சூடுபிடிக்கும் அஸ்கிரிய பீட அறிக்கையும், தம்பர அமில தேரரின் மறுப்பும்

0
0
ஞானசார தேரர் தொடர்பில்  அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்க சபை வெளியிட்டிருந்த அறிக்கை நிறைவேற்ற வேண்டிய தேவையற்ற அறிக்கை என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்தார்.
நாட்டின் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்கள் தொடர்பில் பொருட்படுத்த தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தம்பர அமில தேரர் இதனைக் கூறினார்.

‘‘கண்டி அஸ்கிரி மகா விகாரையின் பிக்குமார் சங்க நிர்வாகக் குழு சார்பாக அரசுக்கு விடுக்கும் அறிவுறுத்தலாவது, எமது தாயகத்துக்கும் சிங்கள சமூகத்துக்கும் பௌத்த சாசனத்துக்கும் எதிராக எழும் எந்தவோர் அச்சுறுத்தலின் போதும் அதனைப் பாதுகாக்கும் பொருட்டு பௌத்த பிக்குமார் தமது உயிரைப் பணயம் வைத்துக் காலந்தோறும் போராடி வந்துள்ளனர் என்பது நாம் அனைவரும் நன்கறிந்த விடயமாகும்.

சமகால கட்டத்தில் இலங்கையில் சிங்கள இனமும் பௌத்த பிக்குமார்களும் முகங்கொடுக்க நேர்ந்துள்ள சவால்களைப் பொறுத்தமட்டில், இதற்கு மேலும் நாம் மௌனம் சாதித்தல் பொருத்தமான செயலல்ல என்று உணர்கின்றோம். அது பிக்குமார்கள் தாங்கியிருக்கும் வரலாற்றுப் பொறுப்பினைக் கைநழுவ விடுதலாகும் என்பதோடு, எதிர்காலத்தில் தீர்க்க முடியாத பல சிக்கல்கள் அதனூடே எழுவதற்கும் காரணமாகிவிடும். ஆகவே, கண்டி அஸ்கிரி மகா விகாரையின் பிக்குமார் சங்க நிர்வாகக் குழு சார்பில் கீழ்வரும் விடயங்களை சமூக நல்லிணக்கம் கொண்ட சமூகச் சூழமைவொன்றைக் கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொண்டுவரும் அதிகௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, கௌரவப் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹே உள்ளிட்ட அமைச்சர்கள் அடங்கிய அரசின் கவனத்துக்குக் கொண்டுவர விழைகின்றோம்:

கலபொட அத்தே ஞானசேர தேரரின் ஆவேசமிக்க நடத்தைக் கோலத்தையும் கருத்துத் தெரிவிக்கும் பாணியையும் நாம் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், நாம் அன்னாரின் கருத்துநிலையைப் புறக்கணிக்கவில்லை. அன்னார் முன்வைக்கும் கருத்துக்களின் உண்மைத் தன்மை தொடர்பில் தேடிப்பார்த்து, உரிய ஒழுங்குகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, அச்சம்பவங்களைப் பயன்படுத்திக்கொண்டு, முழு மொத்த பிக்குமார் சமூகத்தையும் இழிவாடல் செய்து, இடதுசாரிகள் எனக் கூறிக்கொள்வோரும், பௌத்தப் பின்புலத்தில் பிறந்து வளர்ந்த சில அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் பல்வேறு அமைப்புக்களும் செய்திக் கலந்துரையாடல்களின் போதும் தாம் எழுதும் கட்டுரைகளிலும் எவ்வித மரியாதை உணர்வும் இன்றி பிக்குமார்களை விமர்சித்துக்கொண்டும், பெயர்கூறி அழைத்தும் வருவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதேவேளை, நமது சிங்கள மற்றும் பௌத்தக் கலாசாரத்தில் தொன்றுதொட்டு வழங்கிவரும் மரபின்படி, பௌத்த பிக்குமாரில் ஒருவரைப் பெயர்கூறி அழைக்கும் உரிமை, மூத்த பிக்கு ஒருவருக்கு மட்டுமே உள்ளது என்பதை இங்கு நினைவூட்ட விழைகின்றோம். இனவாத உணர்வுகளைத் தூண்டும் சில அரசியல்வாதிகளின் அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அவற்றுக்கு எதிர்வினை யாற்றும் பிக்குமார்களின் குரலை மட்டும் ஒடுக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிக்கு நமது கடும் அதிருப்தியைப் பதிவு செய்கின்றோம். இதன் காரணமாக எதிர்காலத்தில் இந்நாட்டிலே அமைதியற்ற சூழ்நிலை ஏற்படக்கூடிய ஒரு பின்புலம் உருவாகும் எனில், அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டி இருக்கும் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்த விரும்புகின்றோம்.

