ஆன்ட்ராயிட் உலகின் செய்திகள் இலக்கை வெல்லுமா?

0
0

1.தற்போது உள்ள ஊடகங்கள் மற்றும் வலைதளங்களின் வளர்ச்சியினால் மக்கள் தேவையான ஆழமான விடயங்களை படிக்கும் தன்மையை இழந்து விட்டார்கள்.

2.ஒரு நாளைக்கு 1000க் கணக்கில் செய்திகள் வலைதளங்களிலும் . முக நூல் வாட்ஸ்அப் போன்றவற்றிலும் வெளியாகின்றன. அதை குறித்து முழுமையாக படித்து சிந்திக்கும் வேளைகளில் அதை விட அடுத்த கனமான செய்திகள் மக்களின் மனதைத் திருப்புகின்றது.

3.இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது எந்த செய்திகளும் சமூகங்களின் மத்தியில் பெரிய தாக்கத்தை நீண்ட காலங்களுக்கு தக்க வைப்பது இல்லை.

4.நாடு முழுவது பேசப்பட்ட விவாதிக்கப்பட்ட விடயங்களைக் கூட சர்வ சாதரணமாக அடுத்த நாட்கள் மறந்து அடுத்த விடயத்திற்கு அவசரமாக செல்ல முற்படுகின்றார்கள்.

5.அவசரமான விவாதங்கள் ,உரையாடல்கள் என்று சமூகங்களின் கவனங்கள் சிந்தனைகள் திசைத் திருப்படுகின்றன. ஒவ்வொரு கால கட்டங்களிலும் உலக சமூகங்களுக்கு மத்தியில் நடக்கும் நிகழ்வுகள் எதுவும் கவனிக்கப்பட்டு மீளாய்வு செய்யப்படாமலும், மீள் பார்வை செய்யப்படாமலும் இருப்பது புதிய தலைமுறைகளின் தோல்வியாகத் தெரிகின்றது.

6.இது மீடியாக்கள் யுகம் என்றும் எவர்கள் மீடியாக்களை தக்க வைக்கின்றார்களோ அவர்களே உலகின் வலிமையான இடத்தை தக்க வைக்க இந்த நூற்றாண்டில் அதிகாரபலம் என்று எல்லாம் அறிஞர்கள் சிலரின் கூற்றை முன்மொழியும் நாம் ஒன்றை மறந்து விட்டோம் சிறந்த சிந்தனை அற்ற ஊடகங்கள் ஊடகவியலாலர்களால் சமூகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்பது தான் அது.

7.ஒரு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற ராணுவம் எவ்வாறு போராடுகின்றதோ அது போல சிறந்த பண்படுத்தப்பட்ட மக்கள் ஊடக அறத்தைப் பேணினால் போதுமானது .சமூகங்களின் கைகளில் அது சென்று விட்டால் புத்தி அற்றவன் கைகள் கத்தி பிடிப்பது போல அனைவரின் உடலையும் கீறிவிடும்.

8.மேற்கின் பல நூல்களை படித்து விட்டும், முதலாளித்துவ மற்றும் சியோனிச தலைமையின் விருதுகளையும் தலைமைப் பொறுப்பையும் பெற்றுவிட்டு சமூகங்களில் சிந்தனையாளர்களாக பவனி வரும் முஸ்லிம் பெயர் தாங்கிகளாலும்,பாசிச சிந்தனையாளர்களாலும் ஆரோக்கியமான சமூகங்கள் சமூக வீழ்ச்சிக்கான சிந்தனைகளுக்கு அடிமையாகி விட்டனர்.

9.மேற்கின் அரசியல் மற்றும் வாழ்வியல் கொள்கைகளுக்கு அடிபணியாத சமூக மக்களின் சூழல் அறிந்து சிந்திக்கும் சிறந்த ஆளுமைகள் கண்டறிவது அவசியம் ஆகும்.

10.சமூக மற்றும் உலக விவகாரங்களில் செய்திகள் மற்றும் நூல்களில் எதைக்குறித்து கவனம் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டல் தற்போதைய தலைமுறைகளுக்கும்,
பொது மக்களுக்கும் அவசியத் தேவையாக இருக்கின்றது. அதனை பண்பட்ட தியாக சீலர்களும் ஒழுக்க சீலர்களும் வழிகாட்ட வேண்டிய அவசியம் இருக்கின்றது.

