அரசியலில் மூன்றாம் சக்தியின் தோற்றமும் வடிவமும்

1
4

 – அருவியெம் –

இலங்கை அரசியலில் ஜனநாயகத்திற்கும் இலங்கை அரசியலுக்குமுள்ள தொடர்புகள் குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன. ஜனநாயக சோசலிஸக் குடியரசு என யாப்பில் குறிப்பிடுகின்ற இலங்கை, ஜனநாயகப் பண்புகளை எவ்வாறு பின்பற்றுகிறது. ஏனெனில், ஜனநாயகத்திற்கு பெரும்பான்மையின் கருத்தே தீர்மானிக்கும் சக்தி என்ற வியாக்கியானமும் உண்டு.

ஆனாலும், சிறுபான்மையின் நியாயமான கருத்துக்களை உள்ளடக்கி, பெரும்பான்மையாக எடுக்கப்படுகின்ற முடிவுகள் அந்த ஜனநாயக சக்திக்கு அல்லது பலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமையும். அத்தகைய செயற்பாடுகளின் மூலம் ஒரு ஜனநாயக அரசு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், இலங்கையின் ஜனநாயகம் அப்படியல்ல, தலைகீழானது என்பதை தற்போது அரசியல் அதிகாரத்துக்காக எழுந்துள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள் வெளிப்படுத்தி வருகின்றன. காலா காலமாக இதுவே சிறுபான்மையினரின் நிலைப்பாடாகும். சிறுபான்மையினரோடு எந்த கலந்தாலோசனையுமின்றி பெரும்பான்மை அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளினால்தான் இந்நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஏற்பட்ட யுத்தத்தினால் சீரழிந்துள்ளது.

அதே வழிமுறையே இன்றைய பாராளுமன்றத்திலும் நடைபெறுகிறது. பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணி நிராகரிக்கப்பட்டு, சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராகிய மகிந்த ராஜபக்ஷவை நிறைவேற்று அதிகார பலத்தைப் பயன்படுத்தி, ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்துள்ளார்.

பெரும்பான்மை பலத்தைக் கொண்டு, சிறுபான்மைப் பலத்தினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பல தடவைகள் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் வேடிக்கை சிறுபான்மை பலத்தைக் கொண்ட அரசாங்கமே இன்னும் ஆட்சிக்குப் பொறுப்பாக இருக்கின்றது.

இதனால், இலங்கை அரசாங்கம் ஆட்டம் காணுகின்ற நிலையில் இருக்கின்றது. ஏற்கனவே, ஜனாதிபதி பாராளுமன்றத் தைக் கலைத்துவிட்டார். அது ஜனநாயகத் திற்கு முரணான செயல் என்பதால், ஜனநாயகத்தின் காவலாளிகள் ஜனாதிபதியின் இச்செயற்பாட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியின் இச்செயற்பாட்டுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையோடு ஒரு சக்தியும், ஆட்சி அதிகாரத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இன்னுமொரு சக்தியுமாக ஸ்திர மற்ற அரசாங்கம் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது.

எனவே, ஸ்திரமற்ற இப்பாராளுமன்றம் எப்போதும் கலையலாம், ஆகவே, நாட்டைச் சீரழித்து சுயநல அரசியல் செய்யும் ஆட்சியாளர்களை ஓரங்கட்டி, நாடு குறித்து சிந்தித்துச் செயற்படக் கூடிய ஒரு சக்தி ஒன்று உருவாக வேண்டும் என பலரும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாற்று சக்தி அரசியலில் முஸ்லிம்கள்

