இஸ்லாமிய புத்தாண்டின் நுழைவாயிலினிலே

0
4
  • முஹம்மத் பகீஹுதீன்

தற்போது ஹிஜ்ரி 1442ஆம் ஆண்டு மலர்கிறது. கடந்த ஆண்டை மீளாய்வு செய்து இந்த ஆண்டிற்காக திட்டமிட பெருத்தமான நேரம் இது. அழிந்து போகும் வாழ்விற்கு திட்டமா? என்ன இது என எமது உள்ளம் கேள்வி எழுப்பும். ஆனால் வாழ்க்கையில் இலக்கு நோக்கி பயணிக்க திட்டம் போடுவது ஒரு கட்டாயக் கடமை என்பதை வாழ்வியல் நியதி வேண்டி நிற்கின்றது. இறைவேதம் அல்குர்ஆன் திட்டமிட்ட வாழ்வே அர்த்தமுள்ளதாக அமையும் என அழுத்தமாக கூறுகிறது.

வாழ்க்கை ஒரு சோதனைக் களம் என்பதே இஸ்லாம் கற்றுத்தரும் தெளிவான செய்தி. பரீட்சை முடிய முன்பு திட்டமிட்டு மிகச்சரியாகவும் மிக அழகாகவும் செயற்பட அது தூண்டுகிறது. ஓவ்வொரு ஆத்மாவும் நாளைய நிரந்தர வாழ்விற்காக முன்கூட்டியே என்ன சமர்ப்பித்துள்ளது என்பதை நோக்கட்டும் என இறை மறை அல்குர்ஆன் போதிக்கின்றது. உலகில் வாழும்போது நிஜமான மறுமை வாழ்விற்காக மிக நல்ல அமல்களை, மரணித்த பின்னரும் நன்மை தரும் ஸதகா ஜாரியா எனப்படும் நிலையான தர்மங்களை அனுப்பிவைக்க வேண்டியுள்ளது. இது திட்டமிடலை வேண்டி நிற்கின்ற ஒரு விடயம். இறை தூதரின் ஒவ்வொரு நகர்வும் திட்டமிட்ட இலக்கு நோக்கிய பயணமாகவே காணப்பட்டது. எனவே எமது மறுமை வாழ்வுக்காக திட்டமிட்டு செயற்படுவோம்.

வாழ்க்கை என்பது சில நாட்கள். ஒரு நாள் கழியும்போது உன்னில் ஒரு பகுதி நீங்கிவிடுகிறது. நீ ஒரு எட்டு முன்னெடுத்து வைக்கும்போது புதைகுழியை நோக்கி நெருங்குகிறாய். இந்த ஆண்டின் இறுதி நாட்கள் நற்செயல்களுடன் முடிவடைவது எவ்வளவு நல்லது! அடுத்த ஆண்டின் ஆரம்பம் இறைவழிபாடுகளுடன் துவங்குவது எவ்வளவு அழகானது!

மலர்ந்தும் மலராத இந்த வாழ்வு நிறைவேறாத ஆசைகளுடன் பாதியிலே வாடிவிடும். ஆனால் ஆன்மா மரணிப்பதில்லை. அது மீண்டும் மண்ணறையில் இருந்து எழுந்து வரும். விடிந்தும் விடியாத ஒரு காலைப் பொழுது அல்லது மறைந்தும் மறையாத ஒரு மாலைப் பொழுது தான் வாழ்ந்தோம் என்று கூறும். இது தான் சத்தியம். இந்த குறுகிய உலக வாழ்வு சோசம் நிறைந்ததாகவே இருக்கும். இந்த உண்மையை புரிந்து கொள்வோம். அதில் வசந்தத்திற்கான பாதையை அமைத்துக் கொள்வதே மனித வாழ்வின் திட்டமாக அமைய வேண்டும்.

சுய விசாரணை

1. கடமையான வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்துவோம். தொழுகை, நோன்பு, போன்ற கடமைகளில் குறை இருக்கிறதா எனப்பார்ப்போம். முதலில் அதனை சீர்செய்து கொள்வோம்.

