அமெரிக்க பெப்சி நிறுவனத்தை எதிர்த்தால் தடியடிதான் தமிழக அரசின் பரிசா?

0
2

இந்தியா: நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பிளாட் எண் B-65 முதல் B-76 வரையிலும் சர்வே எண்: 1641pt, 1903pt,1904pt (கங்கைகொண்டான் கிராமத்தில்)-இல், 36.00 ஏக்கர் பரப்பளவில், தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் நீரையெடுத்து அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்திற்கு தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்க 20-01-2014 இல் பெப்சி அனுமதி கேட்டது. இதற்கு பதினைந்தே நாளில் தமிழக அரசு ஓடி வந்து 05-02-2014 அன்று அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்திற்கு அனுமதி அளித்து, 99 ஆண்டுகளுக்கு 36 ஏக்கர் நிலம் ஒதுக்கி ஒப்பந்தம் போட்டுள்ளது. தற்போது பெப்சி நிறுவனம் அங்கு கட்டிட வேலைகளை வேகமாக செய்து வருகிறது.

pepsi boycottகேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் பெப்சி நிறுவனத்தைத் துவக்க கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. தமிழகத்திற்குள் வந்த இவர்கள் ஆரம்பத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நிலம் கேட்டார்கள். ஆனால் அங்கு மக்களின் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டத்தைக் கைவிட்டனர். தற்போது சத்தமில்லாமல் கங்கைகொண்டானில் 36 ஏக்கர் நிலத்தை வாங்கி பூமிபூஜை போட்டு வேலைகளை வேகமாக செய்து வருகின்றனர்.

அரசு மதிப்பீட்டில் சிப்காட் வளாகத்தில் உள்ள 36 ஏக்கர் நிலம் ரூ.5,40,00,000/- (ஐந்து கோடியே நாற்பது இலட்சம்) என சொல்கிறது. ஆனால் சந்தை மதிப்பில் இந்த 36 ஏக்கர் நிலம் ரூ.15,00,00,000/- (பதினைந்து கோடி) விலை போகிறது. பல கோடி மதிப்புள்ள இந்த நிலத்திற்கு அமெரிக்கா பெப்சி குளிர்பான நிறுவனம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ1.00 (ஒன்று) வீதம் ஆண்டுக்கு ரூ.36/=- (முப்பத்தி ஆறு ரூபாய் அரசுக்கு) என நிலத்திற்காக 98 ஆண்டுகள் குத்தகை செலுத்த வேண்டும் என்றும், 99ஆம் ஆண்டில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ2.00 (இரண்டு) வீதம் ஆண்டுக்கு 72/= (எழுபத்தி இரண்டு ரூபாய்) குத்தகை 36 ஏக்கருக்கு செலுத்த வேண்டும் என பெப்சி நிறுவனத்துடன் தமிழக அரசு ‘மாபெரும்’ ஒப்பந்தம் போட்டுள்ளது.

பதினைந்து கோடி ருபாய் சந்தை மதிப்புள்ள நிலத்திற்கு 100 ஆண்டுகளுக்கு சேர்ந்து அமெரிக்கா பெப்சி நிறுவனம் செலுத்தும் குத்தகைத் தொகை என்பது வெறும் ரூ.3600/=(மூவாயிரத்து அறுநூறு மட்டும்) மட்டுமே ஆகும்.

தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு பல்வேறு நீரேற்றும் பம்புகள் மூலம்கொண்டு வரப்படும் தண்ணீர், நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமையும் பெப்சி குளிர்பான ஆலைக்கு வழங்கப்படும். தினமும் 15 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் வழங்க அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது படிப்படியாக ஒரு கோடி லிட்டர் வரை கூட அதிகரிக்கும் நிலை உள்ளது. இதனால் வாரம் ஒரு நாள் மட்டுமே குடிதண்ணீர் பெற்று வரும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உட்பட மாநகராட்சிப் பகுதிகளும், தாமிரபரணி ஆற்றின் மூலம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு கிடைத்து வரும் குடிநீரும், பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. பெப்சி குளிர்பான நிறுவனத்திற்கு 1000 லிட்டர் நீர் ரூ.37/= ரூபாய்க்கு அரசால் வழங்கப்பட ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இவர்கள் ஒரு லிட்டர் அக்வாபினா குடிநீர் பாட்டிலை ரூ.20/= ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளனர். ஒரு லிட்டர் குளிர்பானம் ரூ.60/= ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளனர்.