11.இந்தியாவில் பல அரசியல் அமைப்புகளின் மாணவர் இயக்கங்கள் இருக்கின்றன . குறிப்பாக இந்திய இஸ்லாமியமாணவர்இயக்கத்தைஉருவாக்கியவர்களில் ஒருவரான முஹம்மத் அஹமதுல்லாஹ் சித்தீக்கி போன்றோர் எல்லாம் பத்திரிக்கைத்துறை பேராசிரியர்கள் என்பது மக்கள் சிந்திக்க வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

12.அமெரிக்காவில் தற்போது வெஸ்டேர்ன் இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் பத்திரிக்கைத்துறை பேராசிரியராக பணியாற்றுகின்றார்கள்.

13.எகிப்து நாட்டில் சகோதரத்துவ அமைப்பினரால் எண்ணற்ற நீதிக்கான பாதையில் போராடும் ஊடகவியலாளர்கள் உருவாக்கப்பட்டார்கள்.சீசியின் ஆட்சியில் நூற்றுகணக்கான ஊடகவியலாளர்கள் நீதிக்கு ஆதரவாக துணை நின்றார்கள் என்பதால் தற்போது சிறையில் இருப்பது ஊடக அவதானிகளுக்கு தெரிந்த விடயங்கள் ஆகும்.

14.அதிகமான ஊடகங்களால் குழப்பங்கள் அதிகளவில் ஏற்பட்டு உள்ளது , மக்களின் இலக்குகள் முற்றிலுமாக திசைதிருப்பப் பட்டுள்ளது.

15.சமூகம் சிந்திக்க வேண்டிய செய்திகளையும் இலக்குகளையும் அறிவிக்கும் நீதிக்கான புத்தி ஜீவிகள் வழிகாட்ட வில்லை என்றால் நீங்கள் எதைக்குறித்து சிந்திக்க வேண்டும் என்பதை எதிராளிகள் ஊடகங்கள் வழியே பாடம் நடத்துவார்கள்.

16. 24 மணி நேரத்தில் செய்திகளை அறிந்து திகட்ட திகட்ட பேசுவதிலும் உரையாடுவதிலும் நேரம் கழிந்தால் நிகழ்தருணத்தில் இலக்கை வெல்ல மாற்றம் நிகழுமா ?

17.அஹ்லாக் ரத்தம் துடைக்க போகும் நாம் பாதி வழியிலே பசி எடுத்தால்மாட்டுக்கறி தின்று விட்டு பாரிஸ் குண்டு வெடிப்பை பற்றி உரையாட முனைவோம். வயிறு நிரம்பிய மமதையில் சிரிய அகதிகள் சொகுசு வாழ்க்கைக்கு ஐரோப்பா செல்கின்றார்கள் என்று
முஸ்லிம்களை குறித்து திட்டிக் கொண்டு இருப்போம்.

18.இடையில் அமீர் கான் கருத்து கூறினால் முந்தைய மூன்று சம்பவங்களையும் மறந்து விட்டு இந்தியாவில்அவர் இருப்பிடத்தை தக்க வைக்க தேசியவாதத்தை நிருபித்த அவருக்கு முக நூலில் விரும்பிக்கருத்திடுவோம்.

19.ஆனால் கடைசியில் உத்திர பிரதேச மாநிலத்தில் அஹ்லாக்கை அலட்சியம் செய்ததைப் போல பாலஸ்தீனம் , சிரியா, ஈராக்,ஏமன், இலங்கை , பர்மா ,காஷ்மீர் , உலகம் முழுக்க ரத்தம் வடித்து வடித்து ரத்த நதிகளை பாய்ச்சும் நிலங்களில் மனிதர்களின் உடல் துடைக்கும் காட்டன் பஞ்சுகளை சேர்க்க கூட நாம் இன்னும் முயலவில்லை என்பது தான் வெட்டவெளிச்சமான உண்மை!

– அபூஷேக் முஹம்மத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here