இணையப் பாவனை

0
9
உலகம் முழுவதும் உள்ள ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட இலட்சக் கணக்கான கணனிகளின் வலைப்பிண்ணல் இணையம் (Internet) என அழைக்கப்படுகிறது. அதாவது, (International Network of Computers) சர்வதேச கணனி வலைப்பிண்ணலே இணையமாகும். Internet என்ற சொல், International Network என்ற இரண்டு சொற்களிலும் தடித்த எழுத்தில் உள்ளவற்றின் கூட்டினாலேயே உருவாகியுள்ளது.

இந்த இணையத்தின் வழியாக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் நிகழும் மெய்நிகர் (Virtual) வெளியையே இணைய வெளி (Cyberspace) என அழைக்கிறோம். கணனி தொழில் நுட்பம் மற்றும் இணையம் எமது நாளாந்த வாழ்வின் இன்றியமையாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. சகலரும் சகலதும் எண்ம (Digital) மயமாகி வருவதால் இணைய வெளியின் ஆழ அகலங்களும் விரிந்து கொண்டே செல்கின்றன. நிஜ உலக (Real World) செயற்பாடுகள் அனைத்தும் இணைய மயமாவதால் மெய்நிகர் உலகை (Virtual World) உருவாக்கி வருகிறது.

இந்த இணைய வெளிக்குள் கணனி வாயிலாக நுழைந்த நாம் இன்று அதன் உச்ச வளர்ச்சியின் வெளிப்பாடுகளான திறன்பேசி (Smart Phone) வாயிலாகவும் இன்ன பிற Laptop, Palmtop, Tablets போன்ற கருவிகள் (Devices) வாயிலாகவும் நுழைகிறோம்.

2017 டிசம்பர் 31 ஆம் திகதியின் கணிப்புப்படி 7,634,758,428 உலக சனத்தொகையில் 4,156,932,140 பேர் இணைய பயனர்களாக (Internet Users) உள்ளனர். இது உலக சனத்தொகையில் 54.4 சதவீதமாகும்.

2020 ஆகும் போதும் 5 பில்லியன் பேர் இணைய வெளியிடும் தொடர்புபடுவார்கள் என்றும் 50 பில்லியன் கருவிகள் (Devices) தொடர்பு பட்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் 75 வீதமான இணைய உள்கட்டமைப்புகள் மூன்றாம் தரப்பு மேகக் கணிமைத் திறனை வழங்கும் நிறுவனங்கள் (3rd party clouds) அல்லது இணைய சேவை வழங்குனர்கள் (Internet service providers) கட்டுப்பாட்டில் இல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இலங்கையைப் பொருத்தவரையில் 6.71 மில்லியன் பேர் இணையத்தில் பயனர்களாக உள்ளனர். அதிலும் குறிப்பாக சமூக ஊடக செயல்நிலைப் பயனர்களாக (Active social media users) 6 மில்லியன் பேர் காணப்படுகின்றனர். இவர்களுள் 92 வீதமானவர்கள் திறன் பேசி மூலமாகவே இணைய வெளியில் செயல்படுகின்றனர்.

இலங்கை தகவல் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணையத்தின் தகவல் பிரகாரம், 2009 ஆம் ஆண்டில் சுமார் 90,000 ஆக இருந்த மொபைல் புரோட்பேண்ட் சந்தாக்கள் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுமார் நான்கு மில்லியனாக அதிகரித்துள்ளன. இதன்படி கையடக்க திறன் பேசிகள் மூலம் இணையத்தில் பிவேசிக்கும் வீதம் அதிகரித்து வருவதைக் காணலாம்.

இஸ்பஹான் சாப்தீன்

2018.09.14 மீள்பார்வை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here