எதிர்க்கட்சியின் பலம்

0
1

ஜனநாயக ஆட்சியொன்றின் பிரதானமான அம்சம் பலமான எதிர்க்கட்சி அமைவதுதான். ஆளும்கட்சி கண்மூடித்தனமாக, தன்னிஷ்டம் போல் செயற்படும் பொழுதெல்லாம் அதற்கெதிராகக் குரல் கொடுத்து நல்லாட்சியை உறுதிப்படுத்துவது எதிர்க் கட்சியின் கடமை. அரசாங்கத்தின் செயற்பாடுகளை கேள்விக் குட்படுத்துவதும் பொதுமக்களின் நலனை உறுதிப்படுத்துவதும் எதிர்க்கட்சி செய்ய வேண்டிய பிரதான பணியாகும்.

இலங்கையின் அண்மைக்கால அரசியல் செல்நெறியில் பலமான எதிர்க்கட்சி அமையப்பெறாமை மக்களுக்கு கிடைத்த சாபக்கேடாகும். மாறி மாறி வந்த எந்த அரசாங்கமும் எதிர்க்கட்சியைப் பலமிழக்கச் செய்வதையே தமது தலையாய பணியாகக் கொண்டு செயற்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியில் ஜே.ஆரின் ஆட்சிக் காலத்தில் தமக்கு எதிரான கட்சியின் தலைவராக இருந்த ஸ்ரீமாவோ அம்மையாரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் ஆட்சிக்கெதிராகக் குரல் கொடுத்த ஜேவிபியினர் வகைதொகையின்றிக் கொல்லப்பட்டனர். ரணிலின் ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சியினர் துண்டாடப்பட்டு பலமிழக்கச் செய்யப்பட்டனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் எதிரணி என்ற பேச்சுக்கே இடமின்றி அடக்குமுறை ஆட்சி செய்தது.

இவ்வாறு ஜனநாயக விழுமியங்கள் ஒடுக்கப்பட்டு வரும் வேளையில்தான் நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் நியமிக்கப்படுகிறார். நாட்டில் நல்லாட்சி நிலவுவதாக மக்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் வேளையில், இந்த நல்லாட்சிக்கான எதிர்க்கட்சியின் பங்களிப்பு பற்றிய கேள்விகள் தற்போது பரவலாக எழுந்து வருகின்றன.

சிறுபான்மைக்கு மீண்டும் அந்தஸ்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்துக்குப் பின்னர் இரா. சம்பந்தன் அவர்கள் சிறுபான்மையினத்திலிருந்து எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தான் ஒரு இனத்துக்காகவன்றி முழு நாட்டுக்குமாக தனது கடமைகளைச் செய்யப் போவதாக அவர் தனது பதவியைப் பொறுப்பேற்கும் வேளையில் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது நாடு போகிற போக்கில் எதிர்க்கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. நாட்டு மக்கள் தற்பொழுது எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினை களின்போது எதிர்க்கட்சி என்ன பங்களிப்பை மக்களுக்காகச் செய்திருக்கிறது? மஹிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்பது ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட ஒன்றல்ல. அது தான்தோன்றித்தனமானது. சம்பந்தன் தலைமையிலான எதிர்க்கட்சியை விட, இந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தான் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி என்னும் பொழுது தோற்றமளிக்கின்ற அளவுக்கு உண்மையான எதிர்க்கட்சி செயலிழந்திருக்கிறது.

மக்களின் மீது வரிச்சுமையை அதிகரித்த, வட் வரி விவகாரத்தை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியே முன்னின்று நீதி மன்றம் வரை சென்று மக்களுக்கு நீதியான தீர்ப்பை பெற்றுக் கொடுத்தது. மத்திய வங்கி ஆளுநர் விவகாரத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அழுத்தம்தான் அவரை பதிவியிலிருந்து தூக்கியது. இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம், அதில் அனுகூலங்களும் இருந்த போதிலும், இதனுடைய பக்க விளைவுகளை மக்கள் முன் எடுத்துச் செல்வதில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியும் ஜேவிபியுமே முன்னின்றன. மக்களுக்கு கிடைக்க வேண்டிய இதுபோன்ற நியாயங்களுக்கு முன்னால் சம்பந்தன் தலைமையிலான எதிர்க்கட்சி செயலிழந்து போனமை தான் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஊதிப் பெருப்பிக்கப்படக் காரணமாக அமைந்தது.

மஹிந்த அரசில் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வுப் பிரச்சாரத்தினை மஹிந்த தலைமை யிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எதிர்க்கப் போவதில்லை. ஆனாலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இரா. சம்பந்தன், முஸ்லிம்கள் மீதான இந்த எதிர்ப்புணர்வுப் பிரச்சாரத் துக்கு எதிராக அரசுடன் போராடியிருக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் தற்பொழுது தான் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவர் என்பதைத் தாண்டி, எதிரணியில் உள்ள கட்சிகளின் தலைவராகவும் பாராளுமன்றத்தில் தொழிற்பட வேண்டியவராகிறார். அந்த வகையில், ஒரு சிறுபான்மைத் தலைவரின் கீழ் செயற்பட முடியாமல் பிரிந்து சென்றிருக்கின்ற எதிரணியினரையும் இணைத்துக் கொண்டு செயற்பட வேண்டிய பெரும் சவால் எதிர்க்கட்சித் தலைவரின் முன்னால் இருக்கிறது.

ஊழல்களுக்கு எதிரான செயற்பாட்டில், ஊழலில் ஈடுபட்டு நாட்டைக் குட்டிச் சுவராக்கியோரை சட்டத்தின் முன்நிறுத்தும் விவகாரத்தில் அரசாங்கம் நகரும் நத்தை வேகம் தொடர்பிலான மக்களின் அதிருப்தியை எதிர்க்கட்சித் தலைமை ஆளும் கட்சிக்கு எடுத்துரைக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைமை என்பது பதவிகளை அலங்கரிப்பதன்று. மக்களுடைய அபிலாஷைகளை அது பிரதிபலிக்க வேண்டும்.

எதிர்க்கட்சி என்பது ஜனநாயகத்தின் அச்சாணி. அது இயங்காவிட்டால் ஜனநாயகம் நகராது. நியாயமான எதிர்க்கட்சிகள் இயங்காத பொழுது, செய்த அநியாயத்தை நியாயப்படுத்து வதற்கான கூக்குரல்கள் ஜனநாயக கோஷங்களாக உரக்க ஒலிப்பது இலங்கை அரசியலின் சாபக்கேடாகத் தான் முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here