இந்நிலையில் மூன்றாம் சக்தி குறித்து பேசப்படுகின்றது. இதில் இலங்கை சிறுபான்மை முஸ்லிம்களின் நிலைப்பாடு எவ்வாறு அமையப் போகிறது? ஏனெனில், இன்றுவரை இலங்கை முஸ்லிம் அரசியல் தங்களால் கையாளக்கூடிய ஒரே அரசியல் தீர்வாக பிரதிநிதித்துவ ஜனநாயக முறையைத்தான் பின்பற்றி வந்துள்ளார்கள். இதன் மூலமே தங்களது பேரம் பேசும் சக்தியைப் பலப்படுத்தி, தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். இதனை மேலும் அதிகரிப்பதன் மூலமே முஸ்லிம்களின் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிச் செல்லலாம் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், இப்போது அரசியலிலுள்ள முஸ்லிம் சக்திகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகள் முஸ்லிம்களுக்கு மத்தியில் தூர்ந்துபோன  சக்திகளாகவே நோக்கப்படுகின்றன. இவ் வாறு தூர்ந்து போன சக்திகளை நீக்கிவிட்டு இலங்கை தேசத்தை நேசிக்கக் கூடிய, அறிவுஜீவிகளான, நேர்மையான புதிய சக்திகளை முஸ்லிம்கள் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது என்றும்  சில அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவ்வாறான ஒரு புதிய தலைமையாக மேலெழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு புதிய கட்சியாகவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விளங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புதிய கட்சியாக அறிவித்த சில நாட்களிலேயே உள்ளூராட்சித் தேர்தல் நடாத்தப்பட்டது. கட்சியாக அறிவிக்கப்பட்டு சுமார் ஒரு வருடத்திற்குள் நாட்டின் தலைநகர் கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் போட்டியிட்டு 18 உள்ளூராட்சி உறுப்பினர்களைப் பெற்றுள்ளார்கள்.

10 வருடங்களாக குறிப்பிட்ட ஒரு பகுதியில் சுயேட்சைக் குழுவாக இருந்த ஒரு குழு கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் அவசர அவசரமாகக் கட்டியெழுப்பி 20 தொகுதிகளில் போட்டியிட்டு 18 உள்ளூராட்சி உறுப்பி னர்களைப் பெறுவது மிகப் பெரிய சவாலாகும். ஏனெனில், ஒரு புதிய கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைக் கண்டுபிடித்தல் என்பதே மிகப் பெரிய சவாலாகும். அதனையும் அடையாளம் கண்டு 18 உறுப்பினர்களையும் பெற்றுள்ளார்கள் என்பது மிகப் பெரிய வெற்றியாகும்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இவ்வெற்றி துரித வளர்ச்சியை அழகாக எடுத்துக் காட்டுகிறது. இந்நிலையில் தற்போதைய அரசியல் நெருக்கடி சூழ்நிலை ஒரு பாராளுமன்ற தேர்தல் ஒன்றை ஏற்படுத்தினால் இக்கட்சியினரின் அரசி யல் வியூகம் எவ்வாறு அமையப் போகிறது என்பது மிகவும் முக்கியமாகும்.

இரு கட்சி அரசியல் முறைமையைக் கொண்ட இலங்கையில், தற்போது பல கட்சி அரசியல் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போதைய அரசியல் நெருக்கடியான சூழ்நிலை இலங்கை அரசியலில் பலமான மாற்று அணி ஒன்று உருவாகுவது குறித்து பலராலும் பேசப்படுகின்றது.

அரசியலில் கூட்டுக் கட்சி  அணிகள்

ஐக்கிய தேசியக் கட்சியை மையமாக வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உருமய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் சில சிறிய கட்சிகள் ஒரு அணியில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல், இன்னுமொரு பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜ பக்ஷ அவர்களால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்று பலமான கட்சியாக உதயமாகியுள்ளது. இவர்களோடு  ஒரு சில அரசியல் பிரமுகர்களும் இணை ந்து ஒரு அணியாகக் களமிறங்க இருக்கின்றனர்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும். அவர்களோடு அணி சேர்ந்துள்ள ஏனைய சில பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு குழுவாக இயங்கி வருகின்றனர். அவர்களும் எதிர்வரக்கூடிய தேர்தல்களை சந்திக்கவுள்ளனர்.

