இனியும் பொறுமை இல்லை, ஞானசார தேரர் கைதுசெய்யப்பட வேண்டும்

0
1

 – ஹரிசந்திர லொகுமான்ன –

ஞானசார தேரர் என்பவர் மஹிந்த ராஜபக்ஷவினால் போருக்கு பின்னரான காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரமாகும். பன்மைத்துவ நாடான இலங்கையில் சுதந்திரம் அடைந்தது முதல் இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தி நாட்டை ஆள்வதற்கான திட்டத்தை இத்தகைய வாய்ச்சவாடல்கள் மூலமாகத்தான் ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தி வந்திருக்கின்றனர்.

ஞானசார தேரர் ஏனைய மதங்களை, குறிப்பாக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மிகவும் இழிவானதுமான கீழ்த்தரமானதுமான சொற்களைப் பயன்படுத்தியே விமர்சித்து வருகின்றனர். இது பௌத்த மதத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதோடு மாத்திரமல்லாது, மனித நாகரிகத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும்.

இவர் தொலைக்காட்சியில் அல்லது வானொலியில் பேசுகின்றபோது பௌத்த மக்கள் அவரது முகத்தை காண்பதற்கோ அவரது குரலை கேட்பதற்கோ விரும்பாமல் அவற்றை உடனடியாக அனைத்து விடுவார்கள் என உறுதியாக நம்புகின்றேன்.

அதிகமான பௌத்த மதகுருமார்களும் பௌத்த தலைவர்களும் ஞானசார தேரருடைய வெறுப்பூட்டும் பேச்சுக்களையும், செயற்பாடு களையும் எதிர்த்த வண்ணம்தான் உள்ளனர். என்றாலும் ஞானசார தேரர் இன்னும் எத்தகைய அச்சமுமின்றி இந்நாட்டிலே தனது இனவாத செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுதான் இருக்கிறார்.

2015 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற தேர்த லில் ஞானசார தேரரும் அவரது பரிவாரங்களும் படுமோசமான தோல்வியை சந்தித்திருந்தும் ஏன் அவர் சிங்கள மக்களிடம் இருந்து இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை.

உண்மையில் ஞானசார தேரர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒரு நபர். குடிபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக நீதிமன்றத்தால் அவர் குற்றம் சாட்டப் பட்டமை அனைவருக்கும் தெரிந்த விடயம். அதன்பின் இந்த நாட்டிலே இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக மதவாதக் கருத்துக்களை பரப்பி இன்னுமொரு இனக்கலவரத்தை இந்த நாட்டிலே உருவாக்குவதற்கு அடித்தளமிட்ட குற்றச்சாட்டும் இவருக்கெதிராக காணப்படுகின்றது.

உண்மையில் அவர் நீதிமன்றத்தை அவமதித் தமைக்காகவும், குர்ஆனை அவமதித்தமைக்காகவும் கைதுசெய்யப்பட்டாலும் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டார். இன்று அவருக்காக குரல் கொடுக்கக்கூடிய அவரோடு சேர்ந்து செயற்படக்கூடிய ‘மகாசேனா’, ‘சிங்ஹ லே’ போன்ற அமைப்புக்கள் இந்நாட்டிலே உருவாகியுள்ளமையானது கவலையானதொரு செய்தியாகும்.

மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சிக் காலத்தில்தான் ஞானசார தேரரும் அவருடைய பரிவாரங்களும் உருவாக்கப்பட்டார்கள். ஞானசார தேரர், தான்  விரும்பியபடி செயற்படுவதற்கான பூரண அதிகாரங்களும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவினால் வழங்கப்பட்டிருந்தது. என்றாலும் நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதனையும் இனவாத செயற்பாடுகளை முழுமையாக இல்லாதொழிப்பதனையும் முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கமும் ஞானசார தேரருக்கு எத்தகைய தடைகளும் விதியாமல் சுதந்திரமாக நடமாட விட்டிருப்பதானது கண்டிக்கப்பட வேண்டியதொன்றே.

அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் முறையற்ற பேச்சும் ஞானசார தேரரின் பாணியிலேயே அமைந்திருந்தது. குறித்த பேச்சுக்காக ஞானசார தேரர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததோடு பல்வேறு இடங்களிலும் நீதியமைச்சரின் பேச்சை உதாரணம் காட்டியும் பேசியிருந்தார். பிறகு இடம்பெற்ற நீதியமைச்சருடனான சந்திப்பும் வெற்றிகரமானதாக அமைந்திருந்ததாக அறிக்கை விட்டார். மனநல சிகிச்சை வழங்கப்பட வேண்டிய ஒருவர் தன்னை பௌத்த சமூகத்தின் ஹீரோவாக அடையாளப்படுத்த முனைவது வேடிக்கையான ஓர் அம்சமாகும்.

இறுதியாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஞானசார தேரர் முஸ்லிம்களுடைய இறைவனை மிக மோசமான முறையில் அவமதித்து, கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டிருக்கிறார். முஸ்லிம்கள் உயிருக்கு உயிராக நேசிக்கின்ற இறைவனும் மதமும் விமர்சிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் இவ்வளவு தூரம் அவர்கள் பொறுமை காப்பதானது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகின்றது.

சிங்கள மன்னர்களின் காலத்திலிருந்து முஸ்லிம்களுடன் ஒன்றாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகின்ற இந்நாட்டின் பெரும்பான்மையான சிங்கள மக்களின் நிலைப்பாடு இதுவல்ல என்பதை முஸ்லிம்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். என்றாலும் முஸ்லிம்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நிலைமை எல்லை மீறிச் சென்றால் முஸ்லிம் இளைஞர்கள் கிளர்ந்தெழுவதை தடுக்க முடியாமல் போய்விடும்.

இதற்கு மேலும் தாமதிக்காது இனவாத செயற்பாடுகளை இந்நாட்டில் இருந்து விரட்டியடிப்பதற்காக செயற்படுவது நல்லாட்சி அரசாங்கத்தில் தலையாய கடமையாகும். இன்னுமின்னும் அரசாங்கம் தாமதிப்பதானது நாட்டில் நிலவுகின்ற அசாதாரன நிலைமையை தீவிரப்படுத்தி விடும்.

அதேபோன்று சிங்கள பெயர்களை தாங்கிய சைபர் போராளிகளால் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. இவர்கள் முழு நாட்டிலும் இனவாதக் கருத்துக்களை பரப்பி சமூகங்களுக்கிடையில் பகைமையை ஏற்படுத்த முனை கின்றனர்.

அந்தவகையில், இத்தகைய கீழ்த்தரமான விடயங்களில் ஈடுபட்டுள்ள ஞானசார தேரரும் அவரது அவரது பரிவாரங்களும் உடனடியாக கைதுசெய்யப்பட்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமாக வாழ்கின்ற இந்நாட்டு பிரஜைகளின் மதத்தை அவமதித்தமைக்காக தண்டிக்கப்பட வேண்டியது ஒருபோதும் அநீதியான செயலாக எவராலும் பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் இந்த ரௌடியை அரசாங்கம் அடக்காவிட்டால் அது இந்த நாட்டுக்குப் பெரும் அவமானமாகும்.

ஏனெனில், அவர்கள் உண்மையில் பௌத்த மதத்தை அழித்துக் கொண்டிருக்கின்றனர். ஞானசார தேரர், டான் பிரசாத் போன்ற இத்தகைய வாய்ச் சொல் வீரர்கள் உண்மையாகவே பௌத்த மதத்தை பாதுகாக்க வந்தவர்கள் அல்லர் எனவும் இனமுறுகலை ஏற்படுத்தத் துடிக்கும் இவர்களுக்கெதிராக அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உரத்துச் சொல்வதற்கு இந்நாட்டிலுள்ள சிங்கள பௌத்த மக்கள் கடமைப்பட்டிருக்கின்றனர்.

நன்றி – Colombo Telegraph
தமிழில் – மிப்றாஹ் முஸ்தபா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here