இஸ்லாம் ஐக்கியத்தை விரும்புகிறது பிரிவினையை சாடுகிறது

0
10

பிஸ்தாமி – மல்வானை

இஸ்லாம் அழகான வாழ்வுமுறை.அது வாழ்வை இன்பமாக்குகிறது. வெறுப்பும் கவலையும் முஸ்லிம்களிடம் இருக்க முடியாத பண்புகள். தனது இன்பத்துக்காக  தனிப்பட்ட சுயலாபம், குரோத உணர்வு காரணமாக அடுத்த மனிதர்களை, நிறுவனங்களை, அமைப்புக்களை மிக மோசமாக விமர்சித்து உள்ளங்களில் குரோதத்தை விதைப்பதை வளர்ப்பதை அது கண்டிக்கிறது.

தனிப்பட்ட குரோதம் காரணமாக இன்னொரு சாராரை காரசாரமாக விமர்சித்தல் தவிர்க்கப்பட வேண்டும். பிழை களை சுட்டிக்காட்டும் உயர்ந்த விழுமி யங்களை இஸ்லாம் கற்பித்துள்ளது. நபிகளாரிடம் இதற்கான உயர்ந்த முன்மாதிரிகள் உள்ளன. தனது பள்ளியில் சிறுநீர் கழித்த மனிதரை கண்ணுற்ற நபிகளார் கொதித்தெழவில்லை. உணர்வுகளுக்கு அடிமையாகி தீர்ப்புக் கூறவில்லை. நிலைமையை சமயோசிதமாக அணுகினார்கள்.

இஸ்லாத்தின் கிளைப்பிரச்சினைகளை நோக்கின் வேறுபட்ட அபிப்பிராயங்கள், கருத்துக்கள், தீர்ப்புக்கள் அதிகமாக உள்ளதை காணலாம். இது பெரும் அருள்.

குறிப்பிட்ட ஒரு விடயத்தில் அனை வரும் ஒரே நிலைப்பாட்டில் வரவேண் டும் என்ற அவசியம் இஸ்லாத்தின் கிளையம்சங்களுக்கு அவை சார்ந்த  கிளைப்பிரச்சினைகளுக்கு பொருந்தாது.இது நபியவர்கள் காலம் தொட்டு இருந்து வந்த நிலைமையாகும்.நபியவர்கள் உயிருடன் இருந்த போதே தோழர்கள் வித்தியாசமான நிலைப்பாடுகளை எடுத்தமையை நபியவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். மொத்தமாக ஷரீஆவிற்கு முரணாகும் போது மட்டுமே அதனை நியாயமாக, இங்கிதமாக, தெளிவாக சுட்டிக்காட்டி தவிர்ந்துகொள்ளுமாறு அன்பாக போதனை செய்தார்கள்.

இஸ்லாமியப் போதனைகளை பொறுத்தவரை தீமைகள், அனுமதிக்கப் படாதவைகள் நிகழும் போது அவற்றை உரிய முறையில் தடுக்கும் அழகிய ஒழுங்குகளை கற்றுத்தந்துள்ளது. நபியவர்கள் தனிப்பட்ட மனிதர்கள் பிழை செய்வதை நேரடியாக கண்டாலும் அதனை மிகவும் அழகாகவும் இங்கிதமாகவும் குறிப்பிட்ட நபரின் உணர்வுகள் இலக்கு வைக்கப் படாமலும் கவனமான வார்த்தைப் பிரயோகங்களை கையாண்டு அவற்றை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அத்தகைய மனிதர்களுக்காக பிரார்த்தித்தார்கள். இன்னும் தெளிவாக சொன்னால் குறிப்பிட்ட மனிதரை நேரடியாக சுட்டிக் காட்டாமல் அவரது பிழைகளை சூட்சுமமாக படர்க்கையில் குறிப்பிடுவார்கள். பிழை செய்த மனிதனை தோழர்கள் இலகுவில் அடையாளம் காணாத வண்ணம் மென்மையாக நடந்துகொண்டார்கள். இவை அனைத்தும் சமூகத்தின் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் கருத்தில் கொண்டே நபியவர்கள் செய்தார்கள்.

