ஆசிரியர் பங்கு குறித்த இரண்டு ஆய்வுகள்

1
18

பாடசாலைக் கல்வியின் பிரதான பங்காளர்களுள் ஆசிரியர்களும் அடங்குவர். நேரடியாகக் கல்வி பெறும் மாணவர்கள் பௌதிக வளங்களை உறுதி செய்து, சிறந்த தலைமைத்துவம் வழங்கும் அதிபர், பிள்ளைகளின் கல்விக்கு கண்காணிப்பாளர்களாகவும் உறுதுணையாளர்களாகவும் இருக்கும் பெற்றோர், ‘எல்லோருக்கும் கல்வி’ என்ற அடிப்படைக் கோட்பாட்டை அமுல்நடாத்தும் அரசாங்கம், பாடசாலைக் கல்விக்குக் கைகொடுக்கும் பழைய மாணவர்கள் போன்ற கல்விப் பங்காளர்களில்  மிக வினைத்திறனுள்ள, அதிகூடிய செல்வாக்குச் செலுத்தக் கூடிய தரப்பு யார்? என்பதை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒர் ஆய்வு நிறுவியுள்ளது.

மாணவர்களின் அடைவிலும் அவர்களின் கற்றல் ஆர்வத்திலும் மிகச் செறிந்த செல்வாக்குள்ளவர்கள் ஆசிரியர்களே என்பதை பின்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு நிறுவியுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டி, கற்பிக்கின்ற ஆசிரியர்கள், அவர்களின் அடைவு மட்டத்தில் 68.7%மான தாக்கத்தைக் கொண்டுள்ளனர் என அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

பாடசாலை அடைவு மட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் மாறிகளாக அதிபர், ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர், அரச நிருவாகம் என்பன கொள்ளப்பட்டன. அவர்களில் ஒப்பீட்டு ரீதியில் மாணவர்களின் அடைவு மட்டத்தில் மிகப் பெரிய செல்வாக்குள்ளவர்களாக ஆசிரியர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். பெற்றோர் அடுத்த இடத்திலும் பாடசாலை வளங்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதுபோன்றே, ஆபிரிக்காவிலுள்ள கென்யா என்ற நாட்டில் மரக்வெத் மாவட்டத்தில் “இரண்டாம் நிலை பாடசாலை மாணவர்களின் இடைவிலகலில் ஆசிரியரின் பண்புக் குணங்கள் செல்வாக்குப் பெற்றுள்ளனவா?” என்பது குறித்து இடம்பெற்ற ஆய்விலும் சில உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன.

தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான சர்வதேச ஆய்விதழில் இது தொடர்பான கட்டுரை வெளிவந்துள்ளது. இவ்வாய்வில், இடைநிலைப் பாடசாலை மாணவர்கள் இடைவிலகுவதில் ஆசிரியர்களும் மறைமுகமாகப் பங்களிக்கின்றனர் என்பது நிறுவப்பட் டுள்ளது.

ஆசிரியர்களுக்கு அதிபர்களால் வழங்கப்படும் மிகையான முகாமைத்துவப் பொறுப்புக்களால் வகுப்பறைக் கற்பித்தலிலிருந்து ஆசிரியர்களின் கவனம்  திரும்புகின்றது. பாடசாலையில் நிருவாகப் பொறுப்புகளைச் சுமந்த ஆசிரியர்கள் வினைத் திறனுள்ள கற்பித்தலில் கோட்டை விடுகின்றனர். அத்தகைய ஆசிரியரின் கண்காணிப்பிலுள்ள அல்லது கற்பித்தலுக்கு உட்படுகின்ற மெல்லக் கற்போருக்கான கவனம் குறைகின்றது.

நாளாந்தம் மாணவர்களின் வகுப்பறை வேலைகளையும் வீட்டில் வழங்கப்படும் பயிற்சிகளையும் (Homework) ஆசிரியர்கள் பரிசீலிக்கத் தவறுகின்ற போது மெல்லக் கற்போரின் உளவியல் பாதிக்கப்படுகின்றது. ஆசிரியர்கள் தம்மை கவனிப்பதில்லை என்ற குறைபாட்டை உணரும் மாணவர்கள் படிப்படியாக கற்றல் ஆர்வத்தை இழக்கின்றனர். அதன் இறுதி விளைவாக, பெருந்தொகையான மெல்லக் கற்போர் பாடசாலைகளிலிருந்து இடைவிலகுகின்றனர்.

