இலங்கையின் கௌரவ நீதியரசர் உட்பட உயர்நீதிமன்ற அனைத்து நீதிபதிகளுக்கும் நாட்டின் நலன் கருதி முன்வைக்கும் மேன்முறையீடு

0
1

01. இந்த மேன்முறையீட்டின் உள்ளடக்கம் குறித்து இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது. பொது மக்களின் வாக்குகளால் நிறைவேற்று அதிகாரத் திற்காகவும், பாராளுமன்றத்திற்காகவும், மாகாண  சபைகளுக்காகவும், பிரதேச சபைகளுக்காகவும் தெரிவாகின்ற மக்கள் பிரதி நிதிகள் மக்கள் தம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைத்து சட்ட விரோதமாக அரச சொத்துக்களை கொள்வனவு செய்தல், அரசுடன் வியாபாரங்களை மேற்கொள்ளல், அரசின் டென்டர் நடைமுறைகளை மீறி அவற்றின் ஊடாக பயன் பெற்றுக்கொள்ளல்,   தமது அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக சட்டத்திற்கு முரணான அடிப்படையில் அனுமதி பெற்றுக் கொள்ளல் போன்ற அடிப்படையில் நீண்ட காலமாக செயற்பட்டு வருகின்றனர்.

இந்த சட்ட விரோத செயற்பாடானது முழு அரசையும் ஊழலுக்கு உட்படுத்தல், அரசினால் ஈட்டப்படும் வருமானங்களின் அளவு குறைவடைதல், முழு சுற்றாடலும் பாதிப்புக்குள்ளாகுதல், நாடு வெளிநாட்டுக் கடன்களில் தங்கியிருக்க வேண்டிய வங்குரோத்து நிலைக்குள்ளாதல், சட்ட விரோத அனுசரணைகள் கிடைக்கப் பெறாத ஏனைய நடுநிலையான வியாபாரங்களின் முன் னேற்றத்திற்கு தடை ஏற்படல், நாட்டிற்கு பயன் தரக்கூடிய விதமான வெளிநாட்டு முதலீடுகளின் வருகை தடைப்படல், பொது மக்கள் மீது அதிக வரிச் சுமை சுமத்தப்படல். உழைப்புக்கான சந்தையை மந்தகரமாக மாற்றி தொழில் அற்றோர் தொகையை அதிகரித்தல், படித்தவர்கள் நாட்டைத் துறந்து செல்லல், வறியவர்கள் மேலும் மேலும் வறுமைக்குட்படுத்தப்படல், சட்ட வரையறைக்கு கட்டுப்படாத வியாபாரங்கள் உருவாகுதல், சட்டத்தின் ஆளுமை வலு குறைதல், அரசியலமைப்பு விகாரமாக்கப்படல், மக்கள் பிரநிதிகள் நியமிக்கப்படுவதன் நோக்கம் மற்றும் அவர்களிடம் இருக்க வேண்டியதான தன்மைகள் விகாரமாதல் என்ற அடிப்படையில் முழு இலங்கையும் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார, சுற்றாடல் போன்ற அனைத்துத் துறைகளிலும் பின்நோக்கிச் செல்லும் நாடு என்பதாக உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும் தரப்படுத்தல்களின் ஊடாக அடையாளப்படுத்தப்படலாம் என்பதுடன், அதன் ஊடாக முழு இலங்கை வாழ் மக்களினதும் அடிப்படை உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

02. பொதுமக்களின் சார்பாக முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையை மக்களின் நலனை நோக்காகக் கொண்டு வழக்கு ஒன்றாக முன்வைக்காது, மக்கள் முறைப்பாடாக நாம் உயர் நீதிமன்றத்திற்கு முன்வைப்பது இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாரதூரம் என்பவற்றை கருத்தில் கொண்டேயாகும். மேலும் இப்பிரச்சினையை கருத்தில் கொண்டு அதனைத் தீர்த்து வைப்பதற்கான அதிகாரமும் இயலுமையும் உயர் நீதிமன்றத்தின் வசம் இருப்பதனால் உயர் நீதிமன்றத்தில் பூரண நம்பிக்கை வைத்து அவ்வாறு செயற்படுமாறு எமது வழக்கறிஞர்கள் வழிகாட்டியதுடன் அவ்வழிகாட்டல்கள் எமக்கு நம்பிக்கையை வழங்குவதாக இருந்ததுடன் அந்த வழிகாட்டல் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதனாலாகும்.