வரையறை அற்ற இந்த நீர்வளக் கொள்ளையால் தாமிரபரணி மூலம் நெல்லை-தூத்துக்குடியில் விவசாயம் நடந்து வரும் 86,000 ஏக்கர் விவசாய நிலமும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் நடக்கும் மணல்கொள்ளையால் நீர்பிடிப்பு பகுதிகள் குறைந்து போய் வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து போன நிலையில் பெப்சி போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆற்று நீரை தினமும் பல லட்சம் உறிஞ்சினால் தாமிரபரணியை நம்பி வாழும் விவசாயிகளின் எதிர்காலம் அழிந்தே போய் விடும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர், விவசாயத் தேவைக்குமான ஒரே ஆதாரமாக தாமிரபரணி நதி மட்டுமே உள்ளது. இந்த ஆற்றை நம்பித்தான் ஆண்டுக்கு இரண்டு போகம் நெல்சாகுபடியும் மற்ற உணவு உற்பத்தியும் இங்கு நடக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பொய்த்து வரும் மழையினால் தாமிரபரணி ஆற்றின் நீர்வரத்தும் குறைந்து வருகிறது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் தேதியன்று கார் நெல் சாகுபடிக்கு ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் பல ஆண்டுகளாக ஜூன் மாதம் முடியும் தருவாயிலும் கூட தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை. இரண்டு மாவட்டங்களிலும் நடக்கவேண்டிய ஒரு லட்சம் ஏக்கர் பரப்பிலான நெல் சாகுபடி செய்யமுடியாமல் விவசாயிகள் கண்ணீரும் கம்பலையுமாக இருந்து வந்து உள்ளனர்.

உலக ரவுடியான அமெரிக்காவை யார் ஆளுவது எனத் தீர்மானிக்கும் வல்லமை வாய்ந்தது பெப்சி நிறுவனம். இந்த பெப்சி நிறுவனத்தின் முகவராக இருந்து நெல்லையில் குடிநீர்-குளிபானம் உற்பத்தி செய்யும் பணியைச் செய்வது ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பிரதிக்சா பிசுனசு சொலியூசன் என்ற ஆந்திர நிறுவனம் ஆகும். இதன் உரிமையாளர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ஆந்திரத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடும் கிருட்டிணா, கோதாவரி போன்ற ஆற்றின் கரைகளில் இந்த ஆலையைத் தொடங்காமல், எப்போதும் தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் தமிழகத்தில் இந்த ஆலையைத் துவங்கும் மர்மம் என்ன எனப் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே நெல்லை கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் பல்வேறு தொழிற்சாலைகளால் கடந்த 10 ஆண்டுகளாக சிப்காட் வளாகத்தைச் சுற்றியுள்ள அனைத்து நீர்நிலைகளும் நஞ்சாக மாறிப் போய் வருகின்றன. மேலும் நிலத்தடிநீர், கிணறு, குளங்கள் என அனைத்தும் விசமாக மாறி எதற்கும் பயன்படாமல் செத்துப்போய் கொண்டு உள்ளன. மேலும் இப்பகுதி முழுக்க காற்றும், மண்ணும் மாசுபட்டுள்ளது.

நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் வளாக தொழிற்சாலைகள் அனைத்தும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்துதான் வெளியேற்றுகிறோம் என சொல்லிக்கொண்டு இருந்தாலும் இதுவரை அவ்வாறு செயல்பட்டதே இல்லை என்பதுதான் எதார்த்தம்

நெல்லை சிப்காட் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அமெரிக்காவின் பெப்சி ஆலைக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளதை எதிர்த்து, கடந்த சில மாதமாக கவன ஈர்ப்பாக பல்வேறு அமைப்புகள் ஆட்சியரிடம் மனு கொடுப்பது உட்பட பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

police attack 600

நெல்லை சிப்காட் பகுதியில் அமையும் அமெரிக்காவின் பெப்சி ஆலைக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கவும், சிப்காட் பகுதியில் தண்ணீரை மூலப்பொருளாக வைத்து ஆலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது தவறானது என்றும், அமெரிக்காவின் பெப்சி நிவனத்திற்கு அரசு நிலம் அளிக்க அனுமதித்ததில் உள்ள விதிமீறல்கள், அரசின் சட்ட விரோத செயல்பாடுகள் பற்றியும், தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பல விபரம் பெற்று தாமிரபரணி ஆற்றில் நடக்கும் நீர்வளக் கொள்ளையை தடுக்கக் கோரி தொடர்ந்து பல்வேறு அமைப்பினரின் கவனத்திற்கு தொடர்ந்து எடுத்து சென்றோம்.