எனவே தான் அல்-குர்ஆன் கூட “அல்லாஹ்வின் பாதையை நோக்கி சமயோசிதமாகவும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழையுங்கள்” (அன்நஹ்ல் 16)  என்று கூறுகிறான்.

“அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்” (ஆல-இம் ரான்-19)என்றும் கூறுகிறான். ஆனால் அந்த இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் பால் நிர்ப்பந்தமோ பலாத்காரமோ பிர யோகிக்க இடமில்லை (அல்பகரா 256) என்பதனையும் கூறுகின்றான். இஸ்லாம் தவிர்ந்த ஏனைய ஜாஹிலிய்ய மார்க்கங்களையும் தீன் என்ற கருத்தில் கூறு கின்றான்.“உங்களுக்கு உங்கள் மார்க்கம் (தீன்)எனக்கு எனது மார்க்கம்” (தீன்)என்கின்றான் (அல்காபிரூன்) தன்னிடம் அங்கீகாரம் பெற்ற மார்க்கத்தின் நிலைப்பாடே இப்படி இருக்க இஸ்லாமிய அகீதாவில் உள்ள ஒரு கூட்டத்தை அதனை பின்பற்றும் சாராரை கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதை இஸ்லாம் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. இஸ்லாமிய அகீதாவை விட்டும் முரண்பட்டு சென்றுள்ள வேதத்தை உடையவர்களுடனே மிகவும் அழகாகவும் பண் பாடாகவும் உரையாடுமாறு அல்-குர்ஆன் போதிக்கிறது.

நேரடியாக அழைப்பு விடுத்த சில நபர்கள் அதனை அங்கீகரிக்காத போது நபிகளார் அத்தகையவர்களை கடிந்து  கொள்ளவில்லை, பழிதீர்க்கவில்லை. இஸ்லாத்தை ஏற்கும் முன்னரே உமர் எனும் மனிதருக்காக அவரது ஹிதாயத்துக்காக பிரார்த்தித்துள்ளார்கள்.

தனது கொள்கை சாராத மனிதர்களுடன் நபிகளார் நடந்து கொண்ட அழகிய உயர்ந்த பண்பாடுமிக்க ஏராளமான நிகழ்வுகள் ஸீராவில் உள்ளன.இவை இவ்வாறு இருக்க தனது தனிப்பட்ட வெறுப்பு, பகைமை, குரோதம், காழ்ப்புணர்வின் காரணமாக இன்னொரு மனிதரை, அமைப்பை, நிறுவனத்தை கடும் சொற்களை உபயோகித்து அநாகரீகமாக விமர்சிப்பது, மானபங்கப்படுத் துவது இஸ்லாமிய பண்பாடுகளுக்கு அப்பாற்பட்டதேயாகும். “நீங்கள் உங்க ளை பரிசுத்தவான்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம்.உங்களில் மிகவும் பரிசுத்த வான் யாரென்பதை அவன் நன்கறி வான்”(அன்நஜ்ம்-32) என்று அல்லாஹ் கூறுகின்றான். ஹஜ்ஜதுல் வதாவில் நபிகளார் ஆற்றிய கருத்துச்சுருக்கமும் பொருட் செறிவும் மிக்க அற்புதமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையில் சமூக ஐக்கியத்தை சிதைக்கும் அனைத்து செயற்பாடுகளையும் ஹரா மாக்கினார்கள். மனிதனின் மானம், சொத்து, இரத்தம் அனைத்தும் அடுத்த மனிதர் களுக்கு ஹராமானதாகும். அவற்றை அத்துமீறி அசிங்கமாக்குவது மிகவும் இழிவான செயலாகும். அடுத்தவனின் குற்றம் குறைகளை மன்னித்து அவனுக்காக பிரார்த்திப்பவரே அல்லாஹ் விடத்தில் கண்ணியமானவராக இருப்பார். அல்லாஹ்வும் எமது பாவங்களை  மறைத்து வைத்து நாம் இஸ்திஃபார் செய்தால் மன்னித்து அருள்புரியும் பண்பு கொண்டவனாக இருக்கிறான். எனவே அடுத்த மனிதர் களை குறைகூறி அவர் களது தனிப்பட்ட விடயங்களை ஊதிப் பெருப்பித்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி ஜனரஞ்சகம் செய்வது கீழ்த்தர மான, பண்பாடற்ற அநாகரீகமான செயலாகும். இத்தகைய செயல்களை யாரும் ஆமோ திக்கவோ ஆதரிக்கவோ கூடாது.