03. மக்களின் வாக்குகள் மூலமாக ஜனாதிபதியாக அல்லது பாராளுமான்றத்திற்காக தெரிவாகும் ஆட்சி அதிகாரத்தை தன்னகத்தே பெறுகின்ற எவரும் அரசாங்கத்துடன் வியாபார கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடக்கூடாது என்பது ஜனநாயக அடிப்படையில் சிந்திக்கும் எவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு சித்தாந்தமாகக் குறிப்பிடலாம். இது தொடர்பில் அனைத்து ஜனநாயக நாடுகளிலும் கடுமையான சட்ட திட்டங்கள் காணப்படுவதுடன், இலங்கையிலும் 1977 ஆம் ஆண்டு வரையில் இது தொடர்பான கடுமையான கொள்கைகள் பின்பற்றப்பட்டன. 1977 ஆம் ஆண்டு  முதல் இது தொடர்பான சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதை மந்தமாக்கும் அடிப்படையிலான நடைமுறையொன்று இன்றுவரை நிலவி வருகின்றது. அதன் காரணமாக மக்கள் பிரதிநிதிகளிடம் சட்டம் தொடர்பில் இருக்க வேண்டிய அச்சம் இல்லாமலாக்கப்பட்டு இந்த விடயம் தொடர்பிலான சட்டங்களை மீறும்  நிலை பாரிய அளவில் இடம்பெறும் ஒரு விடயமாக உருவெடுத்துள்ளது.

04. பாரிய அதிகாரத்துடன் இயங்கும் மக்கள் பிரதிநிதிகளால் தம்மிடம் பொறுப்பளிக்கப்படும் பெறுமதியான பொதுச் சொத்துக்களை தங்களது குடும்பத்தவர்கள், தமது கட்சியின் அங்கத்தவர்கள், தமது உற்ற நண்பர்கள் ஆகியோருக்கு பெயரளவிலான விலைகளுக்கு விற்றுவிடும் ஊழலான முறையொன்று உருவாகியுள்ளது. இந்த முறையின் கீழ் மக்கள் பிரநிதிகளின் பெரும்பாலானவர்கள் அரசுடன் வியாபார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகளாக மாறியுள்ளனர். அரச காணிகள், அரசு சார்ந்த டென்டர்கள், அரசு சார்ந்த வியாபார அனுமதிப் பத்திரங்கள் போன்ற துறைகளிலேயே இந்த சட்ட விரோத செயற்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது.

05. மக்கள் பிரதிநிதிகள் அரசுடன் வியாபாரத்தில் ஈடுபடுவதானது சட்டவிரோதமான செயற்பாடாகக் கருத முடியும் என்றபோதிலும், 1977 ஆண்டு முதல் இன்று வரை அரச தலைவர்களும் பயன் அடையும் விதத்திலும் அவர்கள் அறிந்த நிலையில் பூரண அனுசரணையுடனுமே இடம் பெற்றுவருகின்ற செயற்பாடாகவே கருதப்பட வேண்டும்.

06. அது தொடர்பில் கீழ்வரும் உதாரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அ) ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன அவர்கள் தனக்குச் சொந்தமாக இருந்த கவனிப்பாரற்றுக் கிடந்ந தென்னங் காணி ஒன்றை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு வழங்கி அந்த ஆணைக்குழு வசமிருந்த வளமான தென்னங் காணி ஒன்றை சொந்தமாக்கிக் கொண்டார். அத்துடன் குறித்த ஆணைக்குழுவுக்கு சொந்தமாக இருந்த பெறுமதியான கட்டிடங்களை பெயரளவு விலை ஒன்றில் கொள்வனவு செய்வதற்காக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நெருங்கியவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கினார்.

இந்த செயற்பாட்டை முன்மாதிரியாகக் கொண்டு அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியினர், குறித்த ஆணைக்குழு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை என்பன வசம் இருந்த காணிகளை தமது குடும்ப அங்கத்தவர்கள், கட்சியின் உறுப்பினர்கள், உற்ற நண்பர்கள் ஆகியோருக்கு பெயரளவில் குறிப்பிடும் விலைக்கு பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் அளித்தனர். இதன் மூலமாக மாத்திரம் ஏற்பட்ட நட்டம் டிரில்லியன் ரூபா அளவில் இருக்கலாம்.