தமிழ்நாடு சுற்க்ச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் விரிவாக தகவல்கள் திரட்டியும், இதை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் குறித்தும், பல ஆவணங்களை தயார் செய்து பல்வேறு அமைப்புகளுக்கு கொடுத்து வலியுறுத்தி வருகிறோம், நீர்வளக் கொள்ளையை எதிர்த்து நடைபெற்ற பல்வேறு போராட்ட அனுபவங்களை, (குறிப்பாக ஈரோடு பெருந்துறை கோக் ஆலை, சிவகங்கை படமாத்தூர் கோக் ஆலை, கேரளா பிளாச்சிமாடா கோக் ஆலை, திருச்சி சூரியூர் பெப்சி ஆலை எதிரான போராட்ட அனுபவங்களை) தொகுத்தும் கொடுத்தோம். பல்வேறு அமைப்புகள் முன்னெடுத்து வருகின்ற அமெரிக்காவின் பெப்சி ஆலைக்கு எதிரான போராட்டத்திலும் பங்கேற்றும் வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த 10.10.2015 சனிக்கிழமை அன்று தாமிரபரணியை உறிஞ்ச வரும் பெப்சி ஆலையை மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில், அவர்களின் அழைப்பின் பேரில் நானும் சென்று பங்கு கொண்டேன்.

நெல்லை –மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கங்கைகொண்டான் சிப்காட் வளாக முகப்பின் முன்பு இருந்து பெப்சி ஆலையை மூட வலியுறுத்தி சுமார் 200 பேர் திரண்டு பெப்சி ஆலை கட்டும் இடம் நோக்கி முழக்கமிட்டு பேரணியாக புறப்பட்டோம்.

அப்போது எவ்வித முன் அறிவிப்பும் இன்றி கங்கைகொண்டான் காவல் நிலைய ஆய்வாளர் சிவ.முருகன் என்பவர், போரட்டக்காரர்களான எங்களைப் பார்த்து இதற்கு மேல் சென்றால் தடியால் அடிப்பேன், தடியால் அடிப்பேன் என ரவுடித்தனமாக மிரட்டலாகப் பேசினார். உடனே நானும், உடனிருந்த பெண்கள் உட்பட தோழர்கள் பலரும் ‘சரி நீ சொல்வது போல் எங்களை அடி, பார்க்கலாம்’ எனக் கூறி சாலையில் அமர்ந்து கொண்டோம்.

சாலையில் இதுவரைதான் போராட்டக்காரர்கள் வர வேண்டும் எனக் கூறி தடுப்பு வைத்து இருந்தாலோ, அல்லது கயிறு கட்டி தடுப்பு ஏற்பாடு செய்து இருந்தாலோ, அல்லது கையில் சங்கிலி போட்டு தடை ஏற்படுத்தி இருந்தாலோ, அதை எல்லாம் போராட்டக்காரர்கள் உடைத்து முன்னேறியும், அல்லது ஆலைக்குள் அத்துமீறி நுழைந்து இருந்தால் கூட அடிப்பேன் என்று சொல்லவோ அல்லது அடிக்கவோ காவல்துறை அதிகாரிகளுக்கு எவ்வித உரிமையும் இல்லை. கைது செய்யவும், வழக்குப் போடவும் மட்டும்தான் உரிமை உண்டே ஒழிய எக்காரணம் கொண்டும் அடிக்க உரிமை இல்லை. ஆனால் சட்டத்தைப் பாதுகாக்கிறேன், சட்டத்தை அமல்படுத்துகிறேன் என்று சொல்லும் காவல்துறை அதிகாரிகள்தான் தொடர்ந்து சட்டவிரோதமாக நடந்து வருகின்றனர் என்பது எதார்த்தமான நடைமுறையாக இருக்கிறது.

நாங்கள் போராட்டத்தில் அத்துமீறாமல் இருந்த நிலையில், சட்டப்படி முறையாக சென்ற தோழர்கள் பலரையும் அடிப்பேன் என காவல்துறை அதிகாரிகள் மிரட்டுவது என்பது, அதிகாரத்துவ அத்துமீறல் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே ஒன்று அந்த ரவுடி ஆய்வாளர் சிவ.முருகன் ‘எங்களை இங்கு வந்து எங்களை அடிக்க வேண்டும். இல்லையெனில் முறையற்ற வகையில் எங்களை மிரட்டியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனக் கோரி அனைவரும் அங்கேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தோம். அதன் பின்பு அங்கு பல்வேறு காவல்துறை அதிகாரிகள் வந்து அவருக்காக தாங்கள் மன்னிப்பு கேட்பதாக கோரி சமாதானப்படுத்தியதால் அவரைக் கண்டித்து நடத்திய போராட்டத்தைக் கைவிட்டு முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்தோம். பின்பு நாங்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டோம்.

