அறிஞர்கள் மீது அழுத்தங்கள் சிந்தனைப் பயங்கரவாதத்தின் அடையாளங்கள்

0
3
  • முஹம்மத் பகீஹுத்தீன்

இஸ்லாமிய சட்டப்பரப்பில் அத்து மீறுவதும் ஆக்கிரமிப்பு செய்வதும் அது எந்த வடிவத்தில் வந்தாலும் கருத்து வேறுபாடின்றி பாரிய குற்றச் செயல்களாகும். இஸ்லாம் அனைத்து வகையான வரம்புமீறல்களையும் ஹராமாக்கியுள்ளது.

ஒரு முஸ்லிம் தனது சகோதரனை அச்சுறுத்துவது அவனது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் முற்றுகையிடுவது, அழுத்தங்களை கொடுத்து கருத்துக்களை சொல்ல வைப்பது, அவனுக்கு தீங்கிழைப்பது என்பன சந்தேகமின்றி பகிரங்க அத்துமீறல் செயற்பாடாகும். இவை தண்டனைக்குரிய குற்றச் செயல்களாகும். அவ்வாறே இத்தகைய நடவடிக்கைகள் பெரும்பாவம் என்ற வட்டத்தில் உள்ள பாரதூரமான  விடயங்களாகும்.

பண்பாடான கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வரும்போது அதனை எதிர் த்துப் போராடுவது இஸ்லாமிய அறிஞர் கள் மீதுள்ள தார்மீக பொறுப்பாகும். இப்படியான அநீதிகள், அத்துமீறல்கள் நிலவும் போது அறிஞர்கள் பேசாமல் மௌனம் காப்பது மனித வடிவில் உலா வும் ஊமைச் ஷைத்தான்களுக்கு சமன் என்று கூறுமளவிற்கு ஆபத்தானதாகும்.

நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் மறைமுகமாக கருத்தழிப்பு அராஜகம் நிழலாடுகிது. அறிஞர்கள் மீது நிர்ப்பந்தங்களைப் பிரயோகித்து கருத்துச்  சொல்ல வைப்பதும் அல்லது கருத்துக் களைச் சுதந்திரமாகச் சொல்ல முடியாதவாறு வாய்ப்பூட்டுப் போடுவதும் சிந்த னைப் பயங்கரவாதமே. இரவின் மடியில் படரும் சதிபோல் சிந்தனைப் பயங்கரவாதம் வேகமாகப் பரவும் அபாயத்தை உணர முடிகிறது. இது ஒரு குற்றம், அடிப்படை அத்துமீறல் என் பதை புரியாமலே சமூகம் வாழ்கிறது. அது பாவம் என்று தெரிந்திருந்தால் கூட்டம் போட்டு நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள்.

நாட்டில் குறித்த ஒரு மத்ஹபின் கருத்து மாத்திரமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நிலைப்பாடுடையவர்கள் ஏனைய அறிஞர்களின் சிந்தனைகளை அழிக்கவே முற்படுகின்றனர். வித்தியாசமான கருத்துக்களை வன்மையான முறையில் தடுக்கவும் எத்தனிக்கின்றனர். ஒரு கருத்தை சுதந்திரமாக மக்கள் சபையில் முன்வைப்பதற்கு அத்தகையவர்கள் விடுவதில்லை. இது நாட்டில் நிலவும் பொதுக் கருத்தையே எல்லோரும் பேச வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாகும். இதனைத்தான் இங்கு தீவிர சிந்தனைப் பயங்கரவாதம் என்று கூறுகின்றோம்.

சிந்தனைப் பயங்கரவாதம் என்பது இஸ்லாமிய சட்டப் பார்வையில் பயங்கரமான ஒரு குற்றம். கடுமையான அத்து மீறல். ஒழுங்குகளையும் சட்ட வரை யறைகளையும் பேணியவாறு வித்தியாச மான அபிப்பிராயங்களை முன்வைக்கும் சுதந்திரத்தைத் தடுப்பது மிகப் பெரிய அநியாயமாகும். இப்படியான நெருக் கடிகள் எழும்போது அகில இலங்கை அறிஞர்கள் சபை சுதந்திரமான கருத் தாடல்களுக்கு வழிகாட்ட வேண்டும். மாறாக சிந்தனைப் பயங்கரவாதத்திற்கு உடந்தையாக இருக்கக் கூடாது.