ஆ)  பொருளாதார அடிப்படையில் பாரிய பெறுமதிமிக்க சிக்கனமான வளமாகக் குறிப்பிடப்படும் தொலைக்காட்சி, வானொலி அலை வரிசைகள் ஒரு பொதுச் சொத்தாகக் கருதப்படுகின்றது. இந்த வளங்கள் மக்களின் பயன்பாட்டுக்காக மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது உறுதிசெய்யப்படும் அடிப்படையில் பல்வேறு வகையான நிபந்தனைகளுக்கு உட்படுத்தி பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யும் நடைமுறையொன்றையே ஜனநாயக நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன. அத்துடன் அவை பாரிய தொகைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியின் காலப்பகுதி யிலிருந்து வானலைவரிசைகள் விற்பனை செய்யும் நடைமுறை ஆரம்பிக்கபடுகின்றது. அது தொடக்கம் இன்று வரை வானலைவரிசைகள் ஒரு பெயரளவு விலையிலேயே தமது நெறுங்கியவர் களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமது நெறுங்கியவர்களுக்கு குறைந்த விலையில் விற்கப்படும் வானலை வரிசைகள் மூன்றாம் நபர்களுக்கு விற்பனை செய்தல் ஊடாக ஈட்டிய வருமானம் மிக விசாலமானது. இதன் ஊடாக அரசுக்கு கிடைக்காமல் போன வருமானம் நூறு பில்லியன் ரூபாவிலும் அதிகமாகும்.

இ) மதுபான விற்பனை நிலைய அனுமதிப் பத்திரம் என்பது பொதுவாக அரசாங்களுக்கு வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு ஊடகமாகும். ஆனால் இலங்கையில் இவ்வாறு பெற்றுக் கொள்ள முடியுமான வருமானங்களை தடுக்கும் அமைப்பில் பெயரளவுப் பெறுமானத்திற்காகவே மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவே விற்பனை செய்யப்பட்டன. இதன் விளைவாக ஆளும் கட்சியின் உறுப்பினர்களில் அதிகமானவர்கள் நேரடியாக அல்லது வேறு விதமாக மதுபான உற்பத்தியில் ஈடுபடுவோராகினர். பாரிய அளவிலான மதுபான உற்பத்திச்சாலை உரிமையாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே காணப்படுகின்றனர். மீள்ஏற்றுமதி, மணல், கல், மண், மரம், போக்குவரத்து அனுமதிப் பத்திர உரிமையாளர்களும் மக்கள் பிரதி நிதிகளின் பட்டியலில் காணப்படுகின்றனர்.

07. 1977 ஆம் ஆண்டின் பின்னரான காலப் பகுதியில் கூட அரசுடன் வியாபார நடடிக்கைகளில் ஈடுபட்டதாகக் காரணம் காட்டி இரண்டு சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் (எல்பட்  சில்வா, ராஜித சேனாரத்ன) பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டது. குறித்த நீதிமன்றத் தீர்ப்பு எழுதப்பட்டமை உலர்வதற்கு முன்னதாக வேறு முறைகளில் அவர்களுக்கு பாராளுமன்ற அங்கத்துவம் வழங்குவதற்கு அன்றைய தலைவர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்ட எல்பட் சில்வாவுக்கு துண்டு முறையின் அடிப்படையில் கும்புறுபிடிய தொகு திக்கு நியமிப்பதற்காக ஜே.ஆர் ஜயவர்தன நடவடிக்கை மேற்கொண்டார். பாரளுமன்ற உறுப்பினர் பதவி துறந்த ராஜித சேனாரத்னவுக்கு ரணில் விக்ரமசிங்க மூலமாக தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற அங்கத்துவம் வழங்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட நாட்டின் அரசியல் தலைவர்கள் தயாராக இல்லை என்பதுடன், தமது சொத்துக்களை அதிகரித்துக் கொள்வதற்காக நடைமுறையில் இருக்கும் முறைமையைப் பாதுகாத்துக் கொள்வதே அவர்களது தலையாய நோக்கம் என்பதனை மேற்படி இரண்டு சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

08. நாட்டின் பொதுச் செத்துக்களின் தற்காலிக பொறுப்பாளர்களாக செயற்படும் மக்கள் பிரதிநிதிகளான ஆட்சியாளர்கள், தமது பொறுப்பிலிருக்கும் சொத்துக்களை முறையற்ற அமைப்பில் பயன்படுத்தல் காரணமாக அரசுக்கு நீண்ட காலமாகவே நட்டம் ஏற்பட்டு வந்துள்ளது. அதன் விளைவாக நாட்டின் வருமானம் குறைவடைந்து வெளிநாட் டுக் கடன்கள் மீது தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாவதுடன் நின்றுவிடாது, முழு அரசும் ஊழல் மயமாவதற்குக் காரணமாகவும் அமைந்துள்ளது.