ஆனால் நேற்று (27-10-15) கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து பெப்சி ஆலையை மூட வலியுறுத்தி போராடிய போது, அவர்களை கைது செய்து அழைத்துச் செல்ல போதுமான வாகனங்களை ஏற்பாடு செய்யாமல், போராட்டக்காரர்களை கைது செய்யாமல் இருந்து கொண்டு, கைது எண்ணிக்கையை குறைத்துக் காட்ட காவல்துறை முயற்சித்தது. ஆனால் போராட்டக்காரர்கள் காவல்துறையின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு கலைந்து செல்லாமல் நெல்லை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எங்களையும் கைது செய்து அழைத்து செல்லுங்கள் எனக் கூறி அமர்ந்தனர்.

அப்போது, கடந்த 10-10-2015 அன்று எங்களை தடியால் அடிப்பேன் எனக் கூறி மிரட்டிய கங்கைகொண்டான் ரவுடி ஆய்வாளர் சிவ.முருகன் அவர்கள் தலைமையில் காவல்துறை ரவுடிகள் சாலையில் அமர்ந்து இருந்தவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் இறங்கினர். சாலையில் அமர்ந்தவர்களை அழைத்துக் கொண்டு இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவேரி உட்பட பலரது மண்டையைக் குறி வைத்து காவல்துறை தாக்கியது. சட்டப்படி தடியடி நடத்தினால் கூட முழங்காலுக்கு கீழ்தான் அடிக்க வேண்டும். ஆனால் தலையைக் குறிவைத்து அடித்தது என்பது கொலை முயற்சி போன்றதுதான்.

ஏற்கனவே இந்த ஆண்டு முன்பகுதியில், பெருந்துறை- சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து தரப்பையும் சேர்ந்த இரண்டு லட்சம் மக்களும், அனைத்து இயக்கங்களும் பெருந்துறை- சிப்காட்டில் அமெரிக்காவின் கொக்கோ- ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், காவல்துறையை வைத்துக் கொண்டு அரசு ஒரு [30(2) சட்டம் அமுலில் உள்ளது] சட்ட விதியைக் காட்டி, பேரணி உட்பட எந்த போராட்டமும் நடத்தக் கூடாது என அனுமதி மறுத்தது என்பதும், கடையடைப்பு போராட்டத்தை காவல்துறையை வைத்து சீர்குலைக்க முயற்சித்தது, போராட்டக் குழுத்தலைவர்களை காவல்துறையை வைத்து மிரட்டியது, போராட்டக் குழுத் தலைவர்களின் நிறுவனங்களுக்கு காவல்துறையை வைத்து நெருக்கடி கொடுத்தது, தொடர்ந்து
போராட்டத்தில் உறுதியாக இருந்த ஊராட்சி மன்றத்தலைவரை கொலைமுயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து மக்கள் போராட்டத்தால் வேறுவழியின்றி அவரை வழக்கை ரத்து செய்து சிறையில் இருந்து விடுவித்தது, பெருந்துறை- அமெரிக்காவின் கொக்கோ- ஆலைக்கு எதிர்ப்பு போரட்டம் அனைத்திற்கும் உயர்நீதிமன்றம் போய் அனுமதி பெற்று நடத்தியதும் என்பதுதான் வரலாறு. இறுதியில் மக்களின் உறுதியான போராட்டத்தின் விளைவால் அமெரிக்காவின் கொக்கோ- ஆலைக்கு கொடுத்த அனுமதியை தமிழக அரசு ரத்து செய்தது.

police attack 330கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-2014 ஆம் தேதி தொடங்கி, கிட்டத்தட்ட இருவார காலம் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதைக் காரணம் காட்டி, அ.இ.அ.தி.மு.க.வினரும்., ஆட்சி அதிகாரத்தில் உள்ள எண்ணற்ற அ.இ.அ.தி.மு.க. உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் செய்த சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளை, அடாவடிகளை நாடே அறியும். அதை அனைத்தையும் இதே காவல்துறை வேடிக்கை பார்த்த்து மட்டும் அல்ல, அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்தனர்.

