ஆசியாவின் ஆச்சர்யம் தொடர்கின்றது!

0
0

 – ரவூப் ஸய்ன் –

இலங்கையின் கடன் தொகையை தனது பத்தாண்டு கால ஆட்சியில் மூன்று மடங்காகப் பெருக்கிய மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையை “ஆசியாவின் அதிசயம்” என்று முழங்கினார். முழக்கங்களால் ஒரு நாடு முன்னேறிய வரலாறு இல்லை.

1960 களில் இன்றைய சிங்கப்பூர் போலிருந்த இலங்கை இப்போது சிம்பாவேயாக மாறி வருகின்றது. 1960 களில் எமக்கு வாக்களித்தால் சிங்கப்பூரை இலங்கையாக மாற்றுவோம் என்று தேர்தல் மேடைகளில் வாக்குறுதியளித்தனர் சிங்கப்பூர் அரசியல்வாதிகள். மக்கள் வாக்களித்தனர். அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றியது.

60 களுக்குப் பிந்திய இலங்கையின் ஒவ்வொரு தசாப்தத்திலும் இலங்கையின் பொருளாதாரமும் அரசியல் ஸ்திரமும் சிறிது சிறிதாகச் சிதைந்து சின்னாபின்னமாகிப் போனது.

வகைதொகையற்ற வெளிநாட்டுக் கடன்களை அதிகூடிய வட்டி வீதத்தில் பெற்று பாதை களையும் பாலங்களையும் அபிவிருத்தி செய்து விடுவதால் நாடு முன்னேறி விட்டது என்று அர்த்தமல்ல. அதிகாரத்தில் இருக்கும்வரை வெளிநாடுகளிலிருந்து கடன் பெறுவதும், வெளிநாடுகளுக்கு உள்ளூர் வளங்களை அடகு வைப்பதும் மாறி மாறி வந்த அரசாங்கங்களின் ஒரே வகையான அரசியல் கைங்கரியமாக இருந்து வந்துள்ளன.

இலங்கையின் நிலங்களை 100 ஆண்டுகளுக்கு வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடும் அரசியல்வாதிகள் 6 வருடங்களில் மிகப் பெரும் இலாப முதலீட்டோடு வீடு சென்று விடுவர். சுமைகளையும் வலிகளையும் தாங்க வேண்டியவர்கள் மக்கள்தான். இதுதான் இலங்கையில் நடக்கும் பெரிய அதிசயம்.

ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதி அதிகாரத்தைப் பிரயோகித்து, தான் நினைக்கும் மாத்திரத்தில் எந்தவொரு இடத்தையும் வெளிநாட்டவருக்கு விற்று அல்லது குத்தகைக்குக் கொடுத்து பணம் பெற்ற அதிசயம் கடந்த பத்தாண்டுகளில் சர்வசாதாரணமாகவே இங்கு இடம்பெற்றது.

இலங்கையின் கனிய வளங்கள், அதன் கேந்திர முக்கியம் வாய்ந்த அமைவிடம், இயற்கை வளங்கள், இதுவரை பயன்படுத்தப்படாத மூல வளங்கள் என்பவற்றை முறையாகக் கணிப்பிட்டால் அரசியல் தூரநோக்கும் திட்டமிடலும் பிரஜைகளின் நலன் காக்கும் உண்மையான தேச பக்தியும் அரசியல் தலைவர்களுக்கு இல்லாமல் போனமையே நமது பின்னடைவுக்குக் காரணம் என்பதை வெகுவாகப் புரிந்துகொள்ளலாம்.

நமது தேசத்திற்கு நிலையானதொரு பொருளாதாரக் கொள்கை இல்லை. ஒரு நீடித்த கல்விக் கொள்கை இல்லை. சாதகமானதோர் வெளிநாட்டுக் கொள்கையும் இல்லை. கொள்கையற்ற கூடாரங்களாகவே அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. கடன் தரும் நாடுகளின் பக்கம் சாய்வதும் கடனோடு சேர்த்து திணிக்கப்படும் நிபந்தனைகளுக்கு அடிபணியும் கொத்தடிமைத் தனத்திற்கு ஆளாகின்றோம்.

நமக்கென்று ஒரு பொருளாதாரக் கொள்கை இல்லாமையினால் வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டையும் ஒப்பேற்றுவதிலேயே முனைப்பாக உள்ளோம். இத்தனைக்கும் பொருளாதாரத் திட்டமிடல் கொள்கை வகுப்பு அமைச்சொன்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களோடு இயங்குகின்றது.

ஒரு நாட்டின் மத்திய வங்கி ஆளுனராக ஒரு பொருளியல் நிபுணர் (Economist) இருக்க வேண்டும். ஏனெனில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை அவரே திட்டமிட வேண்டும். இலங்கையில் ஆளுநர்களாக வெறும் கணக்காளர்களே (Accountant) அமர்த்தப்படுவது ஆசியாவின் இன்னொரு அதிசயமாகும்.

இலங்கையின் மூல வளங்களை உச்சளவில் பயன்படுத்துவதற்கான கொள்கை வகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இலங்கையின் தேவைக்கு ஏற்ப உற்பத்தித்துறை விரிவுபடுத்தப்படவில்லை. வெளிநாட்டுக் கம்பனிகளே மூலப் பொருட்கள்  மீது ஆதிக்கம் கொண்டுள்ளன. இதனால், அவை எமக்கே உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து மீதியை ஏற்றுமதி செய்கின்றன. வாழ்க்கைச் செலவீனம் தூக்கி நிறுத்த முடியாத நிலையில் தள்ளாடிக் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன? உற்பத்தித் துறையில் உள்ள வீழ்ச்சியே. ஒரு விவசாய நாடு என்ற வகையில் குறைந்தபட்சம் விவசாயத்திலேனும் தன்னிறைவு அடைந்துள்ளோமா? நடுத்தரமான அரிசி கிலோ ஒன்றிற்கு குறைந்தது 120 ரூபாவை ஒதுக்க வேண்டியுள்ளது.

