா அனர்த்தம் சிதைந்து போயிருந்த முஸ்லிம் சமூகத்தை கட்டியெழுப்பியது. சமூகத்துக்குள்ளால் உள்ள ஒவ்வொரு பிரிவினரையும் எதிரிகளாகப் பாவித்து வந்த சமூகத்துக்கு ஒரு பொது எதிரி கிடைத்து விட்டது. அரசியல், சமூகத் தலைமைகளைத் தாண்டி சமூகம் தன்னால் ஒன்றுபட்டது. ஒரு பாரிய அசுரனைத் தோற்கடித்து நாட்டின் போக்கையே முஸ்லிம் சமூகம் மாற்றிக் காட்டும் அளவுக்கு இந்த அனர்த்தங்களின் தாக்கம் பாதிப்புச் செலுத்தியது.

இன்றுடன் (ஜூன் 15) இரண்டு வருடங்களைப் பூர்த்தி செய்கின்ற அளுத்கமவின் கறுப்பு ஜூன் நிகழ்வுகள் அனர்த்தங் களின் விளைவுகளின்போது தொழிற்படுவதற்கு சமூகத்துக்கு பயிற்சியளித்தது.  நாடு முழுவதிலும் இருந்து சமூகம் கொண்டு வந்து கொட்டிய உதவிகள் பாதிக்கப்பட்டவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அளவுக்கு இருந்தன. முஸ்லிம் சமூகம் கொண்டு வந்து குவித்த உதவிகளால் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் தாம் தமது வாழ்க்கையை கொண்டு நடத்தியதாக ஒரு ஆசிரியை கூறியது நினைவுகூரத்தக்கது. அதே போல நிவாரணப் பணிகளை ஒருங் கிணைத்து அர்த்தமுள்ள வகையில் பங்கீடு செய்வதற்கு சமூகம் இதிலே பயிற்சி எடுத்தது. இதற்கென உருவாக்கப்பட்ட adf நிறுவனம் இதில் பெரும் பங்காற்றியது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தமது சொந்தங்களைத் தாண்டி அடுத்த சமூகத்தினருக்கும் அல்லது தமக்கு எதிராகச் செயற்பட்ட சிலருக்கும் தமது நேசக்கரங்களை நீட்டு வதற்கு முஸ்லிம் சமூகம் பக்குவப்பட்டு சக்தி பெற்றிருப்பதை எடுத்துக் காட்டியிருந்தது. இன, மத, பிரதேச வேறுபாடுகளையெல்லாம் புறந்தள்ளி, நாடு என்ற வகையில் முஸ்லிம் சமூகம் முன்னின்று உழைத்தது. ஊடகங்களின் இருட்டடிப்புக்களையும் தாண்டி நிவாரணங்களால் பயன்பெற்றவர்களின் உள்ளங்களில் ஊடுருவும் அளவுக்கு இந்த அனர்த்தம் முஸ்லிம் சமூகத்துக்கு உதவியது.

கொஸ்கம ஆயுதக் களஞ்சிய வெடிப்பு அனர்த்தம் நடைபெற்ற போது முஸ்லிம் சமூகம் அனர்த்தங்களை சாதகமாக எதிர்கொள்வதற்கான தனது பக்குவத்தை எடுத்துக் காட்டியது. பாதுகாப்புக்காக தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு வந்தவுடன் எங்கே செல்வது, எப்படிச் செல்வது என்ற எதுவித நிலைப் பாடும் இன்றி மக்கள் அல்லோலகல்லோலப்பட்டனர். இருட்டில், மழையில் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு பெண்களும் வயோதிபர்களும் பாதுகாப்புக்கான இடந்தேடி இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். பூகொட கிராமத்திலிருந்த முஸ்லிம் குடும்பங்கள் வெளியேறி வருகின்றன என்ற செய்தி கிடைத்ததுமே பக்கத்தில் இருந்த முஸ்லிம் கிராமங்கள் தயார் நிலைக்குத்தாவின.

பூகொடைக்கு அண்மையில் இருந்த மல்வானை மக்கள், வெள்ளப் பாதிப்பிலிருந்து தற்போதுதான் மீண்டு வருகின்ற நிலையிலும், பாதிக்கப்பட்டு வருபவர்களுக்காக பள்ளிவாசல்களையும் பாடசாலைகளையும் தயார்படுத்தி வைத்திருந்தார்கள். பக்கத்தில் இருந்த கஹட்டோவிட்ட, திஹாரிய, கல்எளிய மக்கள் இடம்பெயர்ந்து வருபவர்கள் போக்குவரத்துச் செய்வதற்கான வாகன ஒழுங்குகளில் ஈடுபட்டார்கள். இன்னும் சில இளைஞர்கள் வெறிச்சோடிப் போயிருந்த அந்த ஊரைப் பாதுகாக்கவென அந்த ஊரிலே இரவெல்லாம் விழித்திருந்தார்கள்.

இப்படிப் பல வழிகளிலும் பலரும் இந்த அனர்த்தத்தை எதிர் கொண்டார்கள். ஒவ்வொரு அனர்த்தமும் முஸ்லிம் சமூகத்துக்கு, அதனது இருப்புக்கு பல உதவிகளைச் செய்து வருகிறது. ஒவ்வொரு அனர்த்தங்களின் போதும் சமூகம் ஒருபடி முன்னேறிச் செல்கிறது. தன்னை ஒழுங்குபடுத்துவதில், நாட்டின் விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில் அது முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களின் அடிவருடி களும் முஸ்லிம் சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொண்டிருக்கையில் முஸ்லிம் சமூகம் தனது நல்ல பண்பாடுகளை ஆயுதமாக எடுத்து முஸ்லிம் சமூகத்தை தலைநிமிர்த்தும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறது. ஏனைய எல்லா வழிகளும் மூடப்பட்டாலும் நல்ல பண்பாடுகள் மூலம் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் நல்லதொரு இடத்தைப் பிடிக்க முடியும் என இந்திய அறிஞர் அபுல் ஹஸன் அலி நத்வி அவர்கள் சொன்ன வார்த்தைகள் மெய்ப்பட்டு வருகின்றன.

வியாபாரத்தின் போது நல்ல பண்பாடுகளைக் காட்டியதன் விளைவினாலேயே முஸ்லிம் சமூகத்துக்கு சிங்கள மன்னர்களின் அரசாங்கத்தில் சிறந்த இடம் கிடைத்தது. மீண்டும் அதற்கான வாய்ப்பு மலர்ந்திருக்கிறது. இந்த நல்ல பண்பாடுகளை முஸ்லிம்களின் வியாபாரத்திலும், பேச்சிலும் நடத்தையிலும் தொடர்ந்து காட்ட முடியுமானால் ஒரு நல்ல நாகரிகத்தை நாட்டுக்கு வழங்கியவர்கள் என்ற பழம்பெருமையை மீட்டு, மீண்டும் தலை நிமிர்ந்து வாழ முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here