உண்மையில் வகுப்பறையிலுள்ள மெல்லக் கற்போர் குறித்து ஆசிரியர்கள் எந்தளவுக்குக் கவனம் செலுத்துகின்றார்கள், ஆசிரியர்களின் கற்பித்தல் முறையின் செல்வாக்கு எப்படியுள்ளது, அவர் கள் சுமந்துள்ள நிர்வாகப் பொறுப்புகளுக்கும் கற்பித்தலுக்கும் இடையிலான தொடர்பு என்ன என்பதைக் கண்டுபிடிப்பதே இந்த ஆய்வின் குறிக்கோள்களாக இருந்தன.

மாணவன் இடைவிலகலில் வறுமை, பாடசாலையின் தொலைவு, நெறிகெட்ட சமூக சூழல், மாணவர்கள் போதை வஸ்து போன்ற பழக்கங்களுக்கு அடிமையாதல், கல்வி மீதான பெற்றோரின் அக்கறையீனம், பாடசாலைகளில் பௌதிக வளப்பற்றாக்குறை, மாணவர்களைக் கவராத பாடசாலைச் சூழல் என பல்வேறு மாறிகள் (variables) ஆய்வில் கவனத்தில் கொள்ளப்பட்ட போதும், ஆசிரியரின் கற்பித்தல் ஈடுபாடும் மெல்லக் கற்போருக்கான கவனமும் மிக முக்கிய மாறிகளாகக் கொள்ளப்பட்டன.

14 இடைநிலைப் பாடசாலைகளைச் சேர்ந்த 28 ஆசிரியர்கள் குடித்தொகையாகக் கொள்ளப்பட்டதோடு, எழு மாறான மாதிரி எடுப்புக்களோடு தரவுகள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் சாராமாறியாக ஆசிரியர் பண்புகளும் சார்மாறியாக மாணவர் இடைவிலகலும் கொள்ளப்பட்டது. மெல்லக் கற்போர் குறிப்பாகவும், இடைநிலை வகுப்பறை மாணவர்கள் பொதுவாகவும் இடைவிலகிச் செல்வதற்கு ஆசிரியர்கள் மூன்று வகையில் காரணமாக இருக்கின்றனர் என்பதை கென்யாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு நிறுவியுள்ளது.

  • அளவுக்கு மீறிய நிருவாகப் பொறுப்புக்களை ஏற்றல்
  • மெல்லக் கற்போருக்கான ஆசிரியரின் குறைந்தபட்சக் கவனம்
  • மாணவர்களின் வீட்டுப் பயிற்சிப் புத்தகங்களை ஆசிரியர் பரிசீலிக்கத் தவறுதல்

ஆய்வின் விதப்புரையாக சில விடயங்களையும் ஆய்வறிக்கை முன்வைத்துள்ளது. அதில்,

  1. ஆசிரியர்கள் கண்டிப்பாக மெல்லக் கற்போர் மீது கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
  2. அடிக்கடி மாணவர்களின் பயிற்சிப் புத்தகங்களைப் பரிசீலிக்க வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் எதிர்நோக் கும் பிரச்சினைகளை இனங்கண்டு உதவ வேண்டும்.
  3. பாடசாலையின் நிருவாகக் கொள் கைகள் மாணவர் இடைவிலகலுக்கு பங்களிக்காது என்பதை உறுதி செய்யும் விதத்திலான கண்காணிப்புத் திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்.

மேலே குறிப்பிட்ட இரண்டு ஆய்வுகளும் நமக்குச் சொல்லும் செய்தி என்ன? ஆசிரியர்கள் முயற்சித்தால் மாணவர்களை வகுப்பறைகளில் கற்க வைத்து, அடைவு மட்டத்தை உயர்த்தலாம். அதே போன்று ஆசிரியர்களின் கவனயீனத்தால் மாணவர்கள் பாடசாலைகளை விட்டு இடைவிலகவும் நேரிடலாம். ஆக, பாடசாலைக் கல்வியில் எல்லாத் தரப்பினரை விடவும் முக்கிய பங்காற்றுகின்றவர்களாக ஆசிரியர்களே உள்ளனர் என்பதை இவ்விரு ஆய்வுகளும் நிறுவியுள்ளன.

1 COMMENT

  1. இன்று பெரும்பான்மையானோர் ஆசிரியர் தொழிலின் மகத்துவத்தையும் அதனது வகிபாகத்தையும் அறியாதுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here