எப்போதும் விளைவுகளில் கவனமாக இருங்கள்

0
4

 – சிகிச்சை உளவியலாளர் ஹாலா பனானீ

ஹாலா பனானி எகிப்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மருத்துவ உளவியலில் முதுமானிப் பட்டம் பெற்றவர். உள மருத்துவத் துறையிலும் அறிகை முறை நடத்தை சிகிச்சையிலும் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். அல் ஜஸீராவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர். இஸ்லாமிய திறந்த பல்கலைக்கழகம், மேர்சி மிஷன், கலம் நிறுவனம், அல் பையினா தொலைக்காட்சி என்பவற்றிலும் பங்குகொண்டு இஸ்லாமிய உளவியல் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் வளவாளராகப் பங்காற்றி வருகிறார்.

எகிப்தின் அல் பஜ்ர் தொலைக்காட்சியில் ‘ஹாலாவுடன்’ என ஒரு தனி நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. உளவியல் கோட்பாடுகளை இஸ்லாமிய போதனைகளோடு இணைத்து வழங்குவதில் ஹாலா நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

Image result for haleh banani quotesஉலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களோடு ஸ்கைப் ஊடாகத் தொடர்பு கொண்டு உளவள ஆலோசனைகளையும் நடத்தை முறை சிகிச்சை தொடர்பான வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றார். மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு, தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பல், அசாதாரண நடத்தைகளுக்குச் சிகிச்சையளித்தல் என்பனவற்றில் ஹாலா நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

இவரது உளவியல் சார்ந்த கட்டுரைகள் சர்வதேசளவிலான பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அதேபோன்று www.muslimmatters.org எனும் இணையத்தளத்திலும் காணலாம். குர்ஆன் திலாவத்திற்கான இஜாஸாவைப் பெற்றுள்ள இவர், சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற விழா ஒன்றில் உளவியல் துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக கௌரவிக்கப்பட்டார்.

திருணமாகியுள்ள இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சமகால முஸ்லிம் உலகில் செயற்திறனுள்ள பெண்கள் வரிசையில் முன்னணியில் உள்ள இவரை அல் ஜஸீரா நேர்கண்டது. நேர்காணலின் முக்கிய பகுதி இது.

  1. பொதுவாக முஸ்லிம் பெண்கள் தம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையோடு வாழ்கின்றனர். உயர் தொழில் வாண்மையாளர்கள் அவர்களுள் மிகக் குறைவாகும். நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

குழந்தைப் பருவத்திலிருந்து ஒருவரிடம் ஏற்படக் கூடிய சுயமதிப்பே (Self Esteem) ஒருவரது எதிர்கால ஆளு மையில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும் சமூக வாழ்வில் பங்கேற் பதற்கும் உறுதுணையாய் உள்ளது. பெற்றோர் குழந்தைகளை நடத்தும் முறையிலேயே சுயமதிப்பு விருத்தியடைகின்றது.

குழந்தைகள் பெற்றோரிடமிருந்து மதிப்பைப் பெறாதபோது அல்லது அவர்கள் செய்யும் செயல்களுக்கு கடும் விமர்சனங்கள் வரும்போது அவர்கள் பெறுமதியற்றவர்கள் என உணர்கின்றனர். பெற்றோரின் கவனம் அல்லது அக்கறை பிள்ளைகளில் இல்லாத போதும் அவர்களிடம் மிகத் தாழ்ந்த அளவிலேயே சுயமதிப்பு உருவாகின்றது. மட்டுமன்றி, பாதுகாப்பு உணர்வும் இல்லாமல் போகின்றது.

