இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் காணவில்லை. 06 சிஐடி குழுக்கள் தேடியும் இதுவரை பலனில்லை

0
46

மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் வர்த்தக தொழில்துறை அமைச்சராக இருந்த ரிஷாத் பதியுதீனைக் கைது செய்வதற்கு ஆறு பொலிஸ் குழுக்கள் அமர்த்தப்பட்டும் இதுவரை அவர் கைது செய்யப்படாத நிலையில் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ரிஷாத் இருக்குமிடத்தை பாதுகாப்பு அதிகாரி தெரியாமல் இருக்க முடியாது என்பதனாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரிஷாத் பதியுதீனின் வாகனங்கள் இரண்டும் அவரது இரு ஆயுதங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு ரிஷாதின் அமைச்சொன்றில் கணக்காளராகக் கடமையாற்றிய அழகரத்னம் மனோரஞ்சனையும் சிஐடியினர் கைது செய்துள்ளனர்.

2019 தேர்தலின் போது வடக்கிலிருந்து இடம் பெயர்ந்தவர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்களிக்கச் செல்வதற்காக இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 222 பஸ்களைப் பயன்படுத்தி பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமைக்காக ரிஷாத் தேடப்பட்டு வருகிறார். இந்த பஸ்களை தான் உரிய முறையில் பணம் செலுத்தியே பெற்றதாகவும் இதற்கான அனுமதியை நிதியமைச்சிலிருந்து பெற்றதாகவும் அவர் முன்னர் தெரிவித்திருந்தார்.  இந்த வேளையில் மங்கள சமரவீர நிதியமைச்சராகக் கடமையாற்றினார்.

இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றுவதற்காக வில்பத்துவை அண்டிய பிரதேசங்களில் ரிஷாட் காடுகளை அழித்தார் என முன்னர் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பல தேர்தல்கள் இதனையொட்டி நடந்து முடிந்திருந்த நிலையில் கடந்த தேர்தலின் போது ஈஸ்டர் தாக்குதல் தாரியுடன் ரிஷாத் தொடர்புபட்டிருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தற்பொழுது பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  20 ஆவது திருத்தம் தொடர்பில் அவரது பெயர் இணைத்துப் பேசப்பட்டு வந்த வேளையிலேயே அவர் தற்பொழுது தலைமறைவாகி இருக்கும் செய்தி பேசுபொருளாகியிருக்கிறது. 20 ஆவது திருத்தம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் ரிஷாட் பதியுதீனுக்கு நாட்டைவிட்டுச் செல்லமுடியாதவாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தான் கைது செய்யப்படுவதற்கு எதிரான தடை உத்தரவொன்றைக் கோரி காணாமல் போயுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் அவரது சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளார். வாக்காளர்களை அழைத்துச் செல்வதற்காக அரசுக்குச் சொந்தமான பஸ் வண்டிகளை நிதி அமைச்சின் அனுமதி பெற்று பணம் கொடுத்தே பெற்றுக் கொண்டதாகவும் இது சட்டவிரோதமல்ல எனவும் குறிப்பிட்டுள்ள ரிஷாதின் சட்டத்தரணி பொதுச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்த குற்றமொன்றை அவர் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here