காரணம் வித்தியாசமான சிந்தனைகள் ஒரு சமூகத்தின் எழுச்சிப் பாதைக்கான மைற்கற்கள். அறிஞர்களின் அபிப் பிராயங்கள் என்பன சமூக மேம்பாடு, தேச நலன்கள், சமூக ஒற்றுமை, சக வாழ்வு போன்ற நல்லுறவுப் பாதையில் பயணிப்பதற்கான வழிகாட்டல்களாகும். சமூக எழுச்சிப்படிகளில் காலடியெடுத்து வைப்பதற்கு அறிஞர்களின் தேடல்களும், கருத்துக்களுமே துணை நிற்கின் றன. சிந்தனைகள் ஊறும் நீர் ஊற்றுக்களை அடைத்து விட்டு சமூகத்தில் பசுமையை வளர்ச்சியை ஒருபோதும் காண முடியாது.

அறிஞர்களைக் குடைந்து குடைந்து விசாரிப்பதும் அவர்களின் உணர்வுகளை யும் நம்பிக்கை சார்ந்த விடயங்களையும் கடுமையான முறையில் கேள்விக்குட்படுத்துவதையும் 12 ஆம் நூற்றாண்டில் ஸ்பெய்னில் காணப்பட்ட கத்தோலிக்க திருச்சபையின் ‘திரிபுக் கொள்கை விசாரணைக்கு’ ஒப்பானதாகும்.

அக்காலப் பிரிவில் திருச்சபையானது யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக சமயம் சார்ந்த நம்பிக்கைகள், உணர்வுகள் தொடர்பாக பலத்த விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். மாற்றுக் கருத்து காரணமாக இவ்வமைப்பால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் அவர்களின் நாட்டு அரசர்களால் சித்திரவதை, உரிமை மறுப்புக்கள், பொருளாதாரத் தடைகள், மரண தண்டனைகள் என்று பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டார்கள். இந்த நடவடிக் கைகளால் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அதுவே மத்திய கால ஐரோப்பாவின் இருண்ட காலத்துக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.  

அறிவின் கோட்டையான இஸ்லாமிய அறிஞர்கள் சபை இப்படியான இழிந்த வரலாறுகளை முன்மாதிரியாக எடுக்கக் கூடாது என்பதற்காகவே ஐரோப் பாவின் இருண்ட யுகத்தை ஞாபகப்படுத்தினோம்.

வரலாற்றில் இருந்து நாம் படிப்பினை பெற வேண்டுமே தவிர, நாம்  ஒருபோதும் பின்னால் வருபவர்களுக்கு படிப்பினையாக ஆகி விடக் கூடாது. பிறருக்கு படிப்பினையாக அமைவது என்பது இறை நியதிகளுக்கு முரணாகச் செல்வதன் மூலம் தண்டனைகளை  சுவைத்து அடுத்த பரம்பரைக்கு பாடமாக அமையும் அவல நிலையாகும். எனவே நாம் சிறந்த முன்மாதிரிகளாக இருப்போம். துர்ப்பாக்கிய நிலைகளுக்கு உட்பட்டு பிறக்கு படிப்பினையாக இருப் பதைத் தவிர்ப்போம்.

இன்று எமது நாட்டின் சட்ட சபைகள் மேற்கொள்ளும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அவலங்களாகவே தொடர்கின்றன. இத்தகைய சிந்தனைப் பயங்கரவாதம் மக்களின் வார்த்தைகளை அதன் உள் அர்த்தங்களைக் கூட துருவித் துருவி தேடிப் பார்க்கும் அளவிக்கு கீழ்நிலைக்குச் சென்றுள்ளன. ஏகப்பட்ட பிரச்சினைகளும் சவால்களும் உள்ள கொந்தளிக்கும் கடலில் வாழும் போது எமது கவனம் எங்கு குவிமையம் பெற வேண்டும், எதனை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதை அறிஞர்கள் சபை கருத்தில் எடுக்காவிட்டால் கப்பல் மூழ்கிவிடும்.

யாரும் எதுவும் பேசக் கூடாது. அறிஞர்கள் சபை எந்தத் தீர்மானத்தை எடுக்கின்றதோ அதனையே நாட்டின் பொதுக் கருத்தாக எடுக்க வேண்டும். அதனை விமர்சிப்பதற்கு மக்களுக்கு உரிமை இல்லை. சரி காண்பது மட்டும் தான் புத்திஜீவிகளின் பணி. கைகட்டி வாய் பொத்தி பின்பற்றுவது தான் பொது மக்கள் வழி. மீறினால் ஊரில் உள்ள மிம்பர் மேடை போர் முரசு கொட்டும். இதுதான் அண்மைக் காலங்களில் நாம் அனுபவிக்கும் நாட்டு நடப்பாகும்.