குற்ற உணர்வோடு வளர்கின்ற பிள்ளைகளிடம் தாழ்வு மனப்பான்மையும் பெற்றோருடன் முரண்படும் போக்கும் வளர்கின்றது. உடல் ரீதியான, மன எழுச்சி ரீதியான, பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படும் பிள்ளைகளிடம் அவமான உணர்வு ஏற்படுகின்றது. சில பெற்றார் பிள்ளைகளை அடிபணிய வைப்பதற்கு பயமுறுத்தும் நுட்பங்களைக் கையாள்கின்றனர். அது அவர்களிடம் வெட்க உணர்வை அதிகரிப்பதோடு, தாம் பெறுமதியற்றவர்கள் எனும் மனோநிலையை உருவாக்குகின்றது.

குழந்தைப் பருவத்தில் சுயமதிப்பும் உட்சாகமும் பாராட்டும் பெறும் குழந்தைகள் வளர்ந்த பின் உயர்ந்த சுயமதிப்புடனும் தைரியத்துடனும் செயல்படுகின்றனர்.

  1. சுயமதிப்பற்ற முஸ்லிம் பெண்களிடம் அதனை உருவாக்குவதற்கு நீங்கள் தரும் ஆலோசனை என்ன?

நான் ஒரு அறிகை நிலை நடத்தை சிகிச்சையாளர் என்ற வகையில் ஒருவர் தாழ்வு மனப்பான்மையால் துன்புறும் போது அவர்களது சுய உரையாடலைத் தூண்டுகின்றேன். அது 500 வார்த்தைகளைக் கொண்ட ஓர் உள்ளார்ந்த உரையாடலாகும். ஒருவரது சிந்தனை எப்படி அவர்களது உணர்ச்சிகளுக்கும் செயல்களுக்கும் இட்டுச் செல்கின்றன என்பதை நான் கற்றுக் கொடுக்கின்றேன்.

ஒருவர் தனது சிந்தனையைக் கட்டுப்படுத்த கற்றுக் கொண்டால் தமது மனோநிலையை அவர்களால் கட்டுப்படுத்த முடியம். அவர்களது நடத்தைகள் பிறருடனான உறவுகளையும் கட்டுப்படுத்த முடியும். உள்ளார்ந்த ரீதியில் காணப்படும் நேர்மறையான உரையாடலே ஒருவரது தாழ்வு மனப்பான்மைக்குக் காரணமாகும். நேர்மறையான உரையாடலை விடுத்து அதற்குப் பகரமாக நேர்ப்பாடான, தன்னை வலுவூட் டக் கூடிய சுய உரையாடலில் ஈடுபட வேண்டும்.

  1. ஒருவர் தன்னுடைய இலக்கை அடைந்துகொள்வதற்கு என்ன வகையான நுட்பங்களைக் கையாள வேண்டும்?

எப்போதும் விளைவுகளில் கவனமாக இருங்கள். உங்களைச் சூழ நேர்ப் படியாகச் சிந்திக்கின்றவர்களை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களின் ஆற்றல் மீது நம்பிக்கை கொண்டவர்கள். உங்களைத் தூண்டுகின்றவர்கள். என்னால் முடியாது என்று கூறுவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். சுய அக்கறையை வளர்த்துக் கொள்ளுங்கள். எந்த விளைவையும் அடைய வேண்டுமாயின் அதற்குக் கடின உழைப்பு அவசியம். விடா முயற்சிக்கு தன்னம்பிக்கையும் உற்சாகமும் அவசியம். எல்லாவற்றிற்கும் உங்கள் உடல் ஆரோக்கியத்தைக் கவனிப்பது முக்கியம்.

  1. உங்களுடைய மிகச் சிறந்த முன்மாதிரி யார்?

அனைத்து முஸ்லிம்களது ஒரே முன்மாதிரி இறைதூதர் (ஸல்) அவர்களே. அவரது மனைவி கதீஜா (ரழி) ஒரு சிறந்த முன்மாதிரியாவார். ஏனெனில், அவர் மிகவும் புத்திசாலியாக செயற்பட்டுள்ளார். கணவனுக்கு ஆதரவளிக்கின்ற, அன்பு காட்டுகின்ற மனைவியாக அவர் விளங்கியுள்ளார்.