இவற்றுக்கு அப்பால் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் எந்த அணியிலும் கலந்து கொள்வதில்லை எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழ் அரசியல் பல கட்சிகளாகப் பரிணமித்து செயற்படுகின்றது. அவற்றில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரனின் தலைமையிலான புதிய கட்சி, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் கட்சி, கஜேந்திர குமாரின் கட்சி இவற் றோடு பல சிறிய கட்சிகளும் உருவாகியுள்ளன.

இவைகளுக்கு அப்பால் எல்லா சமூகத்தவர்களையும் உள்ளடக்கி சிவில் சமூக செயற்பாட்டில் ஈடுபட்ட கல்வியலாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டில் தனிநபர்களாக ஈடுபட்டு வருகின்ற சிலரும் ஒன்றிணைந்து ஓரணியாக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க இருக்கின்றனர்.

இவற்றில், முஸ்லிம் அரசியலிலும் தேசிய அரசியலிலும் மூன்றாம் சக்தியாக பரிணமித்திருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எந்த அணியை முதன் மைப்படுத்தி செயற்படப் போகின்றது. அதன் அரசியல் பயணத்திற்கு இத்தேர்தல் எவ்வாறு வழிவகுக்கும். என்பது முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கின்ற பிரதான பேசு பொருளாக உதயமாகியுள்ளது.

அணிகளும் ஆட்சி அமைப்பும்

இவைகளை நோக்குகின்ற போது இலங்கை இரட்டை கட்சி ஆட்சி முறை யைக் கொண்ட நாடாகும். இங்கு ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்தி ரக் கட்சிதான் ஆட்சியமைத்து வந்துள்ளது. ஆனால், எதிர்வரும் காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தூர்ந்து போகும் நிலையில் இருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் இடத்தை ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன (மஹிந்த அணி) நிரப்பலாம் என பலராலும் எதிர்வு கூறப்படுகின்றது.

எனவே, எத்தனை கூட்டணிகள் அமைத்தாலும், இறுதியில் ஆட்சியமைப்பது இந்த இரண்டு கட்சிகளும்தான். இவற்றில் இரண்டு கட்சிகளுமே இலங்கை சிறுபான்மையினர் விவகாரத்தில் மாற்று சிந்தனையையே கொண்டுள்ளார்கள். இருந்தும் இறுதியில் இவர்களில் ஒருவ ரோடுதான் அனைத்து கட்சிகளும் பேரம் பேசி கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்கின்றன.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அமையப் போகின்ற பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன (மஹிந்த அணி) ஆட்சியமைக்கும் வாய்ப்புக்களே அதிகமாகக் காணப்படுகின்றன. இவைகளில் இந்த சிறிய அணியினர் யாரோடு கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைப்பார்கள்? என்பதே முக்கிய விடயமாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியோடு பயணிக்கின்றன. ஆனால், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, அமைச்சர் ஹிஸ் புல்லா, அமைச்சர் பைசல் முஸ்தபா மற்றும் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் மஹிந்த அணியிலே இருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியில் இணைந்து பயணிக்கலாம்.

இவற்றில், பொதுத் தேர்தலின் பின்னர் அமையப் போகின்ற பாராளுமன்றத்தில், தற்போது சுயமாக இயங்குகின்ற ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சுயமாக இயங்குமா அல்லது ஏதாவது ஒரு பக்கம் சாய்வார்களா? என்பது முக்கிய விடயமாகும். அதேநேரம், சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்ட சிலரும் அரசி யலில் தனிநபர்களாக செயற்படுகின்ற ஏனையோரும் இணைந்து ஒரு கூட்டணி அமைக்கப் போவதாக பேசப்படுகின்றது. இவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரண்டு அல்லது மூன்று ஆசனங்களைப் பெறுவார்களாயின். பாராளுமன்றத்தில் எந்த அணிக்கு ஆதரவாக செயற்படுவார்கள்? வாக்களிப்பார்கள்? அல்லது ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு எடுக்கின்ற நிலைப்பாட்டில் இருப்பார்களா? என்பது தெளிவில்லாமலே இருக்கின்றது.