  நவீன இஸ்லாமிய சிந்தனையின் பிதாமகனாக கருதப்படும் இமாம் ஹஸன் அல்பன்னா அவர்கள் நவீன நூற்றாண்டில் தஃவா செய்யும் கலை களை, முறைவழிகளை குறிப்பிடுகையில் சில ஒழுங்குகளை முன்வைத்தார்.                       20 அடிப்படைகளை வைத்து தனது சிந்தனையை அவர் உலகிற்கு முன்வைத் தார். அதில் ஆறாவது அடிப்படையாக எங்களுடன் முரண்பட்ட சிந்தனை, கருத்துக்கள் கொண்ட மனிதர்களை கடுமையாக விமர்சிப்பதோ குறைகாண        பதோ இல்லை. அவர்களது எண்ணங்கள் அவர்களை சார்ந்ததாகும்” (மஜ்மூஅது ரஸாஇல் பக்கம் 269)

இமாம் அபூ ஜஃபர் அவர்கள் இமாம் மாலிக்கின் முவத்தா கிரந்தத்தின் பால் மக்களை ஈர்க்க நினைத்த போது இமாம் மாலிக் இவ்வாறு கூறினார்.“நபிகளாரின் தோழர்கள் உலகின் பல பாகங்களுக்கும் பிரிந்து சென்றார்கள். அவர்களிடம் வித்தியாசமான சிந்தனைகள் கருத்துப் பின் புலங்கள் இருந்தன. இந்நிலையில் அவர்களிடம் ஒரு கருத்தை மட்டும் திணிக்க முனைவது சமூகத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் என்றார்கள்”

எனவே தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துள்ள இத்தகைய காலத்தில் சமூக ஊடகங்கள் எந்த அடிப்படையும் இன்றி பயன்படுத்தப்படுகின்றன. எனவே மனிதர்களின் பெறுமானம், மானம், மரியாதை எதுவும் கருத்தில் கொள்ளப்படாது அவர்களது விவகாரங்களை ஊதிப்பெருப்பித்து மக்கள் மத்தியில் பரப்புவது விபரீதத்தை உண்டுபண்ணும்.

“மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிப்பது கொலை செய்வதை விட கடுமையானது” (அல்பகரா 191) என்பது அல் குர்ஆனின் நிலைப்பாடு. எனவே சகவாழ்வு குறித்து பேசப்படும் இன்றைய சூழலில் அடுத்த சமயங்களுக்கு மத்தியில் இன நல்லிணக்கம், இன சௌஜன்யம் குறித்த கருத்துக்களை முன்வைப்பதை விட முஸ்லிம்களுக்கு மத்தியில் இத்தகைய கருத்துக்களை நடை முறைக்கு கொண்டுவர வேண்டிய காத்திரமான பணியை ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பும் காலத்தின் தேவையும் எமக்கு முன்னால் உள்ளது.

எனவே, ஒற்றுமையை சிதைக்கும் எந்த செயற்பாடுகளையும் அது எந்த வடிவத்தைப் பெற்றாலும் அனுமதிக்க இடம்தரக்கூடாது. இஸ்லாம் ஐக்கியத்தை தூண்டி பிரிவினையை எச்சரிக்கிறது. அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டுமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here