அதன் ஊடாக அரசியல் யாப்பின் 12 (1) ஏற்பாடுகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட விதத்தில் இந்த மேன்முறையீட்டில் கையொப்பமிடும் எம் அனைவரினதும் மட்டுமன்றி முழு நாட்டு மக்களினதும் அடிப்படை உரிமை கடுமையாகவும் தொடராகவும் மீறப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கின்றோம்.

09. இந்தப் பிரச்சினையின் ஆழ அகலம் மற்றும் அதனது முக்கியத்துவம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு,

அ) இது குறித்து நீதிமன்ற பரிசோதனை ஒன்றை ஆரம்பிக்குமாறும்,

ஆ) மக்கள் பிரதிநிதிகள், அவர்களாக அல்லது அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் மூலமாக அல்லது வேறு ஒருவர் மூலமாக அரசுடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பிலும், சட்டத்திற்கு புரம்பாக அல்லது அரசுக்கு நட்டம் ஏற்படும் விதத்தில் அரச சொத்துக்களை அவர் களுக்கு வழங்குவது தொடர்பிலும், குறித்த காலப் பகுதிக்குள் அவசரமாக கணக்காய்வு ஒன்றை மேற்கொண்டு குறித்த தகவல்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு கணக்காய்வாளருக்கு கட்டளையிடுமாறும்,

இ) மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளில், விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள், விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்ட ஆனால் வழக்குத் தொடரப்படாத முறைப்பாடுகள் மற்றும் விசாரணை மேற்கொள்ளப்படாத முறைப்பாடுகள் குறித்து அறிக்கை ஒன்றை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு குறித்த ஆணைக் குழுவிற்கு கட்டளையிடுமாறும்,

ஈ) தேர்தல்களுக்கு வேட்பாளர் முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளும் போது வேட்பாளர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது வேறு நபர்களால் ஊடாக அரசுடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்பதாக உறுதிமொழி பெறுவதை கட்டாயமாக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கு கட்டளையிடுமாறும்,

உ) சட்டத்திற்கு முரணாக அரசுடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அல்லது அரச சொத்துக்களை தமது உடமையாக்கிக் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்து அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமையை பொறுத்தமான காலப்பகுதிக்கு தடை செய்யுமாறும், குற்றவாளியான குறித்த நபர்கள் மூலமாக சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் கொடுக்கல் வாங்கல் ஊடாக அரசுக்கு ஏதும் நட்டம் ஏற்பட்டிருப்பின் அவை அவர்களிடமிருந்து அறவிடப்படுவதற்காக அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யுமாறு நீதிபதிக்கு உத்தரவிடுமாறும்,

ஊ) நீதிமன்றத்திற்கு புலப்படுகின்ற வேறு ஏதேனும் பொறுத்தமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்,

கீழே கையொப்பமிடும் நாம் அனைவரும் கௌரவ நீதியரசர்கள் உயர் நீதிமன்றத்தின் ஏனைய நீதிபதிகளிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

இதில் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன், தியாகடுவெ சோமானந்த தேரர், பொறியியலாளர் திலக் சில்வா, முன்னாள் கணக்காய்வாளர் மாயா துன்னே, Dr. ஸைபுல் இஸ்லாம், சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எச்.எம். பழீல், பேராசிரியர் இஸ்மாயில் மௌஜூத், திரைப்பட இயக்குனர் அசோக ஹந்தகம, பராக்கிரம கிரயெல்ல, வணபிதா சரத் இத்தமல்கொட, பேராசிரியர் அன்டன் மீமன, பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம். தௌபீக், பொறியியலாளர் குப்ரான் இஸ்மாயில், கலாநிதி நிமல் சந்திரசிரி, கலாநிதி ராஜன் ஹூல், முன்னாள் கல்விப் பணிப்பாளர் டி.எம்.பிரேமவர்தன, பொறியியலாளர் திலக் டி சில்வா, ஊடகவியலாளர் சீதா ரஞசனி, சிரேஷ்ட சட்டத்தரணி நீல் ராஜகருணா, திரைப்பட இயக்குனர் விமுக்தி ஜயசுந்தர, எழுத்தாளர் மஹிந்த ஹத்தக, ராவய பிரதம ஆசிரியர் விமலநாத் வீரரத்ன உட்பட 62 பேர் கைச்சாத்திட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here