இரண்டு கண்கள் இரண்டு காட்சியா? | எழுவாய், பயமிலை

0
3

 – அபூ ஷாமில் –

மொழி வழக்கில் நாங்கள் மஸ்ஜிதை பள்ளிவாசல் என்கிறோம். பாடசாலையை பள்ளிக்கூடம் என்கிறோம். இரண்டு சொற்களுக்கும் பொதுவான பள்ளி என்ற சொல்லை எடுத்து விட்டால் வாசல் என்பதும் கூடம் என்பதும்தான் மிஞ்சும். வாசலும் கூடமும் ஒரே வீட்டின் இன்றியமையாத இரண்டு பகுதிகள்.

அதேபோல பள்ளிவாசலும் பள்ளிக்கூடமும் ஒரு ஊரின் இரண்டு கண்கள் என்பார்கள். இரண்டு கண்களுமே முன்னோக்கியே இருக்கின்றன. முன்னால் ஒரு கண்ணும் பிடரியில் பின்னால் ஒரு கண்ணும் அமைவதில்லை. இரண்டு கண்களும் இரண்டு காட்சி காணமுடியாது. எண்ணிக்கையில் இரண்டாக இருந்தாலும் அவை ஒரே பார்வையில் ஒரே காட்சியையே காண்கின்றன.

முஸ்லிம் சமூகத்தின் ஒழுங்கில்லாத பகுதிகளில் இந்த இரண்டு கண்களும் ஒன்று. முஸ்லிம் சமூகத்தின் ஒரு கண் நெற்றியிலும் மறு கண் பிடரியிலும் இருக்கிறது. பள்ளிவாசலும் பள்ளிக் கூடமும் இரு வேறு காட்சிகளையே காண்கின்றன. பள்ளிவாசல் விடயத்தில் பள்ளிக் கூடம் கண்ணை மூடிக் கொள்கிறது. பள்ளிக் கூடத்தின் விடயத்தில் பள்ளிவாசல் குருடாகிவிடுகிறது. ஒரே காட்சியை காண்பதை விட முரணான காட்சிகளையே முஸ்லிம் சமூகத்தின் கண்கள் பார்க்கின்றன. இதனால் முஸ்லிம் சமூகம் பார்வைக் கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எதிர்காலம் பற்றிய தூரநோக்கு அதனிடம் இல்லை. சமூக மாற்றம் பற்றிய தெளிவான பார்வை அதனிடம் இல்லை. நாடு எப்படி இருக்க வேண்டும், நாட்டிலே முஸ்லிம் சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பதான புலக்காட்சிகள் இந்தச் சமூகத்தின் கண்களுக்குத் தெரிவதில்லை.

இதனால் பலமான வளமான இரண்டு கண்களையும் வைத்துக் கொண்டு சமூகம் எதிர்காலம் பற்றிய பார்வையின்றி இருட்டிலே குருட்டுத் தனமாகப் பயணிக்கிறது. ஒற்றைக் கண்ணுக்குத் தெரிவதை மட்டுமே காட்சியாக எடுத்துக் கொண்டு, நொண்டிப் பயணம் செய்கிறது. இந்தப் பயணம் எப்போது எங்கே போய் முடியும் என்று யாருக்கும் தெரியாது.

பள்ளிக் கூடத்தை துன்யாவுக்கானதாகவும் பள்ளிவாசலை ஆகிரத்துக்கானதாகவும் கருதுகின்ற சமூகமாக நாங்கள் இருக்கும் வரை இந்தக் குருட்டுப் பயணம் தொடரத்தான் போகிறது. அறிவின் மையங்களாக இருந்த பள்ளிவாசல்கள் அறிவு மையத்தை அடக்கம் செய்ததனால் தான் துன்யாவை நாடுவதற்கு சமூகம் தள்ளப்பட்டது. அறநெறி போதிக்கின்ற அஹதியாக்களைக் கூட பள்ளிவாசலுக்குள் உள்வாங்காமல் தூரமாக்குகின்ற அளவுக்கு சமூகத்தின் பார்வையில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் பெரும்பாலான பௌத்த தஹம் பாடசாலைகள் பௌத்த விகாரைகளில் தான் நடக்கிறது என்பதையும் சமூகத்தின் கண்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டியிருக்கிறது.

பள்ளிக் கூடங்களில் பாடம் நடக்கிறது. பரீட்சைகள் நடக்கின்றன. மனிதனின் வளர்ச்சிக் கட்டத்தில் முக்கியமான காலங்களை பள்ளிக் கூடங்கள் இந்த விடயங்களுக்காக எடுத்து விடுகின்றன. பாடங்கள், பரீட்சைகளுக்கு அப்பால், ஒரு இலட்சிய மனிதனை உருவாக்குகின்ற எஞ்சிய பணியையாவது ஏன் பள்ளிவாசல்கள் செய்யக் கூடாது ? பள்ளிக் கூடத்தில் கிடைக்கின்ற வழிகாட்டல்கள் தான் இந்த இளம் சந்ததியினருக்குக் கிடைக்கின்றன. இவர்களுக்கு இஸ்லாமிய விழுமியங்களைப் பழக்குகின்ற இடமாக பள்ளிவாசல்கள் ஏன் பள்ளிக் கூடங்களைப் பயன்படுத்தக் கூடாது?

பள்ளிக் கூடத்தில் திணிக்கப்படுகின்ற மேற்கத்தேயக் கல்வியையும், அதனூடாக வருகின்ற உலகாயுதப் பழக்க வழக்கங்களையும் கலாச்சாரத்தையும் நாங்கள் தவிர்க்க முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த இடத்தில் தான் சமூகம் கண் திறக்க வேண்டியிருக்கிறது. இவை அனைத்தையும்  இளைஞர் சமூகம் உள்வாங்கும்வரை கண்ணை மூடிக் கொண்டிருந்துவிட்டு, உலகம் இருட்டாகிவிட்டது என்று மிம்பரில் ஏறிக் கூப்பாடு போடுவதனால் ஆகப் போவது எதுவும் இல்லை.

இந்த வகையில் சமூகம் தனது நெற்றிக் கண்ணைக் காட்டி குற்றத்திலிருந்து தப்பிக் கொள்ள முயற்சிப்பதை விடுத்து, ஒரே பார்வையில் சமூகத்தை வழிநடத்திச் செல்வதற்கு முயற்சிக்க வேண்டும். பாடசாலையும் பள்ளிவாசலும்  சிறந்த பிரஜைகளை உருவாக்குதல் என்ற பொது நோக்கில் ஒரே கோட்டில் பயணிக்கின்றன. இதனை மையப் புள்ளியாக எடுத்து சமூகம் பயணிக்க வேண்டும்.

அல்லாது போனால் சிறந்த சமூகம் ஒன்றை உருவாக்குகின்ற அறிவு மையத்தினை அடக்கம் செய்கின்ற மையவாடியாகத்தான் நமது ஆளுகை மையங்கள் சமூகத்தில் இடம் பிடித்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here