இமாம் அஷ்ஷஹீத் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்களின் நினைவு நாள்

0
1

இமாம் அஷ்ஷஹீத் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்களின் நினைவு நாள் பிப்ரவரி -12.

எகிப்து நாட்டில் அல்பஹீரா மாவட்டம் அல்மஹ்மூதிய்யா நகரில் 1906 அக்டோபர் (ஹிஜ்ரீ 1324 ஷஅபான்) மாதம் அன்னார் பிறந்தார்கள். ஹசனுல் பன்னா அவர்கள் சிறுவயதிலேயே மார்க்க சேவையில் ஈடுபட்டார்; ‘தஅவா’ பணியில் ஆர்வம் காட்டினார். மத்ரசாவில் சகமாணவர்களுடன் சேர்ந்து ‘மார்க்கப் பண்பியல் மன்றம்’ ஒன்றைத் தொடங்கினார். பின்னர் ‘தீமைகள் ஒழிப்பு மன்றம்’ ஒன்றைத் தொடங்கினார். 1919இல் தமது 12ஆவது வயதில் நடந்த புரட்சியிலும் பங்கு பற்றினார். 1927ஆம் ஆண்டு ‘தாருல் உலூம்’ கல்லூரியில் பயின்று முதல் மாணவராகத் தேர்வாகிய ஹசனுல் பன்னா அவர்கள், ‘அல்இஸ்மாயீலிய்யா’ மத்ரசாவில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். 1928 மார்ச் மாதம் ஆறு பேருடன் சேர்ந்து ‘இக்வானுல் முஸ்லிமீன்’ (முஸ்லிம் சகோதரர்கள்) எனும் சீர்திருத்த மற்றும் விழிப்புணர்வு சங்கத்தை ஆரம்பித்தார்.

1948 டிசம்பர் 9ஆம் தேதி, எகிப்து ஆட்சித் தலைவர் கலீஃபா மஹ்மூத் ஃபஹ்மீ அந்நக்ராஷி, இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பிற்குத் தடை விதித்ததுடன், ஜமாஅத்தின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் அங்கத்தினர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். தம் சகோதரர்களுடன் கைதாக ஹசனுல் பன்னா அவர்கள் முன்வந்தும் அரசு அனுமதிக்கவில்லை. சில நாட்களுக்குப்பின், இமாம் ஹசனுல் பன்னா அவர்களின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்டிருந்த தற்பாதுகாப்பு ஆயுதங்களையும் திரும்பப் பெற்றார்கள். உதவியாக இருந்த அவருடைய சொந்தச் சகோதரர்கள் இருவர் பிடிக்கப்பட்டார்கள். 1949 பிப்ரவரி 12ஆம் நாள் முஸ்லிம் இளைஞர்கள் மன்றத்திற்கு முன்னால் இமாம் அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அக்குளுக்குக் கீழே குண்டு பாய்ந்த்து.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இமாம் அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், “அபாய கட்டத்தில் இல்லை; காப்பாற்றிவிடலாம்” என்றே அறிவித்தார்கள். ஆனால், அரசின் சதியால் மருத்துவமனைக்குள் இமாம் கொல்லப்பட்டார்கள். இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்களின் ஜனாஸாவில் ஆண்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்று அரசாங்கம் தடை விதித்தது. எனவே, பெண்கள்தான் அன்னாரின் ஜனாஸாவைத் தூக்கிச் சென்றார்கள். ஆனால், கிப்தியர்களில் ஒருவரான உபைத் பாஷா அரசாங்கத்தைக் கண்டித்ததுடன், பன்னா அவர்களின் குடும்பத்தாருடன் ஜனாஸாவில் கலந்துகொண்டாராம்! இது அன்னாரின் சுருக்கமான வரலாறு.

இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்கள் மார்க்கத்திற்காகவும் சமுதாயத்திற்காகவும் அரும்பாடுபட்டு, தம் இன்னுயிரை அதற்காகவே அர்ப்பணித்து வீரமரணமடைந்த பேரறிஞர் ஆவார். சின்னச் சின்ன விஷயங்களுக்காகப் பிளவுபட்டு, உம்மத்தின் ஆற்றல் சிதறடிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, ஐக்கியப்படுத்த உழைத்த உத்தமர் ஆவார். அன்னாருடைய கருத்துகளும் வழிகாட்டல்களும் இன்றைய இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஆக்கபூர்வமான, அவசியமான போதனைகளாகும். அன்னாருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

– கான் பாகவி

(நகர்வுக்கான பாதை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here