அரசியலமைப்பு, சில அடிப்படைகள்.

0
7

 – ழமீர் –

இலங்கையின் அரசியலமைப்பு நகல் வரைவு முன்வைக்கப்படவுள்ளது. அது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. நகல் அரசிலலமைப்பைப் புரிந்துகொள்ள முன்னர் விளங்கி வைத்திருக்க வேண்டிய அரசியலமைப்பு பற்றிய சில அடிப்படைகளும் தற்போதைய அரசியலமைப்பின் கோளாறுகளும் இங்கு விவரிக்கப்படுகின்றன.  சட்டத்துறையில் உள்ள சொற்களைத் தவிர்த்து அனைவருக்கும் விளங்கும் பொது மொழியில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

12ம் நூற்றாண்டு வரை இருந்த ஐரோப்பிய மன்னர்கள் “சர்வ வல்லமை” பொருந்தியவர்களாக இருந்தார்கள். அவர்கள் எந்த சட்டத்துக்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்கவில்லை. சிலுவை யுத்தங்களின்போது கண்ட நாகரிகமடைந்ந உலகு ஐரோப்பியர்களை நல்லாட்சிக்காக போராடத் தூண்டியது. 1215 இல் ஆங்கிலேய மன்னன் ஜோன் “மக்னா கார்ட்டா”வில் கையொப்பமிட நிர்ப்பந்திக்கப்பட்டான். ஹேபியஸ் கோபஸ் (habeas corpus) என்ற (இன்று வரை நடைமுறையில் உள்ள) சட்டத்துக்கு மன்னன் கட்டுப்படவேண்டிய தேவை ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக நடைமுறைக்கு வந்த  சீர்திருத்தங்கள் ஊடாக ஆட்சியாளனின் எல்லையற்ற அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டது. ஆக, ஜனநாயக சீர்திருத்தங்களின் இறுதி இலக்கே ஆட்சியாளனின் அதிகாரத்தை மட்டுப்படுத்தி நல்லாட்சியை வழங்குவது ஆகும்.

நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்காக ஆட்சியின் மூன்று கூறுகளும் ஒரே அதிகார மையத்தில் குவிவதைத் தடுப்பது ஒரு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது. அந்த மூன்று கூறுகளும்

 1. நிறைவேற்று அதிகாரம்
 2. சட்டவாக்கம்
 3. நீதி

என்பனவாகும். இந்த மூன்றும், ஒன்று மற்றொன்றின்மீது அதிகாரம் செலுத்த முடியாதவாறு இருத்தல் வேண்டும். இது “வலு வேறாக்கம்” எனப்படும். வலு வேறாக்கம் அதிகரிக்கும்போது ஜனநாயகத்தன்மை அதிகரிக்கும்.

நிறைவேற்று அதிகாரம்

நாட்டை நேரடியாக நிர்வகிப்பதை இது குறிக்கின்றது. அமைச்சரவையிடமும் அதன் தலைவரிடமும் இப்பொறுப்பு ஒப்படைக்கப்படும்.

சட்டவாக்கம்

நாட்டை நிர்வகிப்பதற்குத் தேவையான சட்டங்கள், கொள்கைகளை வகுத்தலையும், அனைத்துவிதமான நிதிக்கையாளுகைகள் பற்றி முடிவெடுத்தலையும் இது குறிக்கின்றது. இப்பொறுப்பு பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கப்படும்.

நீதி

சட்டரீதியான பிணக்குகளுக்கு தீர்வு வழங்குவதையும் சட்டம் மீறப்படும்போது தண்டனை விதிப்பதையும் இது குறிக்கும். இப்பொறுப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படும்.

நிறைவேற்று அதிகாரத்தையும் சட்டவாக்கத்தையும் சமநிலையில் வைத்திருப்பதற்கு மூன்று வேறுபட்ட ஆட்சி முறைகள் நடைமுறையில் உள்ளன.

 1. பாராளுமன்ற ஆட்சி முறை
 2. ஜனாதிபதி ஆட்சி முறை
 3. கலப்பு ஆட்சி முறை

பாராளுமன்ற ஆட்சி முறை

பாராளுமன்றம் ஒன்றுகூடி தமக்குள் ஒருவரை (பிரதமர்) தெரிவு செய்வார்கள். அவர், நிறைவேற்று அதிகாரத்தின் (அதாவது அமைச்சரவையின்) தலைவராக இருப்பார். பாராளுமன்றத்தில் இருந்து ஏனைய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். பாராளுமன்றக் கூட்டங்களுக்கு முழு அமைச்சரவையும் கலந்துகொள்ளும். பாராளுமன்றம் இவர்களது ஆட்சியை கேள்விகேட்கும். இவ்வாட்சிமுறை பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

ஜனாதிபதி ஆட்சி முறை

பாராளுமன்றத்திற்கு வெளியில் உள்ள ஒருவரை மக்கள் தெரிவுசெய்து (ஜனாதிபதி) நிறைவேற்று அதிகாரத்தின் தலைவராக நியமிப்பார்கள். அவர், பாராளுமன்றத்திற்கு வெளியில் உள்ள சிலரை அமைச்சர்களாக நியமிப்பார். தேவைப்படும்போது பாராளுமன்றம் அமைச்சர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரிக்கும். இவ்வாட்சிமுறை அமேரிக்காவில் நடைமுறையில் உள்ளது.