மாற்றுக் கருத்துடையவனை அனுதா பம் காட்டிப் பேசவோ அல்லது உள்ளத் தாலும் நினைக்கக் கூடாது என்ற அள விற்கு அழுத்தங்களும் நெறுக்குதல் களும் களத்தில் தாண்டவமாடுகின்றன. இது எமது நாட்டில் நிலவும் கசப்பான உண்மைகள். இத்தகைய நிலைப்பாடு கள்தான் இஸ்லாமியப் பார்வையில் சிந்தனைப் பயங்கரவாதம் ஆகும்.  

நாட்டிலுள்ள முஸ்லிம் அறிஞர்களினதும் புத்திஜீவிகளினதும் கருத்துக்களை மிகவும் மட்டரகமான முறையில் கட்டுப்படுத்துவதும் பேச்சுச் சுதந்திரத்தை வழங்காமல் வாய்ப் பூட்டு போடும் செயற்பாடுகளும் இருண்ட எதிர்காலத்திற்கு கட்டியம் கூறும் வேதனையான அறிகுறிகளாகும்.

முறையாக முன்வைக்கும் சிந்தனைகளை கலந்துரையாடலுக்கு எடுப்பதும் திறந்த உரையாடல்களுக்கு வழி விடுவதும் பண்பாடான அணுகுமுறையாகும்.

ஒடுக்கப்பட்ட சிந்தனைகள், உணர்வுகள் ஒரு நாள் வெடிக்கும் என்பது வரலாற்று நியதியாகும். இறை நியதிகளில் மாற்றம் ஏற்படுவதில்லை. ஒடுக்கப்பட்ட குரல்கள் வெடித்து வெளியில் வருவது இயல்பாகும். அந்தக் காலம் வெகுதூரத்தில் இல்லை. 

ஒற்றுமைப் படுவதும் ஒன்றுபட்டு உழைப்பதும் தான் இன்று காலத்தின் தேவையாக மட்டுமல்ல வாஜிபாகவும் உள்ளது. எனவே உள்வீட்டுப் பூசல்களை கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு முஸ்லிம் சமூகத்தின் பொது எதிரியை எதிர்கொள்வதற்கு களமிறங்க வேண்டிய தேவையில் நாம் உள்ளோம். நாட்டில் சகவாழ்வோடும் இணக்கத்தோடும் ஒன்றுபட்டு கௌரமாக வாழ்ந்ததாகவே வரலாறு உள்ளது. நமது இழந்த அந்த கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கு மீண்டும் ஒன்றுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே முஸ்லிம் சமூகம் பயணிக்கும் இயங்கு திசையை சரியாக அடையாளப்படுத்தும் அறிஞர்களே இன்றைய தேவையாகும்.

நாகரிகமான கருத்துச் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை என்றும் அழுத்தங்களைப் பிரயோகித்து கருத்துக்களை பேச வைப்பது சிந்தனைப் பயங்கரவாதம் என்றும் கூறும்போது அதனை தனிநபர் ஆளுமைகளைப் பாதுகாக்கும் வேலியாக எடை போடக் கூடாது.  இங்கு சிந்தனைச் சுதந்திரம் வாழ வேண்டும் என்றே அவாவுறுகின்றோம்.

சீரான சிந்தனைச் சுதந்திரம் இஸ்லாம் வழங்கியுள்ள உயர்ந்த ஒரு பெறுமான மாகும். அதற்குப் பாதிப்பு ஏற்படும் போதுதான் சிந்தனைத் தேக்கம் கொண்ட இருண்ட யுகம் மீண்டும் தலைதூக்க வழிவகுக்கிறது. அதனால் முஸ்லிம் சமூகம் பல நூற்றாண்டுகளுக்கு பின்நோக் கித் தள்ளப்படுகிறது. இதுவே பிறர் நம்மைப்  பார்த்து படிப்பினை பெறும் அவலம் கொண்ட சமூகமாக நாம் மாறி விடும் புள்ளியாகும். இந்த அபாய நிலையில் இருந்து சமூகத்தை காக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு நாம் உழைக்க வேண்டும். அதன் பொருள் தனிநபர் ஆளுமைகளைப் பாதுகாப்பது அல்ல. எனவே காத்திரமான சிந்தனைச்  சுதந்திரத்தைப் பாதுகாத்துப் போராடுவது துறைசார்ந்த அனைவர் மீதுமுள்ள தார்மீகக் கடமையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here