இவைகளை ஒப்பிட்டு நோக்குகின்ற போது, எல்லாக் கட்சிகளும் கொள்கை களோடுதான் இருக்கின்றன. ஆனால், அவைகள் காலத்திற்குக் காலம் வெவ்வேறு பரிணாமம் எடுக்கின்றன. ஏனெனில், கொள்கைகளின் வெற்றி அதனை மக்கள் மயப்படுவதிலும் மக்கள் சக்தியாக மாற்றப்படுவதிலுமே தங்கி இருக்கின்றது. ஒரு கொள்கையை மக்கள் சக்தியாக மாற்றுவதற்கு தந்திரோபாயங்கள் தேவை. எல்லா வெற்றி பெற்ற தந்திரோபாயங்களும் கொள்கைகளின் பிரயோக வடிவங்களே.

தூய தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாது. தற்போது ஏற்பட்டுள்ள பண வீக்கத்திற்காக பணப் பெறுமதி அதிகரிப்பதற்காக அதை சேமித்து வைத்திருக்கலாம். ஆனால் வாழ்க்கைத் தேவைக்காகப் பயன்படுத்துவதற்கு நகைகளாக்குவதென்றால் குறிப்பிடத்தக்க அளவு செம்பைக் கலக்க வேண்டும். செம்பைக் கலந்தால் தான் தங்கத்தை நகையாக்கலாம். அதாவது வாழ்க்கைக்குத் தேவையான நிலைக்குக் கொண்டு வரலாம். அதில் தங்கத்தின் தூய்மை கெடாமல் செம்பைக் கலக்க வேண்டும்.

அப்படித்தான் ஒரு கொள்கையை செயலுருப்படுத்துவதற்கும் தந்திரோபாயங்கள் அவசியம். உலகில் தோன்றிய பெரும்பாலான அரசியற் கூட்டுக்கள் தந்திரோபாய ரீதியிலானவை. நிரந்தரமானவையல்ல. நிரந்தரமான கூட்டுக்கள் மிகவும் அரிது. கூட்டு என்றாலே அது ஒரு தந்திரம் தான். அதில் நெளிவு சுளிவு இருக்கும். விட்டுக்கொடுப்பு இருக்கும். நெகிழ்ச்சி இருக்கும்.

இவ் அரசியல் சூழ்நிலையில் புதிய அரசியல் கட்சியான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எந்த வழிமுறையைக் கடைபிடிக்கப் போகிறது? அதன் கூட்டு எவ்வாறு அமையப் போகிறது? எந்த அணியோடு இவர்கள் பயணிக்கப் போகிறார்கள்? என்பதும், அல்லது சுயதீனமாக தனித்து பயணிக்கப் போகின்றார்களா? என்பதும் முக்கிய கேள்விகளாகும்.

மேலும், அமையப் போகின்ற பாராளு மன்றத்தில் தனக்குக் கிடைக்கின்ற ஆசனத்தைக் கொண்டு அல்லது தான் இணைந்து பயணிக்கின்ற ஆசனத்தை எந்த கூட்டுக்கு ஒத்துழைக்கப் போகிறார்கள்? இவைகளுக்கு அப்பால் சுயாதீனமாக இலங்கைத் தேசத்தின் முக்கிய குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்கப் போகின்றார்களா? அல்லது அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, மௌனியாக அனைத்தையும் அவதானிக்கப் போகின்றார்களா? பொறுத்திருந்து அவதானிப்போம்.

1 COMMENT

  1. அமைச்சர் காதர் மஸ்தான் மகிந்த அணியில் பயனிப்பதாக பதிவிட்டுள்ளீகள் அது தவரு அவர் மைத்திரி அனியிலே இருக்கின்றார்
    தவரான செய்தியை திருத்திக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here