உலகில் மோசமானதாக இலங்கை கிரிக்கட் – ஐசிசி

0
4

உலகின் கிரிக்கட் அரங்கில் மிகவும் ஊழல்மிக்க கிரிக்கட் நிறுவனமாக இலங்கைக் கிரிக்கட் காணப்படுவதாக சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் (ஐசிசி) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐசிசியின் ஊழல் ஒழிப்புப் பிரிவின் தலைவர் அலெக்ஸ் மாஷல் இங்கு வந்து தம்மைச் சந்தித்த போது இதனைத் தெரிவித்ததாக விளையாட்டமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதனால் இங்கு நடைபெறும் ஊழல், மோசடிகள் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்வதற்கான நிறுவனமொன்றை இலங்கையில் நிரந்தரமாக நிறுவுவதற்கும் ஐசிசி தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உலகின் மிக மோசமான ஊழல் நடக்கும் நிறுவனமாக இலங்கை கிரிக்கட் நிறுவனத்தைக் குறிப்பிட்டிருக்கும் ஐசிசி, இதற்கான பல உதாரணங்களையும் எடுத்துக் காட்டியுள்ளது. ஸிம்பாப்வேயில் பிரச்சினைகள் இருந்த போதும் அதன் நிர்வாகத்தில் பிரச்சினை இல்லை. கிரிக்கட் நிர்வாகத்துக்கு வெளியில் இருந்தவர்கள் மூக்கை நுழைத்ததால் தான் அங்கு பிரச்சினை ஏற்பட்டது. இலங்கைக் கிரிக்கட் நிறுவனத்தில், கீழுருந்து மேலாக மேலிருந்து கீழாக எல்லாப் பக்கமும் பிரச்சினைகள் இருக்கின்றன எனவும் அலெக்ஸ் மாஷல் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட்டில் சூதாட்டக்காரர்கள் தொடர்புபட்டிருப்பது போலவே பாதாள உலகைச் சேர்ந்தவர்களும் தொடர்புபட்டிருப்பதாக அவர் தெரிவிப்பது மிகவும் பாரமான கருத்தாகும். இலங்கைக் கிரிக்கட் வீரர்கள் நாட்டுக்காக விளையாடுகிறார்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தச் செய்தி பேரிடியாகும்.

கிரிக்கட் நிறுவனத்தில் நடக்கும் ஊழல்கள் தொடர்பில் விளையாட்டு அமைச்சரும் பல விடயங்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். இலங்கையில் இருக்கும் சில கிரிக்கட் கழகங்கள் கிரிக்கட் விளையாடுவதே இல்லை. ஆனால் இவர்கள் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தில் இருந்து நிதியைப் பெறுகிறார்கள் என அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார். கிரிக்கட் நிறுவனத்தில் உள்ள சிலரின் சம்பளம் நினைத்துப் பார்க்கவும் முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இவர்களால் என்ன சேவை ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கு நடக்கிறது என்பது தனக்கே தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலங்களில் இலங்கை அணி தொடராகச் சந்தித்து வருகின்ற தோல்விகளுக்கு மத்தியில், உலகின் மிக மோசமான கிரிக்கட் நிறுவனமாக ஸ்ரீலங்கா கிரிக்கட் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் கிரிக்கட் நாட்டின் நற்பெயருக்கான களங்கமாக மாறி வருகிறது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here