இந்திய குடியுரிமைச் சட்டம். இலங்கைத் தமிழர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை ?

0
0

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை கிடைக்க வழி செய்யும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை இந்தியா நிறைவேற்றியது.

இந்த மசோதா குறித்து நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்த்தும், அதிமுக உறுப்பினர்கள் ஆதரவாகவும் பேசினர்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப. சிதம்பரம் பேசுகையில், ”இந்த அரசு தனது ஹிந்துத்துவா கொள்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவே இந்த மசோதாவை விரைந்து நிறைவேற்ற முயல்கிறது. இந்த சட்டம் செயலிழந்து போகும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிற அண்டை நாடுகள் எதன் அடிப்படையில் விலக்கப்பட்டது. ? எதன் அடிப்படையில் இந்த ஆறு மதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன? அகமதியர்கள் மற்றும் ரோஹிஞ்சாக்களை எந்த அடிப்பையில் விலக்கினார்கள்? கிறித்துவ மதத்தை சேர்த்துக் கொண்டு யூதம் மற்றும் முஸ்லிம் மதத்தை விலக்குவதற்கான காரணங்கள் என்ன?  இலங்கை தமிழர்களையும், பூட்டானின் கிறித்துவர்களையும் ஏன் இதில் சேர்க்கவில்லை? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து பேசிய மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே. ரங்கராஜன், ”இது சட்டமாக்கப்பட்டால், சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? எனவே தான் எனது கட்சி இதை எதிர்க்கிறது. இந்த நாட்டை பாழாக்காதீர்கள், அரசமைப்பை பாழாக்காதீர்கள். அதுதான் எனது கோரிக்கை” என்று கூறினார்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது நமது நாட்டின் மதச்சார்பின்மைக்கு பெருத்த அடியாக இருக்கும் என தி.மு.க. எம்.பி திருச்சி சிவா பேசினார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து மைதிமுக பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ பேசுகையில், “இந்த அருவருக்கத்தக்க, ஜனநாயகமற்ற, நியாயமில்லாத, அரசமைப்புக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது மாநிலங்களவை வரலாற்றில் கறுப்பு பக்கமாக அமையும்” எனத் தெரிவித்தார்.

இந்திய லோக்சபாவில் திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்தக் குடியுரிமைச் சட்டத்தில் இந்தியாவுக்குப் பக்கத்திலுள்ள முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மதத் துன்புறுத்தல்களுக்குள்ளாகி 2014 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் இந்தியாவுக்குள் நுழைந்த இந்து, சீக்கிய, பௌத்த, ஜைன, பார்சிய, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதக் குடிகளாகக் கருதப்பட மாட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here