இரு நாடுகளின் சர்வதேச விருதுகளுடன் இலங்கையில் தரையிறங்கிய யூனுஸ்கான்!

0
2

– அனஸ் அப்பாஸ் –

மீரா மொய்தீன் – ஆமினா தம்பதியரின் செல்வப் புதல்வர் யூனுஸ்கான், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் உயர்தரம் கற்கின்றார்.

இவர் நெல் விதைக்கும், உரம், எண்ணெய் விசுறும் செயற்பாடுகளைக்கொண்ட இயந்திரமொன்றினை உருவாக்கி சாதனை புரிந்திருந்தார். குறித்த தானியக்க கருவி வயல் வரப்புகளில் இருந்துகொண்டே சிரமமின்றி இயக்கும் திறனைக்கொண்டமைந்துள்ளது. இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்ற செல்வன் எம்.எம்.யூனூஸ் கான், இம் மாதம் (ஆகஸ்ட்) தென் கொரியாவில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் தனது கண்டுபிடிப்பினை காட்சிப்படுத்தும் வாய்ப்பினைப் பெற்றார். ஒகஸ்ட் மாதம் 08ம் திகதி இவர் தென் கொரியா சென்றிருந்தார்.

இளவயதில் இச்சாதனையினை நிலைநாட்டிய குறித்த மாணவனுக்கு பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹீர் மற்றும் பாடசாலை நிருவாகத்தினர், ஊர்ப்பிரமுகர்கள் எனப்பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். குறித்த இயந்திரம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு சந்தைக்கு வருமிடத்து விவசாயச்செய்கையில் பாரிய மாற்றத்தைக் கொண்டு வருதோடு, பணச்செலவீனத்தையும் குறைக்குமென்பது நிச்சயம். அதே நேரம், விவசாயத்தை நம்பியிருக்கும் வாழைச்சேனை பிரதேச விவசாயிகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாக குறித்த இயந்திரம் அமையுமென எதிர்பார்ப்பதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

சவூதி அரேபியாவில் உள்ள தாயிப் பல்கலைக்கழகத்தில் ஒரு மின் பொறியியலாளராக பணியாற்றும் இவரது தந்தையின் வழிகாட்டலும், உயிர்ப்பான பரம்பரை அலகுமே தான் இந்நிலையை அடைய காரணம் என்கின்றார் எம்.எம்.யூனூஸ் கான்.

இலங்கையின் தோமஸ் அல்வா எடிசனாக தான் மிளிர வேண்டும் என்பதும், அதி நவீனமுறையில் தனது கண்டுபிடிப்புக்களை சந்தைப்படுத்துவதுமே இலக்கு என்கின்றார் இந்த இளம் கண்டுபிடிப்பாளர்.

இந்த சமுதாயத்துக்கு தொழிவாய்ப்புகளை வழங்கும் ஒரு காரணியாக தொழிற்பட இன்றே உறுதிபூண்டுள்ள இவர், இலங்கையின் தலை சிறந்த கண்டுபிடிப்பாளர் வரிசையில் இடம்பிடிப்பதுடன், ஏக காலத்தில் எதிர்கால சிக்கல்களை, சவால்களை எளிமையாக முறியடிக்க சிறந்த சட்ட வல்லுனராக வர வேண்டும் என்பது தனது மனதில் தற்போது உதித்துள்ள புதிய இலக்கு என்பதாக எடுத்தியம்பினார்.

அல்ஹம்துலில்லாஹ்! தனது பெற்றோர், சகோதரர்கள், போட்டிகளின்போது ஊக்கியாக இருந்து உதவிய ஆசிரியர் சப்ராஸ் அஹமத், ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம், தேசிய மாணவர் படையணி, பாடசாலை, சமூகம் என்பன இன்றுபோல் என்றும் தனக்கு பக்கபலமாக இருப்பதை அவர் விரும்புகின்றார்.

தென் கொரியா அனுபவம் இவருள் பாய்ச்சிய தாக்கத்தை இவரது புதிய சொற்கள் அழகாக வர்ணித்தன. இலங்கையிலிருந்து வழிகாட்டியாக 3 பேர் தேசிய ரீதியில் வென்ற இவர்கள் 12 பேரை தென் கொரியாவுக்கு அழைத்து சென்றிருந்தனர்.

வாழைச்சேனை அந்நூர் தேசிய கல்லூரி வரலாற்றில் சர்வதேச சுற்றுலாவுக்காக ஒருவர் மாலைதீவுக்கும், இன்னொருவர் ஸ்விட்சர்லாந்திற்கும், தரம்-5 இல் ஒரு சிறுமி ஜப்பான் சுற்றுலாவும் சென்று வந்திருந்தாலும், சர்வதேச போட்டியோன்றிற்கு தெரிவான முதல் சந்தர்ப்பமாக தனது தென் கொரியா அனுபவத்தை அடையாளப்படுத்தினார்.

உயர்தர தொழிநுட்பப் பிரிவின் முதல் வருட மாணவரான எம்.எம்.யூனூஸ் கான், தற்போது ஆங்கில பாடநெறி ஒன்றுடன் Robotics பாடநெறியையும் ஆர்வத்துடன் கற்று வருகின்றார்.

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் Nano tech துறையில் கற்றுவரும் வாழைச்சேனையை சேர்ந்த சகோதரர்  ஹசீம்தீனை அடுத்து கண்டுபிடிப்பாளராக இவரே ஊரளவில் பேசப்படுகின்றார். புற்றுநோய்க்கான மருந்து ஒன்றை ஹசீம்தீன் கண்டுபிடித்ததாக இவர் சொல்வதுடன், அவருடன் இணைந்து எதிர்காலத்தில் பணியாற்ற தனக்கு பெரிதும் விருப்பம் என்கின்றார்.

புத்தக வாசிப்பு, செய்தித்தாள் உறவு என்பன மிகவும் குறைவு என்றாலும், அவற்றை நிவர்த்திக்க வலைதளங்கள் மூலமான செய்தி சேகரிப்பை செய்வதாக குறிப்பிட்டார்.

முஸ்லிம் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய தேடலில் அதிக ஆர்வத்துடன் தேடலில் உள்ள யூனுஸ்கான், முஸ்லிம் சமூகத்துக்கும், கற்ற பாடசாலைக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை பாராட்டுக்குரியதே.

“கண்டுபிடிப்புகளை எவ்வாறு இன்னும் திறன் பட செய்வது தொடர்பாக சில அறிவுறுத்தலும், எங்களுக்கான சந்தை வாய்ப்புகளை எவ்வாறு ஏற்படுத்துவது தொடர்பாக சில வழிமுறைகளும் எமது தென் கொரியா பயணத்தில் வழங்கப்பட்டது. மற்றும் உலகில் முன்னணி வாகன உற்பத்தியான “KIA” நிறுவனத்தின் பிரதான உற்பத்திசாலைக்கு அழைத்து சென்று எவ்வாறு car உற்பத்தி செய்யப்படுகிறது என்று நேரில் காட்டப்பட்டது.” என்றார் அடுத்த மாதமும் ஒரு போட்டிக்கு தயாராகும் யூனுஸ்கான்.

தென்கொரியா பயணத்தில் தன்னை செம்மைப்படுத்தி, புதிய தெம்புடன் இலங்கை வந்துள்ள செல்வன் யூனுஸ்கான் வெறுமையாக வரவில்லை, தனது கண்டுபிடிப்புகளுக்காக ஈரான், கொரியா ஆகிய இரண்டு நாடுகளின் சர்வதேச விஷேட இரு விருதுகளுடன்தான் தரையிறங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here