கலப்பு ஆட்சி முறை

பாராளுமன்றத்திற்கு வெளியில் உள்ள ஒருவரை மக்கள் தெரிவுசெய்து (ஜனாதிபதி) நிறைவேற்று அதிகாரத்தின் தலைவராக நியமிப்பார்கள். அவர், பாராளுமன்றத்தில் உள்ள சிலரை அமைச்சர்களாக நியமிப்பார். பாராளுமன்றக் கூட்டங்களுக்கு ஜனாதிபதி தவிர்ந்த அமைச்சரவை கலந்துகொள்ளும். பாராளுமன்றம் இவர்களது ஆட்சியை கேள்விகேட்கும். தேவைப்படும்போது பாராளுமன்றம் ஜனாதிபதியை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரிக்கும். இவ்வாட்சிமுறை இலங்கையில் நடைமுறையில் உள்ளது.

இலங்கையின் தற்போதைய யாப்பில் (1978ம் ஆண்டு குடியரசு யாப்பு) வலுச்சமநிலை பேணப்படவில்லை. கடந்த 39 வருடங்களாக இதன் பின்விளைவுகளையே அனுபவித்து வருகிறோம்.

தற்போதைய இலங்கை யாப்பின் கோளாறுகள்

நிறைவேற்று அதிகாரம்

 1. ஜனாதிபதியை பாராளுமன்றத்திற்கு அழைத்து கேள்வி கேட்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இல்லை.
 2. பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. (19ம் திருத்தத்தின்மூலம் இவ்வதிகாரத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன)
 3. அமைச்சர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை. 225 பாராளுமன்ற உறுப்பினர்களுள் 113 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படால் நேரடியாக பாராளுமன்றத்தை (அதாவது சட்டவாக்க நிறுவனத்தை) மிகைக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்தின் கையில் கிடைத்துவிடும்.
 4. ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடரவேண்டும் எனில் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் நம்பிக்கையில்லாப் பிரேரணை அங்கீகரிக்கப்படவேண்டும். (பாராளுமன்றம் ஜனாதிபதியால் கட்டுப்படுத்தப்படும் சூழலில் இது சாத்தியமற்றது.)
 5. மேல் நீதிமன்றங்களின் (உயர் நீதிமன்றங்கள், மேன்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம்) நீதிபதிகளை ஜனாதிபதியே தன் விருப்பப்படி நியமிப்பார்.
 6. நிறைவேற்று அதிகாரத்தின் சட்ட ஆலோசகராகவும் (legal adviser of the executive branch) அரசாங்கத்தின் பிரதம வழக்குத் தொடுனராகவும் (chief prosecutor) சட்டமா அதிபர் (Attorney General) தொழிற்படுவார். அமைச்சரவை தவறிழைத்தால் அவர் வழக்குத் தொடரும் கடமை அவர்மீது சுமத்தப்பட்டுள்ள அதேநேரம், வழக்கில் அமைச்சரவைக்கு சட்ட உதவி வழங்கும் பணியும் அவர்மீதே சுமத்தப்பட்டுள்ளது. எனவே குற்றமிழைத்த அமைச்சர்கள் மீது அவர் வழக்குத் தாக்கல் செய்ய மாட்டார்.

இப்படியான கோளாறுகள் நிறைவேற்று அதிகாரத்திற்கு அனாவசியமான அதிகாரங்களை வழங்கும். ஏனைய இரண்டு கூறுகளையும் நிறைவேற்று அதிகாரம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். மொத்த முழு யாப்பும் ஜனநாயகம் அற்றதாக மாறும்.

சட்டவாக்கம்

 1. அபிவிருத்திப் பணிகளுக்காக (நிறைவேற்று அதிகாரத்திற்கு உரிய பணி) பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குத் தாமே நிதி ஒதுக்கிக் கொள்கின்றனர்.
 2. நிதிபற்றிய முடிவை எடுப்பவர்கள் கையில் நிதியைக் கொடுப்பது நேர்மையற்ற செயற்பாடுகளைத் தூண்டும்.
 3. அடுத்து வரும் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கும்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் கொள்கைகளுக்காக வாக்களிக்காமல், அவர்களது அபிவிருத்திப் பணிகளுக்காக வாக்களிப்பார்கள். இது பிழையான கொள்கைகளை உடைய மனிதர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட வழிவகுக்கும்.
 4. முறையற்ற நடத்தைகளில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவியை ரத்து செய்வதற்கான முறைமைகள் இல்லை.

நீதி

முறையற்ற நடத்தைகளில் ஈடுபடும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பதவியை ரத்து செய்வதற்கான முறைமைகள் இல்லை. (ஷிரானி பண்டாரநாயக்கவின் பதவி ரத்து செய்யப்பட்ட முறைமை பிழையானது)

இந்தக் கோளாறுகளைப் புரிந்துகொள்ளாதவர்களே, எல்லாத் தவறுகளையும் ஜனாதிபதி முறைமையின் தவறுகளாகவும் விகிதாசாரத் தேர்தல் முறையின் தவறுகளாகவும் சுருக்கிப் பார்க்கின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here