அப்போது எல்லாம் கெட்டுப் போகாத சட்டம்- ஒழுங்கு, மக்கள் தங்கள் வாழ்வாதாரம் அழிவதை எதிர்த்து, பெப்சியை எதிர்த்து அமைதியாக ஒரு போராட்டம் நடத்தினால் கெட்டு விடும் என காவல்துறையை வைத்து போராட்டக்காரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது என்பது மிகவும் வெட்கக்கேடானது ஆகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தொடர்ந்து இது போல் நாசகார பெப்சி, கோக் ஆலைக்கு எதிரான போரட்டங்களை காவல்துறையை வைத்து தமிழக அரசு நசுக்க முயற்சிப்பது என்பது மக்கள் இதை எதிர்த்த போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவிடக் கூடாது, போராடினால் காவல்துறை தாக்கும்- நெருக்கடி கொடுக்கும் என அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு தந்திரமாகும்.

தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்டு, முழுக்க முழுக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக நிற்கும் தமிழக அரசின் இந்த கொடூர நடவடிக்கை என்பது, மக்களின் போராட்ட உணர்வை நசுக்கும், ஜனநாயக விரோதமான அப்பட்டமான பாசிச நடவடிக்கை ஆகும்.

மேலும் பெருந்துறை சிப்காட்டில் அமைய இருந்த கொக்கோ-கோலா ஆலைக்கு அனுமதியை ரத்து செய்த தமிழக அரசு, அதே காலத்தில் போடப்பட்ட நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் பெப்சி ஆலை பற்றி எதுவும் தெரிவிக்காமல் இருப்பதும், நெல்லை பெப்சி ஆலை அனுமதியை ரத்து செய்யாமல் இருப்பதும்- பெப்சி ஆலையை எதிர்த்து போராடுபவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவது என்பதும் பெப்சி ஆலைக்கு முழுக்க, முழுக்க துணை நிற்கிறது தமிழக அரசு என்பதையே காட்டுகிறது.

தமிழக அரசு மீத்தேன் திட்டம் முதல் கொக்கோ-கோலா, பெப்சி, அணு உலை திட்டம், நியூட்ரினோ திட்டம், பல்வேறு அனல்மின் நிலையத் திட்டங்கள், கடலூர் சைமா போன்ற சாயப்பட்டறைத் திட்டங்கள் என ஒவ்வொன்றிலும் தமிழ்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பதும், சிலவற்றில் திட்டங்களை எதிர்ப்பது போல் (உம்: மீத்தேன் திட்டம்) பொய்யாக காட்டிக் கொண்டே அந்த திட்டங்களை எதிர்த்துப் போராடும் மக்கள் மீது தொடர்ந்து வழக்கு போட்டு மறைமுகமாக மிரட்டுவது என்பதும் தமிழக அரசின் செயல்பாடாக உள்ளது.

இந்த அரசு தமிழக மக்களுக்கு என இல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே உள்ளது என்பது மீண்டும், மீண்டும் அம்பலமாகி வருகிறது. தமிழகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட மாநாடு நடத்துவதும், அன்னிய மூலதனம் பலலட்சம் கோடி இங்கு வருவது என்பதும் நாடு மீண்டும் வெள்ளையனை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது என்பதை உணர்த்துகிறது.

இந்த பெப்சி ஆலையால் மக்களுக்கோ, அரசுக்கோ எவ்விதப் பயனும் இல்லை.
தமிழக அரசின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை ஜனநாயக உணர்வு கொண்ட ஒவ்வொருவரும் எதிர்க்க வேண்டியது உடனடி அவசர, அவசிய கடமையாகும்.

* காவல்துறையின் அடக்குமுறையை முறியடிப்போம்!

* அமெரிக்காவின் கொலைகார பெப்சி ஆலையை விரட்டியடிப்போம்!!!

* அமெரிக்காவின் பெப்சி ஆலையை எதிர்த்து போராடும் மக்களுக்கும், அமைப்புகளுக்கும் துணை நிற்போம்!
* போராட்டக்காரர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய கங்கைகொண்டான் ரவுடி ஆய்வாளர் சிவ.முருகன் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடு!

* நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் உடனே கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்து!!

* தாய்மண்ணை பாதுகாப்போம்! தாமிரபரணியை பாதுகாப்போம்!!!

– முகிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here