அனைவருமே இஸ்லாமோபியா தொழிற்துறையின் பலிக்கடாக்களே

0
3

மாஸ் எல் யூஸுப்

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய தவறான எண்ணங்களை உயிரோட்டமாக வைத்திருப்பது தான் மில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான இஸ்லாமோபோபியா தொழிற்துறையின் இலக்காகவிருக்கிறது. முஸ்லிம்களைப் பற்றித் தவறாகப் பேசுகின்றவர்கள் எல்லோருமே இஸ்லாமோபோபிஸ்டுகளிடம் இருந்து பெற்றவைகளையே திருப்பிச் சொல்கிறார்கள். தமக்கு எந்தவகையிலும் தெரியாதவர்களுடைய செய்திகளைப் பரப்பும் சிப்பாய்களாக அவர்கள் தொழிற்படுகிறார்கள். கலிபோர்னியப் பல்கலைக்கழகமும் அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் கவுன்ஸிலும் (CAIR) இணைந்து 2011 ஜூனில் வெளியிட்ட அறி்க்கையொன்றில், 2008 -2013 காலப்பகுதிகளில் முஸ்லிம்களைப் பற்றிய அச்சத்தையும் வெறுப்பையும் பரப்புவதற்காக அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களும் 200 மில்லியன் டொலருக்கு அதிகமான பணத்தை வாரியிறைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்ணிலைவாதிகள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், முக்கிய ஊடக நிறுவனங்கள் உட்பட 74 அமைப்புக்கள் இதற்காக நிதி வழங்கியோ பராமரிக்கப்பட்டோ உள்ளதாக அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.

இலங்கையில் மேலோட்டமாக மட்டுமே இருந்த இஸ்லாமோபோபியா, ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பரவலாகச் செயற்பட்டு வருகிறது. இதற்கான காரணம் ஆச்சரியப்படக் கூடியதல்ல. முன்னர் ஒளிந்து மறைந்து இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகக் கருத்துச் சொன்னவர்கள் இப்போது பகிரங்கமாகவே கருத்துச் சொல்கிறார்கள். ஒருவகையில் இது நல்லதொரு முன்னேற்றம் தான். தப்பபிப்பிராயங்களிலும் தவறான தகவல்களிலும் சுருண்டு போயிருந்தவர்கள், தமக்கும் சமூகத்துக்கும் தீங்கிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கலந்துரையாடல்கள், வாதப்பிரதிவாதங்கள், ஈடுபாடுகள் போன்றவற்றினூடாக இவர்களுக்கு தெளிவான விளக்கங்களைக் கொடுக்க முடியும்.

கவலைக்குரிய உண்மை என்னவென்றால் முஸ்லிம்கள் மட்டுமன்றி சிங்களவர், தமிழர், கிறிஸ்தவர் என இலங்கைப் பிரஜைகள் அனைவருமே இந்தத் தீய தொழிற்துறையின் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தான்.

நிலைத்திருக்கும் பாங்கு

தவறான எண்ணங்களைப் பரப்பும் ஏதுமறியாத பொதுமகன் தான் இந்தத் தொழிற் துறையின் அடிமட்டத்தில் இருக்கிறான். செய்தியைக் காவிக் கொண்டு வருபவன் முஸ்லிம் விரோத செய்திகளைக் கொண்டு வரும் பொழுது அடிமட்டத்தில் இருப்பவன் அந்தச் செய்தியின் ஆழ அகலத்தை ஒருபோதும் அறிந்திருக்க மாட்டான். இந்தத் தொழிற்துறையின் சூத்திரதாரிகள் இவ்வாறு தான் இந்தப் பிரச்சாரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். இது ஹலோ, எப்படி இருக்கிறீங்க என்று கேட்பது போல அவர்களுக்கு சுலபமாக அமையும்.

அதேபோல இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சாடுதல் இவர்களுக்கு சகஜமானதாகவும் அன்றாட விடயமாகவும் மாறிவிடும். இவர்களுக்குப் பின்னால் இன்னொரு மக்கள் குழுவினர் இருப்பார்கள். அவர்கள் தான் இந்தத் திட்டத்தின் உண்மையான இயக்குனர்கள். அவர்களது பொறுப்பு வெறுமனே வெறுப்பைப் பரப்புவதை விடப் பாரியது. உருவாக்கி விட்ட போக்கின் உத்வேகத்தைப் பேணுவது தான் இந்த நடிகர்களின் வேலை. இதற்கு மேலதிகமாக, முன்னைய நாடகம் தனது முனைப்பை இழக்கும் பொழுது பரபரப்பான சூழலை புதிதாக உருவாக்குவது இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணி. அண்மைய செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு இந்தப் போக்கு தெளிவாக விளங்கும்.