நான் தற்போது ‘உலகத்தை மாற்றிய 100 பெண்கள்’ எனும் நூலை வாசித்து வருகின்றேன். உண்மையில் இவர்கள் தடைகளை உடைத்துக் கொண்டு சமூக மரபுகள், பாரம்பரியங்களைக் கடந்து தங்களது கனவை எப்படி நனவாக்கினர் என்பதைப் படிக்கும்போது ஆச்சரியப் படுகின்றேன். ஃபுளோரன்ஸ் நைடிங் கேர்ள் போன்றவர்கள் ஒரு இலட்சியத் தோடும் தூர நோக்கோடும் அதை அடைவதற்கான விடா முயற்சியோடும் செயற்பட்டுள்ளனர்.

ஆலோசனை பெறுவதாயின் நிபுணர்களையே அணுக வேண்டும். நீங்கள் ஒரு விடயத்தை அறியாதவர்களாக இருந்தால் குறிப்பிட்ட விடயத்தை ஆழமாக அறிந்தவர்களிடம் வினவுங்கள் என குர்ஆன் கூறுகின்றது. சட்டத்துறை தொடர்பாக அறிய வேண்டுமாயின்,   சட்ட அறிஞரையே அணுக வேண்டும். ஆன்மீக அல்லது சமய ரீதியான சந்தேகங்கள் இருப்பின் பள்ளிவாயல் கதீபை அல்லது இமாமை அணுக வேண்டும். குடும்ப வாழ்வில் அல்லது மன எழுச்சி தொடர்பான பிரச்சினைகள் இருப்பின் அதனை உளவியலாளர்களிடமே கேட்டறிய வேண்டும். ஏனெனில், உங்களது உள்ளூர் பள்ளிவாயல் இமாம் உளவியல் துறையில் பயிற்றுவிக்கப்பட்டவர் அல்ல. ஒவ்வொரு துறையிலும் மிகச் சரியான வழிகாட்டலை நீங்கள் பெற வேண்டுமாயின், அத்துறை சார் நிபுணரையே அணுக வேண்டும்.

  1. நீங்கள் உங்களது வீட்டுக் கடமைகளை புறக்கணிக்காத வண்ணம் சமூகப் பணிகளில் எவ்வாறு ஈடுபடுகின்றீர்கள்?

சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் போதும் உங்களுடைய குடும்பத்தை முதன்மைப்படுத்துவது அவசியமாகும். உங்களது குடும்ப கடமைகளை நிறைவேற்றாத நிலையில், சமூகப் பணிகளில் ஈடுபட முடியாது. இங்கு குடும்ப கடமைகளைப் பூரணமாக நிறைவேற்றுவதற்கும் சமூகப் பணிகளில் ஈடுபடுவதற்கும் சவாலாக உள்ள ஒரே விடயம் நேர முகாமையே. இரண்டுக்கும் இடையில் சமநிலையைப் பேண முடியுமென்றால் எந்த முரண்பாடும் ஏற்படப் போவதில்லை.

  1. இறுதியாக, உங்களுக்கு மிகப் பிடித்தமான நூல் எது?

டேவிட் ரிச்சோ எழுதிய How to be an adult எனும் நூல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. திருமண வாழ்க்கை யில் நுழைவதற்கு முன்னால் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் என்று இதனை சிபாரிசு செய்வேன். நூலின் ஒவ்வொரு பந்தியிலும் ஆழ்ந்த கருத்துக்கள் இழையோடுகின்றன. முதிர்ந்தவர் என்பதன் அர்த்தம் அல்லது வயதானவர் என்பதன் கருத்து மன எழுச்சி ரீதியில் ஆரோக்கியமாகவும் உள ரீதியில் சம நிலையாகவும் அறிவு ரீதியில் முதிர்ச்சியாகவும் இருப்பதையே குறிக்கின்றது என்ற கருத்தை இந்நூல் ஆழமாக முன்வைக்கின்றது.

Image result for haleh banani quotes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here