இதழியல் கற்கைக்கு இந்தியாவில் ஒரு களம் "காயிதே மில்லத்"

0
2

‘இதழியல் கற்கைக்கு இந்தியாவில் ஒரு களம்: காயிதே மில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகடமி’ QIAMS

காயிதே மில்லத் இஸ்மாஈல் சாஹிப் (1896-1972) இந்திய சுதந்திரத்;திற்காக போராடிய அகில இந்திய முஸ்லிம் லீக்கின் முன்னாள் தலைவர். இவர், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்பிகளுள் ஒருவராக திகழ்கிறார். பாராளுமன்ற உறுப்பினராகவும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். அவரது நினைவாக காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை நிறுவனம் (Quaide Milleth Educational and Social Trust- QUEST) உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மேடவாக்கத்தில் காயிதே மில்லத் கல்லூரி 42 வருடங்களாக இயங்கி வருகின்றது. இக்கல்லூரியில் தமிழ், முஸ்லிம் வேறுபாடுகளில்லாமல் ஆயிரக்கணக்கிலான மாணவர்கள் கற்கிறார்கள். அதன் ஒரு அங்கமாகவே காயிதே மில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகடமி (Quaide Milleth International Academy of Media Studies – QIAMS) உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்மாஈல் சாஹிபின் பேரனான எம்.ஜி. தாவூத் மியாகான் இதனை நடாத்துகிறார். இக்கல்லூரியில் பணம் செலுத்தியே கற்க வேண்டும். M82, ஸ்டாலின் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை என்னும் முகவரியில் இக்கல்லூரி அமையப்பெற்றுள்ளது. உலகத்திலுள்ள நவீன கருவிகள் இங்கு தருவிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் ஏப்ரல் 23ம் திகதி இக்கல்லூரியின் அங்குரார்ப்;பண நிகழ்வு சென்னை ஹயாட் ரீஜன்சி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் 400 பேரளவில் கலந்துகொண்டார்கள். இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் கலந்து கொண்டார். இந்தியாவின் முன்னணிப் பத்திரிகையான ‘இந்து’ வின்;; உரிமையாளர் என்.ராம் இதனை ஆரம்பித்து வைத்தார். ஊடகத் துறையில் வேகமாக ஏற்பட்டு வரும் மாற்றங்களை மாணவர்கள் புரிந்துகொண்டு கற்று, வேலைவாய்ப்புக்களை பெரும் வகையில் பாடநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நடைமுறைப் பயிற்சி சார்ந்த பாடநெறிகளே அதிகளவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையதளங்கள் போன்ற பல்வேறு மீடியாக்களில் பணியாற்றுவதற்கு தற்போதைய சூழலுக்கேற்ப ஊடகவியலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான சிறப்பு அடிப்படை பயிற்சிகளை இந்த அகடமி வழங்குகின்றது. இந்த அகடமியில் ஒரு வருட கால பட்டப்படிப்பு 2017 ஜூலை 05ல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் Convergent Journalism, Mass Communication, Visual Communication, Development Communication ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன. Non Lanier Editing, Tv Reporting and Anchoring, Photography and Videography, Digital Journalism, எழுத்தாற்றல் பயிற்சி மற்றும் மொழியாக்கம் ஆகிய தலையங்கங்களில் 06 மாத கால சான்றிதழ் கற்கை நெறியும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடநெறிகள் 2017 ஏப்ரல் 27ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

காயிதே மில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகடமியின் ஆலோசனைக் குழுத் தலைவராக இந்தியாவின் ஓய்வுபெற்ற மூத்த ஐஎஸ்எஸ் அதிகாரி மூஸா ராசா சாஹிப் அவர்களும் செயலாளராக தாவூத் மியாகான் அவர்களும் ஆலோசனை குழு உறுப்பினர்களாக மலேசியாவை சேர்ந்த தத்தோ ஸ்ரீ முஹம்மத் இக்பால், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி வே. வசந்திதேவி, சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சாதிக், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் பக்ருதீன், மூத்த பத்திரிகையாளர் திரு ஞானி, சதகதுல்லா அப்பா கல்லூரியின் செயலாளர் பத்ஹுர் ரப்பானி ஆகியோரும் உள்ளார்கள்.

இந்தியாவின் முன்னணி விரிவுரையாளர்களை உள்ளடக்கி இப்பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் Asian College of Journalism உள்ளது. அதை எம்.ராம் நடாத்துகிறார். அதில் ஆங்கில மொழியில் மாத்திரமே பாடநெறிகள் இடம்பெறுகின்றன. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் ஆங்கிலமும் தமிழும் கலந்த பாடநெறிகள் உள்ளன.

தமிழில் இதழியலை கற்பதற்கான வாய்ப்புக்கள் அங்கு மிகவும் குறைவு. அக்குறையை நிறைவு செய்யும் நோக்கில் இக்கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் யாராவது இப்பாடநெறியை படிக்க விரும்பினால் அவர்களுக்கான விடுதி வசதிகளை இலவசமாக வழங்க அவர்கள் தயாராக உள்ளார்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடத்திய எமது விஜயத்தின் போது அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்தையின் பலனாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கு அவர்கள் 4 புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளார்கள். விமான டிக்கட் செலவைத் தவிர முழுச் செலவையும் இந்தப் புலமைப் பரிசில் உள்ளடக்கியிருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்று அல்லது ஒன்றரை இலட்சத்துக்குள் பாடநெறியை தொடரும் வாய்ப்புள்ளது. தற்பொழுது அவர்கள் ஆரம்ப கட்டமாக 06 மாத கால பாடநெறியை ஆரம்பித்துள்ளார்கள். தாவூத் மியாகான் அண்மையில் இலங்கை வந்து நடத்திய கலந்துரையாடல்களின் பின்னர் முதன்முறையாக இந்தியாவின் கல்லூரியொன்றில் இலங்கை மாணவர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மீடியா போரத்தை ஒத்த ஒரு ஊடக வலையமைப்பின் உருவாக்கம் தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அவர்கள் இலங்கையின் முன்மாதிரியை பின்பற்ற தயாராக உள்ளார்கள். ஆளுநர் ஷாநவாஸ் அவர்களும் ஷாஹூல் ஹமீத் அவர்களும் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தார்கள். பல்வேறு பத்திரிகைகளிலும் பணியாற்றுகின்ற 50 ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்கள். இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் நீண்ட நேரம் உரையாற்றினார். இலங்கைக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது. இந்திய ஊடகவியலாளர்கள் சிதறிய அடிப்படையிலேயே பணியாற்றுகிறார்கள். அங்கு சென்னை முஸ்லிம் லீக்கினால் வெளியிடப்படுகின்ற மணிச்சுடர் என்னும் தினசரி பத்திரிகை மாத்திரமே உள்ளது. அது தவிர முஸ்லிம்களுக்கான பத்திரிகைகள் மிகக்குறைவு. சென்னையில் பல்வேறு ஊடகங்களில் முஸ்லிம்கள் பதவிகளை வகித்துள்ளார்கள். இவர்களை ஒன்றுபடுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தையொத்த அமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் யாப்பையும் அவர்கள் பெற்றெடுத்துள்ளார்கள். முஸ்லிம் என்று அல்லாமல் ஒரு பொதுப்பெயரில் இயங்குவதற்கும் தீர்மானித்துள்ளார்கள். அதற்கென 12 பேர் கொண்ட ஒரு கமிட்டியும் உருவாக்கப்பட்டுள்ளது.

தகவல்: என்.எம்.எமீன் – தலைவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்
தொகுப்பு: ஹெட்டி ரம்ஸி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here