2. பாவங்கள் வாழ்வின் கறைபடிந்த பக்கங்கள். அதை தௌபாவின் மூலம் அகற்றிவிடுவோம். நன்மைகள் அதிகம் செய்து தீமைகளை நீக்கி விடுவோம்.

3. அவையவங்களை விசாரணை செய்வோம். கை, கால், கண், காது, வாய், வயிறு என அனைத்து உறுப்புக்களையும் விசாரிப்போம். யார் விருப்பத்திற்காக செயற்படுகிறது என்பதை அவதானிப்போம். இறை திருப்தியை அடிப்படியாக கொண்டுள்ளதா என்பதை உன்னிப்பாக கவனிப்போம்.

4. பொடுபோக்கு, அலட்சியமாக வாழ்வது பெருந் தவறு என்பதை உணர்வோம். அதிகமாக திக்ர் செய்வதன் மூலம் உள்ளத்தை நிரப்புவோம்.

5. ஒவ்வொரு செயலுக்கு முன்பும் பின்பும் விசாரணை செய்யும் பழக்கத்தை உருவாக்குவோம். யாருக்காக செய்கிறோம். ஏன் செய்கிறோம். மறுமையில் இதற்கு எப்படி பதில் சொல்லப் போகின்றோம் என யோசிப்போம்.

6. மலரும் புத்தாண்டு இலக்கு நோக்கிய பயணமாக அமையட்டும். இந்த ஆண்டின் இலக்கு உயர்ந்த சுவர்க்கமாக ஏன் இருக்கக் கூடாது? ஜன்னதுல் பிர்தௌஸை அடைவது தான் இந்த வருட உயர்ந்த ஆசை என்ற கனவுடன் வாழ முற்படுவோம்.

7. குடும்பம் சமூகக் கட்டமைப்பில் மிக முக்கிய ஒரு அலகு. அதன் பாதுகாப்பு அமைதி பேணப்படுவது கட்டாயக் கடமை. எனவே குடும்ப உறவுகளைப் பேணி, கசப்புணர்வுகளை மறந்து, சமாதானமாகி வாழ்வதற்கு சிறந்த காலப்பகுதியாக இந்த மாதங்களை அமைத்துக் கொள்வோம்.

புத்தாண்டுக்கான கொண்டாடங்கள்

எமது நாட்டுச் சூழலில் சாந்தி சமாதானம் பற்றிய எண்ணக்கருவை சுமந்து வரும் புத்தாண்டை எப்படி நடைமுறைக்கு கொண்டு வரலாம் என்று சிந்திப்பது காலத்தின் தேவையாகும். நாட்டில் சமாதானத்தை வலியுறுத்தும் பாடல்கள், நாடகங்கள், கவிதை அரங்குகள், பட்டிமன்றங்கள் போன்ற கலை கலாச்சார நிகழ்ச்சிகளை படைப்பதன் ஊடாக இஸ்லாமிய புத்தாண்டின் மகிமையை வெளிக்ககொணர முடியும். உண்மையில் அவை தாக்கமிக்கதாகவும் அமையும்.

இறுதியாக இஸ்லாம் ஒரு கொள்கை. அதை பின்பற்றுவதால் கிடைப்பது சாந்தி, அமைதி, நிம்மதியான வாழ்வு. வரலாறு அதற்கு சான்று. மனித நாகரிகங்கள் இந்த உண்மையை கண்கூடாகக் கண்டன. அன்று போன்று இன்றும் சாந்தி வழிக்கு வேராக இருக்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரிகள் இருக்கவே செய்கின்றனர். அவர்கள் இஸ்லாம் என்றால் அதன் மறுபெயர் பயங்கரவாதம் என்று ஊடகங்கள் மூலம் அச்சத்தையும் பயத்தையும் மக்கள் மத்தியில் திணித்துள்ளனர். அது சுத்தப் பொய் என்று பறைசாற்றிக் கொண்டு முஹர்ரம் புத்தாண்டு பிறக்கிறது. ஆம் முஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கும். சாந்தி சமாதானம் நிலவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here