ஏப்ரல் 21 – ஈஸ்டர் தாக்குதல்

ஏப்ரல் 29 – புர்காவைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல்

ஏப்ரல் 30 – முஸ்லிம் பெண்கள் தொல்லைப்படுத்தப்படுவது தீவிரமாகித் தொடர்ந்தது. முஸ்லிம் பெண்களின் சுதந்திரமான நடமாட்டம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டது. வைத்தியசாலைகள், பாடசாலைகள், நீதிமன்றங்கள் உட்பட பல நிறுவனங்களில் அரசாங்க பணிகளைப் பெறுதல் தடுக்கப்பட்டது. எச்சரிக்கை விடுக்கும் குழுக்களால் முஸ்லிம் பெண்கள்  துவம்சம் செய்யப்பட்டனர், மிரட்டப்பட்டனர், சிலவேளை உடலியல் ரீதியாக தாக்கப்பட்டனர்.

மே 12 – குருநாகலை மாவட்டத்தின் பண்டாரகொஸ்வத்த, கெகுணுகொல்ல, பண்டுவஸ்நுவர, கொபேகனே, ஏதன்டவல, கரண்திப்பல, பிங்கிரிய கிராமங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் தீமூட்டப்படல்.

மே 13 – குளியாபிட்டிய, ஹெட்டிபொல, அனுக்கன, கொட்டம்பபிட்டிய, நிகவரட்டிய கிராமங்களும், கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட, கொட்டாரமுல்ல, தும்மோதர கிராமங்களும் சிங்கள இனவாதிகளால் முற்றுகையிடப்பட்டன.

மே 23 – முஸ்லிம் வைத்தியர் ஒருவர் 4000 சிங்களப் பெண்களின் கருவளத்தை அழித்தார் என சிங்களப் பத்திரிகையொன்று கொட்டை எழுத்துக்களி்ல் செய்தி வெளியி்ட்டது.

மே 23 – ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

மே 31 – சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கவர்னர்களையும் பதவி விலகுமாறு கோரி அதுரலியே ரதன தேரர் கண்டி தலதா மாளிகை முன்னால் உண்ணாவிரதமிருந்தார்.

ஜூன் 02 – ஜூன் 2014 இல் முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கம தாக்குதல்களின் பின்னால் இருந்து செயற்பட்ட ஞானசார தேரர், முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதவி விலகல் தொடர்பில் காலக்கெடு விதித்தார். ”நாளை நண்பகல் வரை அரசாங்கத்துக்கு அவகாசம் தருகிறேன். அவர்கள் செயற்படாவிட்டால் நாடு முழுவதும் அமளி துமளி ஒன்றைக் காண வேண்டியிருக்கும் எனக் கொக்கரித்தார்.

ஜூன் 03 – நாட்டில் இரத்தக் களரி ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் 09 பேரும் 02 கவர்னர்களும் பதவி துறந்தனர்.

ஜூலை 04 – வஹாபிஸத்துக்கு எதிராக நுகேகொடையில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. வஹாபிஸம் தொடர்பில் எந்த உண்மைகளும் முன்வைக்கப்படவில்லை. முஸ்லிம்கள் தொடர்பான போலியான அவதூறுகளே முன்வைக்கப்பட்டன.

ஜூலை 07 – ஞானசார தேரர் கண்டியில் பொதுக் கூட்டமொன்றை நடத்தினார். முஸ்லிம்களுக்கு அவதூறு கற்பிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டதாக இது இருந்தது. சிங்கள மக்களே அவர்களுக்கு ஏற்ற வகையில் கொள்கைகளையும் சட்டங்களையும் அமைக்கும் வகையில் சிங்களப் பாராளுமன்றமொன்றை அமைப்பதாக அவர் அங்கு சூளுரைத்தார்.

ஊடகங்கள்

ஏப்ரல் 21 இல் இருந்து இன்று வரை தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் போன்ற ஊடகங்களில் சில இடைவிடாமல் தொடர்ச்சியாக முஸ்லிம்களை மலினப்படுத்தும் மூலோபாயச் செயற்பாடுகளை வேண்டுமென்றே செய்து வந்தன. ஹிஜாப், வாள், ஹலால், மத்ரஸா, அரபுமயமாக்கல் போன்றவைகளை இவை தொடர்ச்சியாக உச்சாடனம் செய்தன. பொது மக்களிடையே பயம், பீதி, பதட்டத்தை ஏற்படுத்தும் சிற்பிகளாக இவர்கள் செயற்பட்டார்கள். பாடசாலைகள் மூடப்பட்டன. இதன் இறுதி விளைவு அவர்களால் வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டது. முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வெறுப்பைப் பரப்பி சிங்கள முஸ்லிம் சமூகத்துக்கிடையே நிலவிய ஒற்றுமையைக் குலைத்து வேடிக்கை பார்த்தார்கள்.

வழிமுறைகள் ஒன்றே

பயத்தையும் வெறுப்பையும் விதைப்பதற்கான வழிமுறைகள் அமெரிக்காவிலும் 15,000 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள இலங்கையிலும் ஒன்றாகவே உள்ளன. நம்பிக்கை மற்றும் நாணயம் தொடர்பில் முஸ்லிம்களுக்கு எதிரான சூழலொன்று பொதுமக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இந்நாட்டின் பிரஜைகள் அல்ல என்றும் அவர்கள் என்றுமே இந்த நாட்டுக்கு விசுவாசமான குடிகளாக இருக்க முடியாது என்ற கருத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இந்த நாட்டை ஆக்கிரமிக்கிறார்கள் என்ற அச்சமும் பொது மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரசங்கங்களின் போது இஸ்லாமிய எதிர்ப்பு உரைகள் உச்சஸ்தாயியில் பரப்பப்படுகின்றன. இவ்வாறான சூழலில் இஸ்லாமோபோபிய தாக்குதல்களுக்கான ஊக்கிகளாக தேர்தல்கள் அமையப் போகின்றன.

