இரத்தம் சிந்தும் சுதந்திரம்

0
1

அபூ ஷாமில் | எழுவாய் பயமிலை

இலங்கையில் முஸ்லிம்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டு வரும் நிலையில் இம்முறைய சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு மத்தியில் நாட்டுக்கு எதிரான பயங்கரவாதச் செயற்பாடுகள் துளிர்விட்டு வருவதாக சிங்கள ஊடகங்கள் எச்சில் கொட்டிக் கொண்டிருக்கின்றன. வண்ணாத்திவில்லுவில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தலதா மாளிகையைத் தாக்குவதற்கா என்று சில பத்திரிகைகள் வீண் புரளியைக் கிளப்பி விட்டிருக்கின்றன.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் நாட்டுக்காக இரத்தம் சிந்திய வரலாறு ஏராளமாக இருக்கின்றது. முஸ்லிம் பெண்மணி தனது உதிரத்தைக் கொடுத்து நாட்டு மன்னனைக் காப்பாற்றியதால் தான் ம( ா) ரக்கலே என்ற பெயர் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதாக வரலாறே இருக்கிறது. இவை மட்டுமன்றி சுதந்திரத்துக்குப் பின்னரான காலங்களிலும் முஸ்லிம்கள் நாட்டுக்காக இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். அரசாங்கத்துக்கு விசுவாசமாக நடந்து கொண்டார்கள், நாட்டின் பிரிவினையை ஆதரிப்பதற்கு மறுத்தார்கள் என்பது தான் நாட்டுக்கு எதிராகப் போராடிய புலிகளால் முஸ்லிம்கள் துரத்தியடிப்பதற்கும் இரத்தம் சிந்துவதற்கும் காரணமாக அமைந்தது. இதேபோல இன்றும் சில இனவாதச் சிங்கள அமைப்புக்கள் முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கின்ற போதும் நாட்டில் குழப்பம் ஒன்று விளைந்துவிடக் கூடாது என்பதற்காக முஸ்லிம்கள் பொறுமை காத்து வருகின்றார்கள்.

இந்தத் தொடரிலேயே இம்முறைய சுதந்திர தினத்தை முன்னிட்டு உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம் என்ற தொனிப்பொருளில் முஸ்லிம்களால் பல இரத்த தான முகாம்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் செய்திகளும் கிடைத்திருக்கின்றன. காத்தான்குடியில் இலங்கை சுயாதீன ஊடகவியலாளர் போரம் இரத்த தான முகாமொன்றை ஒழுங்கு செய்துள்ளது. தெல்தோட்டையில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் இணைந்து இவ்வாறானதொரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். கொழும்பில் ஜாவத்தை ஜும்ஆப் பள்ளிவாசல் இரத்த தான முகாம் ஒன்றை பாரிய அளவில் ஒழுங்கு செய்திருக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தில் இருந்து இதுபோன்ற பல ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கலாம்.

இலங்கையில் இயங்குகின்ற இஸ்லாமிய இயக்கங்களில் ஜமாஅதே இஸ்லாமி, ஜமாஅதுஸ் ஸலாமா போன்றவைகள் நாட்டின் பல பிரதேசங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகளை முன்னெடுத்துச் செய்து வருகிறார்கள். பள்ளிவாசல்களும் கூட இந்த விடயத்தில் முன்னரை விட அக்கறை காட்டுவது தெரிகிறது.

இந்த எல்லா நிகழ்வுகளும் பற்றிய செய்திகள் நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடையும் வண்ணம் முஸ்லிம் சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அடுத்தவர்களுக்குக் காட்டுவதற்காகச் செய்யப்படுகின்ற நிகழ்வுகள் அல்ல என்றா லும் முஸ்லிம்கள் தவறாக நடந்து கொள்ளும் பொழுது மட்டுமே கண்டு கொள்கின்றவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலானவர்கள் நாட்டுக்கு நல்லதைத் தான் செய்து வருகிறார்கள் என்பதை சொல்லியாவது தெரியப்படுத்த வேண்டும்.

இதேபோல சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதிகளில் நாட்டுக்குப் புகழீட்டித் தந்த முஸ்லிம்கள் பலர் ஏனைய சமூகங்க ளால் அறியப்படாதவர்களாக இருக்கின்றார்கள். இவர்களை எல்லாம் நாட்டுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய தேவை இப்பொழுது முஸ்லிம் சமூகத்துக்கு எழுந்திருக்கிறது. ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் தத்தமது பிரதேசங்களில் நாட்டுக்குப் புகழீட்டியவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் கௌரவப் படுத்த முடியுமாக இருந்தால் அது புதிய தலைமுறையினருக் கான ஊக்கமாகவும் அமையும். மாவட்ட ரீதியாக, மாகாண ரீதியாக, தேசிய ரீதியாகவென இந்த நிகழ்ச்சிகள் நடக்க முடியும்.

இலங்கை முஸ்லிம்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நாட்டுக்குச் சொல்ல விளைகின்ற பொழுதெல்லாம் எங்கோ ஒரு இடத்தில் இடி விழுகிறது. சாணேற முழம் சறுக்கு கின்ற கதையாக நாட்டின் நல்லிணக்கச் செயற்பாடுகள் சிலவேளை களில் ஏமாற்றத்தைத் தருவதாக இருக்கின்றன. சுதந்திரப் போராட்ட காலங்களின் போது நாட்டுக்கு எதிரான சக்திகளை நாட்டுத் தலைமைகளுடன் சேர்ந்து எப்படி எதிர்கொண்டார்களோ அதுபோன்ற தொரு போராட்டம், நாட்டைக் குழப்பியடிக்கின்ற சக்திகளுக்கு எதிராக முஸ்லிம் சமூகம் எடுக்க வேண்டியிருக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் முஸ்லிம் சமூகம் தன்னால் ஒழுங்கமைக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. முஸ்லிம்கள் ஒரு சமூகமாக நின்று அன்று சுதந்திரப் போராட்டத்துக்கு வழங்கிய ஆதரவு தான் இன்று வரை நம்மைத் தலைநிமிர வைத்திருக்கிறது. மீண்டும் அவ்வாறானதொரு சூழலை ஏற்படுத்துவது முஸ்லிம் சமூகத்தின் சுதந்திர தினக் கடமையாக அமைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here