இந்த நாட்டை மனநோயாளிகளின் பிடியிலிருந்து மீட்க வேண்டும்

0
5

இந்த நாட்டை மனநோயாளிகளின் பிடியிலிருந்து மீட்டு, எஞ்சியிருக்கும் குறைந்தபட்ச ஜனநாயக வெளியையேனும் பாதுகாக்க வேண்டும்.

இந்த நெருக்கடியான தருணத்தில் நேற்று வெளியிடப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவு ஒரு வகையில் மகிழ்ச்சியையே தருகிறது. சட்டவாக்கத் துறை Vs நிறேவேற்றுத் துறை போராட்டத்தில் இது தற்காலிகமான ஆறுதல்தான். ஆனால், அவசியம் தேவையான ஆறுதல்.

இப்படிச் சொல்வதால் இலங்கையில் நீதி பூத்துக் குலுங்குகிறது என்று சொல்ல வரவில்லை. இறுதித் தீர்ப்பு நேர்மையாக அமையும் என்று கண்மூடித் தனமாக நம்பவும் இயலாது. அப்படிச் சொல்லுமளவுக்கு நமது நீதித்துறையின் கடந்த கால வரலாறோ நடவடிக்கைகளோ நேர்மையாக இல்லை. அது அரசியல் அழுத்தங்களாலும் பின்கதவு டீல்களாலும் கறைபடிந்தே கிடக்கிறது. இறுதித் தீர்ப்பு எப்படியும் அமயலாம். அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போது ஒரு மெல்லிய நம்பிக்கை துளிர்த்திருக்கிறது – அவ்வளவுதான்.

ஒரு முட்டாள் ஜனாதிபதி சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு சீட்டாடுவது போல், துருப்புச் சீட்டுக் கதை சொல்லி சட்டத்தை வைத்துப் பந்தாடும் கேவலத்தைத்தான் சகிக்க முடியவில்லை. அந்த வகையில் இது ஒரு தற்காலிக ஆறுதலே.

சட்டவிரோதமாகக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மூச்சு விடுவதற்கான ஒரு வாய்ப்பை இது தந்திருக்கிறது. சட்டவாக்கத் துறைக்கும் நிறைவேற்றுத் துறைக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்றம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஜனநாயகத்தை மதிக்கும் இலங்கையரின் நிலைப்பாடு இதுதான்.

அப்போதுதான் அரசியலமைப்பின் மேலாண்மை (Supremacy of the constitution), சட்ட ஆட்சி (Rule of law) என்பன அர்த்தபூர்வமாக நிலைபெறும். நீண்ட ஜனநாயகப் பாரம்பரியம் கொண்ட இலங்கையில், காட்டுச் சட்டமும் (Jungle law) எதேச்சாதிகாரமும் கட்டுப்படுத்தப்படும். (நமது ஜனநாயகம் குறித்து நமக்கு விமர்சனம் இருப்பது வேறு கதை).

இன்றைய நாடாளுமன்ற அமர்வு குழப்பப்படலாம். ஆனாலும், இன்று நாடாளுமன்றம் கூடுகிறது என்பது மிக முக்கியமானது. எல்லா சட்ட விளையாட்டுகளையும் தாண்டி நமது நாடாளுமன்றம் கூடுகிறது. சபாநாயகர் அதிகாரம் மிக்கவராக விளங்குகிறார். ஒரு இலங்கையனாக அதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த நாட்டை மனநோயாளிகளின் பிடியிலிருந்து மீட்க வேண்டும். நம் மத்தியில் எஞ்சியிருக்கும் குறைந்தபட்ச ஜனநாயக வெளியையாவது (Democratic space) நாம் பாதுகாக்க வேண்டும். சர்வாதிகாரத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அதனால்தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை எதிர்த்து, நீண்டகாலமாக எழுதியும் பேசியும் வருகிறேன். அந்த நிலைப்பாடு இந்தக் குழப்பமான நாட்களில் மீண்டும் வலுப் பெறுகிறது.

சிராஜ் மஷ்ஹூர்
14.11.2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here