பயனுள்ள முட்டாள்கள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தம்மை நிபுணர்களாகக் காட்டிக் கொள்பவர்களுக்கும், ஊடக மாநாடுகள் நடத்துபவர்களுக்கும் நாட்டில் எவ்விதப் பஞ்சமுமில்லை. மேற்குலகில் இவற்றுக்கெனவே நிதி வழங்கப்பட்டுச் செயற்படுபவர்கள் இருக்கிறார்கள். மொஹமட் தௌஹீதி என்ற பெயரில் இப்படியான ஈரானிய அவுஸ்திரேலிய ஒருவர் அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். இனவாதிகளுக்கும் இஸ்லாமோபோபியாவை பரப்புபவர்களும் இவர் பயனுள்ள முட்டாளாக (Useful Idiot) இருக்கிறார் என ரேஷனல்விக்கி (Rationalwiki) விபரிக்கிறது. இவர் தன்னைத் தானே இமாமாகப் பறைசாற்றிக் கொண்டாலும், அவுஸ்திரேலிய தேசிய இமாம்கள் கவுன்ஸிலில் இவர் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரல்ல. இது அதற்கே உரித்தானதொரு தொழில்துறை. இஸ்லாமோபோபியாவைப் பரப்புவதன் மூலம் மில்லியன் கணக்கில் உழைப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமிய அறிஞர்களாக இல்லாத நிலையிலும் தம்மை இஸ்லாமிய விவகாரங்களிலான அறிஞர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள் என CAIR இன் பேச்சாளரான வில்பிரடோ அம்ர் ருவைஸ் குறிப்பிடுகின்றார்.

இலங்கையிலும் மேற்கின் போலி அறிஞர்களின் அருகிலும் வைக்க முடியாத அரைவேக்காட்டு உலமாக்கள் இருக்கிறார்கள். தம்மை விட அதிகமாகவே அவர்கள் பாசாங்கு காட்டுவார்கள். தமது ஆன்மாவையே விற்றுப் பிழைக்கின்ற இந்த வகையான பண்புள்ளவர்கள் வெட்கப்பட வேண்டியவர்கள் இல்லையா ?

நீங்கள் எப்படி பலிக்கடா ஆகப் போகிறீர்கள் ?

உடலாலும் ஆன்மாவாலும் இலங்கையர்கள் அனைவருமே இதன் பலிக்கடாக்கள் ஆகப் போகிறீர்கள். உதாரணமாக, பௌத்தர்கள் தமது வாழ்வில் மெத்தா எனும் கருணையைக் கடைப்பிடிப்பவர்கள். அடுத்த சமூகம் பற்றியதான எதிர்மறைச் சிந்தனைகளின் காரணமாக அவர்களிடமிருந்து கருணை பற்றிய பிரக்ஞை மறைந்து போகிறது. மெத்தா எனும் கருணையானது, சகித்துக் கொள்ள முடியாமை, பொறாமை, கோபம், பழிவாங்குதல் போன்றவற்றுக்கு எதிரானது. இந்த தீங்கான விடயங்கள் ஒருவரது நடத்தையில் பிரதிபலித்து அவரது நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தி அவரது கம்மா வையே பாதிக்கிறது. எனில், கருணா என்னும் அன்பு, முதிதா எனும் இரக்கம், உபேக்கா எனும் சாந்தம் போன்றவற்றில் வரும் இடைவெளி என்ன வகையான விளைவுகளை ஒருவரில் கொண்டுவரப் போகிறது ? அப்படியானால் பௌத்த மதத்துக்கு சர்வதேச அளவில் இருக்கும் அங்கீகாரம் என்னவாகும் ? தேரவாத பௌத்தத்தின் காப்பகமான இலங்கையில் பௌத்தத்துக்குரிய பெருமை எந்தளவில் இருக்கும் ? இனச் சுத்திகரிப்புக்கும் மனித உரிமை மீறலுக்கும் சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்ட பௌத்த மியன்மார் போல இலங்கையும் கருதப்படுவதற்கு நாங்கள் இடமளிப்பதா ?

பொருளாதார ரீதியில் பார்க்கும் போது எமது மொத்த பொருளாதாரமுமே தாக்கமடைந்திருக்கிறது.  நாட்டின் ஸ்திரத்தன்மையற்ற மற்றும் பாதுகாப்பற்ற சூழல்கள் நாட்டின் சுற்றுலாத் துறையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு இதற்கான மிக எளிய உதாரணமாகும். இதனால் ஜாதி மத பேதமின்றி முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்கள் எனப் பலரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்படத் தான் போகின்றார்கள். தேசிய அளவில் இது நாட்டின் பொருளாதாரத்தை எப்படிப் பாதிக்கப் போகிறது என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here