நாட்டில் தற்போது நிலவிவரும் சட்டதிட்டங்களை மாற்ற முனைவதன் மூலம் சமூகத்தில் நெருக்கடியானதொரு சூழ்நிலை உருவாவதற்கு அது ஒரு காரணமாக அமையலாம் எனத் தெரிகின்றது. சிங்கள பௌத்தர்களைக் குறிவைத்து உருவாக்கப்படும் புதிய சட்டதிட்டங்களை அறிமுகம் செய்வதானது, இப்பிரச்சினைக்கு மூல காரணமாய் அமையும். அதனால், நிலவிவரும் சட்டதிட்டங்களில் ஏதேனும் பிழை இருந்தால் மட்டும் அது குறித்துக் கலந்துரையாடி ஒரு தீர்மானத்துக்கு வருதல் வேண்டும். மேலும், நிலவிவரும் சட்டதிட்டங்கள் நெருக்கடி நிலைமைகளைக் கையாள்வதற்குப் போதுமான வையாகவே இருக்கின்றன என்பதே நமது நிலைப்பாடாகும்.

சமூக நல்லிணக்கம் எனும் போர்வையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாக்கப்பட்ட அல்லது அதனைச் சுற்றியுள்ள நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்ளுதல், வடகிழக்குப் பிரதேசங்களில் உள்ள தொல்பொருட்களை அழித்தல் என்பவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம். அது தொடர்பில் அதிகௌரவ ஜனாதிபதி அவர்களின் பங்களிப்பு மேலும் கூர்மைபெறல் வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்.

தொல்பொருள் துறைக்குப் பொறுப்பான அமைச்சர், பிக்குமார்கள் தொன்று தொட்டு புழங்கிவந்த, விருத்திசெய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனித ஸ்தலங்களைப் பரிபாலிப்பதற்குப் பதிலாக, புராதனப் புனிதத் தலங்களைப் பாதுகாத்து அவற்றை மேம்படுத்துவதைப் புறந்தள்ளி, தன்னிச்சையான முறையில் அவற்றைச் சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கு எடுத்துவரும் முன்னெடுப்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

சிங்கள சமூகத்தைக் கருவறுப்பதற்குச் சிலர் எடுத்துவரும் முயற்சிகள் தொடர்பில் பத்திரிகைகள் மற்றும் மின்னூடகங்கள் ஊடே பல்வேறு அறிக்கைகள் பிரசுரமாவது தொடர்பில், அவற்றின் மெய் பொய்களை ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் பிரதானமான பொறுப்பாகும் என்பதை நினைவூட்டுகின்றோம்.

சிங்கள பௌத்த மக்கள் மற்றும் பிக்குமார்களுக்கு இதுகுறித்து நாம் தொடர்ந்தும் அறிவுறுத்துவதோடு, தம்மைச் சிங்களவர்கள் என அழைத்துக் கொள்வோராலும், பிற சமயத்தவர்களாலும் பௌத்த தருமத்துக்கு எதிராக மேற்கொள்ளப் பட்டுவரும் பல்வேறு அறிக்கைகளால் பாரம்பரியமான சிங்கள பௌத்த விழுமியங்களைப் போற்றும் சிங்கள பௌத்த சமூகம் கடுஞ்சீற்றங்கொண்டு எதிர்வினையாற்றக்கூடிய ஒரு சூழமைவு தோன்றியுள்ளமை குறித்து அறியக் கிடைக்கின்றது. அதேபோல, பௌத்த தர்மத்தையும் பௌத்தக் கலாசாரத்தையும் திரிபுபடுத்தும் கருத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள சட்ட மசோதாவினை உடனடியாக நடைமுறைப்படுத்திக் காரியமாற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.

இலங்கையில் வாழும் பௌத்த மக்கள் எப்போதும் சக சமயத்தவர்களை மதித்து, அவர்களின் இருப்புக்கு உத்தரவாதமளித்து வந்தவர்கள் என்பது, இந்நாட்டில் வசிக்கும் ஏனைய சமயத்தவர்கள் கண்டிப்பாக நினைவிற்கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும். அப்படியான மதிப்பைத் தந்த பௌத்த அறமுறைமையை இழிவாடல் செய்யும் அந்நிய சமயச் செயற்பாடுகளை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எனவே, தேசிய மற்றும் சர்வதேச சதிகளின் ஊடாகச் சிங்கள பௌத்தர்களுக்கு ஏற்பட்டுவரும் இத்தகைய அநீதிகளுக்கு எதிராக இலங்கையின் மூன்று பௌத்தப் பிரிவுகளையும் சேர்ந்த மகா நாயக்க தேரர்கள் உள்ளிட்ட பிக்குமார்கள் சங்கங்களும், தேசத்துக்கு விசுவாசமான மக்கள் சக்திகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றோம்.

பௌத்த சங்கங்களின் ஒருங்கிணைப்பின்கீழ தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரராகிய நான் அங்கீகரித்து, வெளியிடுகின்றேன்.

இவ்வண்ணம்,
– அதி பூஜ்ய வரகாகொட ஶ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரர் –

மொழியாக்கம் :: அப்துல் ஹக் லரீனா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here