இத்துப் போன அத்திவாரங்கள் | எழுவாய் பயமிலை

0
0

 – அபூ ஷாமில் –

ஜனநாயகத்தை பலரும் பலவிதமாகப் பயன்படுத்துவதுண்டு. மேற்கு நாடுகளின் ஜனநாயகம் என்பது, தமது நலனை இலக்காகக் கொண்டது. இது தமது தேவைக்கேற்ப பல்வேறு வடிவமெடுக்கக் கூடியது. ஜனநாயகம் விதித்த அனைத்து நெறிமுறைகளையும் மீறிய இஸ்ரேலின் அட்டகாசத்தை அது அங்கீகரிக்கிறது. தமது நாட்டின் விடுதலைக்காக ஜனநாயக ரீதியில் போராடும் ஹமாஸை அது பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகிறது. தனது போக்கையும் செயற்பாடுகளையும் நியாயப்படுத்துகின்ற இத்தகைய ஜனநாயகம் எமது பள்ளிவாசல்களுக்குள்ளாலும் இருந்தாலும், மேற்குலகம் சொல்லும் ஜனநாயகத்தை நாங்கள் நிராகரிப்பது போல, மேற்கின் ஜனநாயகத்தின் சாயலில் செயற்படுகின்ற பள்ளிவாசல்கள் பற்றி இங்கு பேச வரவில்லை.

இஸ்லாம் சொல்லுகின்ற ஜனநாயகத்தை பள்ளிவாசல்களுக்குள்ளால் நிலைநாட்டுவது அல்லது பள்ளிவாசல் ஜனநாயகத்தை இஸ்லாமிய மயப்படுத்துவது தொடர்பில் சமூகம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இஸ்லாத்தின் ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பிலான அறிவு மொத்தமாக சமூகத்துக்கும் குறிப்பாக பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட வேண்டியிருக்கிறது. இல்மு என்ற பகுதியில் இதையெல்லாம் அடக்க வேண்டும் என்ற அறிவு பொதுவாகவே பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் காணப்படுவதில்லை. அதனால் தான் மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாக தகுதி இல்லாதவர்கள் பதவிகளில் அமர்வார்கள் என்று கதீப் மிம்பரில் எடுத்துச் சொல்வது இவர்களுக்குப் புரிவதில்லை.

இஸ்லாம் சொல்லுகின்ற ஜனநாயக மரபில் கலந்தாலோசனை செய்வது அல்லது மசூரா செய்வது முக்கியமானதொரு அடிப்படை. மசூராவின் போது பெரும்பான்மையினரின் கருத்து முடிவாகக் கொள்ளப்படுகிறது. எந்தப் பள்ளிவாசலாவது இந்த அடிப்படையில் செயற்படுகின்றதா ? ட்ரஸ்டி போர்ட் கூட்டங்கள் எப்படி நடக்கின்றன என்பது தலைவரின் முடிவுக்கு தலையாட்டிவிட்டு வருகின்ற பலருக்கும் தெரியும். எடுக்கப்பட்ட எந்தத் தீர்மானமாவது ஏகமனதாக எடுக்கப்பட்டதா அல்லது ஏக மனிதனால் எடுக்கப்பட்டதா என்பது யாருக்குத் தெரியும் ? ஜமாஅத்தார்களுக்கு அல்லது குறித்த ஊருக்குப் பொதுவான எந்தத் தீர்மானமேதும் மக்களின் கலந்தாலோசனையுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? ஊர்மக்களின் பெரும்பான்மையான அபிப்பிராயத்தின்படி இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கிறோம் என்று தைரியமாக அறிவிப்புச் செய்கின்ற பள்ளிவாசல்களை ஏன் பரவலாகக் காணக்கிடைப்பதில்லை ? கலந்தாலோசனைக்குப் பின்னர் பெரும்பான்மை முடிவுடன் செயற்படுகின்ற எந்தப் பள்ளிவாசலும் ஜனநாயக விழுமியங்களை மீறிச் செயற்படுவதில்லை.

ஜனநாயகத்தின் தூண்களாகிய கலந்தாலோசனையும் பெரும்பான்மை முடிவும் ஒரு ஆளுகை மையத்தில் இல்லையென்றால் அதன் அடிப்படையே ஆட்டம் காணுகிறது. ஆட்டம் போடும் இப்படியான கட்டடங்களை தடுப்புச் சுவர் எழுப்பியும் பாதுகாப்பு மதில் கட்டியும் வெளிச்சுவர்களுக்கு வர்ணம் பூசியும் பாதுகாப்பதற்கு கட்டடத்தில் உள்ளவர்கள் முயற்சிப்பதும் பலனளிக்காது. கட்டடத்தை அதன்பாட்டில் விட்டு விட்டு உடைந்து விழுந்ததன் பின்னர் வெளியிலிருந்து சேதத்தை மதிப்பிடுகின்ற ஆய்வு முயற்சிகளும் சமூகத்துக்குப் பயனளிக்காது.

இதனால் தட்டுத் தட்டாய் உயர்ந்து செல்கின்ற பள்ளிவாசல்களின் ஜனநாயக அத்திவாரத்தை பலப்படுத்துகின்ற வேலைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். வெறுமனே ஜும்ஆவுக்குப் பின்னர் வாசிக்கின்ற தீர்மானங்களை தம்மீது திணித்துக் கொள்ளாமல் இந்தத் தீர்மானத்துக்கு வருவதில் தம்மீது உள்ள கடப்பாடு என்ன என்பதனை ஒவ்வொரு ஜமாஅத்தவரும் யோசிக்க வேண்டும். அங்கத்தவர்களது கலந்தாலோசனைக்கு உட்படுத்தப்படாமல் தன் மீது திணிக்கப்படுகின்ற தீர்மானங்களின் ஜனநாயகப் பெறுமானங்களை கேள்விக்குட்படுத்தும் பண்புதான் ஆரோக்கியமான ஒரு சமூகத்தின் அறுதிப் பெறுமானம்.

ஆளுகைக்கு உட்பட்டுள்ளவர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களாக இருந்தால் சாத்தான்கள் வேதமோதும் பாழடைந்த கிடங்குகளாக ஆளுகை மையங்கள் பரிணாமம் எடுக்கும் என்பதற்கு கண்முன்னே பல வரலாறுகள் இருக்கின்றன. இப்படியே காலத்தைப் போக்கிவிட்டு, இப்படித் தான் நாங்கள் சமூகத்திலே அமைதி காத்தோம் என்று அடுத்த தலைமுறைக்கு நியாயம் சொல்லத் தயாராகும் ஒரு சமூகமாகவே இன்று நாங்கள் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்.

இத்துப் போன அத்திவாரங்களை குத்துக் கல்லால் நிமிர்த்தி வைத்து சத்துக்கள் ஊட்டி தூக்கி வைக்காவிட்டால் கொத்துக் கொத்தாய் செத்துப் போன சிதிலங்கள் தான் அடுத்த தலைமுறைக்கு நம்மிடமிருந்து சொத்தாய்க் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here