அரிசி, கோழி, இறைச்சி, மீன், முட்டை போன்ற பிரதான உணவுப் பொருட்களின் விலை கடந்த பத்தாண்டில் வேகமாக அதிகரித்துள்ளது. இலங்கையில் மிகக் குறைந்த விலையில் தாராளமாக உண்பதற்கான பழ வகைகளோ தானிய வகைகளோ இல்லை. தமிழகத்துடன் ஒப்பிடும்போது உணவுப் பொருட்களுக்கான வாழ்க்கைச் செலவீனம் நமது நாட்டில் பல மடங்கு எகிறிப்பாய்வதைப் பார்த்து புருவம் உயர்த்த வேண்டும். இதுதான் ஆசியாவின் பெரிய ஆச்சரியம்.

பாகிஸ்தானிலும் இந்தியாவிலுமிருந்து ‘பாஸ்மதி’ அரசியை இறக்குமதி செய்கின்றோம். இவ்விரு நாடுகளின் அதே காலநிலையைக் கொண்ட இலங்கையில் இது போன்ற அரிசியை உற்பத்தி செய் வதிலிருந்து ஏன் ஒதுங்கியிருக்கின்றோம் என்ற கேள்வி ஆச்சரியமாய் எழுகின்றது.

இன்னும் பம்பாய் வெங்காயத்தையும் உருளைக் கிழங்கையும் இறக்குமதி செய்து, நள்ளிரவில் நிதியமைச்சு அதன் இறக்குமதித் தீர்வையை உயர்த்துகின்றது. உணவுப் பொருட்களுக்காக வருடாந்தம் பல பில்லியன் ரூபாய்களை செலவு செய்கின்றோம். இத்தனைக்கும் விவசாய நாடு என்று எம்மை அழைக்கின்றோம். இதுதான் ஆசியாவின் மிகப் பெரிய அதிசயம்.

இலங்கை கடலால் சூழப்பட்ட ஒரு தீவு. மீன் பிடிப்பதற்குத் தாராளமாக வசதி கொண்டு நாடு. ஆனால், இலங்கைக் கடலில் வெளிநாட்டவர்கள் பிடிக்கும் மீனின் அளவோடு உள்ளூர் மீனவர்களின் அளவை ஒப்பிட்டால் நைலுக்கும் மகாவலிக்கும் உள்ள வித்தியாசம் துலங்கும்.

தரமான, ருசியான பாறை போன்ற மீன் உள்ளூர் சந்தையில் 1000 முதல் 1200 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. இதேவேளை, சீனக் கம்பனி வரையறுக்கப்பட்ட மணித்தியாலங்களில் பல மில்லியன் டொன் மீனை தமது தொழில் நுணுக்கங்களைக் கையாண்டு இலங்கைக் கடலில் அள்ளுகின்றார்கள். இலங்கையில் வாழும் மக்களுக்கு ஆகக் குறைந்தது கடல் மீன்களையேனும் குறைந்த விலையில் உண்பதற்கான வாய்ப்பு இல்லை. இதுதான் ஆசியாவின் மிகப் பெரிய அதிசயம்.

முற்றிலும் கடலால் சூழப்பட்ட நமது நாட்டு மக்கள் மீன் பிடிப்பதற்கு தாரளமான வசதி கொண்டிருக்கும் நிலையில், இன்னும் சிலி மற்றும் ஆஜன்டீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் டப்பாவில் அடைக்கப்பட்ட (Caned Fish) மீனை உண்கிறார்கள் என்பதுதான் ஆசியாவின் பெரிய அதிசயம்.

ஹம்பாந்தோட்டையில் கறக்கப்படும் பால் நுவரெலியாவிற்கு லொறிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு அங்குள்ள தொழிலகங்களில் பால்  மாவாக மாற்றப்பட்டு, மீளவும் ஹம்பாந்தோட்டையில் வாழும் பாமர மக்களுக்கே அவர்களின் பால், மாவாக பெரும் விலைக்கு விநியோகிக்கப்படுவது எவ்வளவு பெரிய வேடிக்கை. இதற்காக செலவுசெய்யப்பட்ட பணம் எவ்வளவு அனாவசியம் என்பதை எப்பொழுதேனும் நாம் கணிப்பிட்டிருக்கிறோமா? இப்படி ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியங்களால் ஆடிப் போயிருக்கும் நாடு நம்முடையது.

அரசியல்வாதிகளின் அசட்டைத் தனத்தால் அதல பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரம் ஒரு பக்கம். ஊழல் பெருச்சாளிகளின் பகற் கொள்ளை இன்னொரு பக்கம். இப்படி பின்னடைவின் எல்லாப் பள்ளத்தாக்கிலும் நாம் வீழ்ந்து கிடக்கின்றோம்.

ஒரு கொள்கை  சார் கருத்தியல் மாற்றத்தின் மூலமே (Paradigm Shift) இந்த ஆச்சரியங்களின் புதிர்களை நாம் அவிழ்க்கலாம். குடிமக்களின் மனங்களில் முதலில் இந்த மாற்றம் வேண்டும். இந்த மாற்றத்திற்கு நாம் தயாராக இருக்கிறோமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here