எல்லையற்ற எல்லை நிர்ணயம்

0
0
Editorial | 401

தோல்வியில் இருந்து நழுவுதற்காக ஆட்டத்தின் இறுதி இன்னிங்ஸை இழுத்தடிப்பது போல பல்வேறு நொண்டிச் சாக்குகள் தேர்தல்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டு தேர்தல்கள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. மாகாண எல்லை நிர்ணய அறிக்கை தாமதமாவது தான் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் எனச் சொல்லப்பட்டு வந்த போது தான் குறித்த அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையை மீளவும் ஆராய்ந்து முன்வைப்பதற்காக இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல்கள் இன்னும் காலதாமதமாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

தயாரித்து முன்வைக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணய அறிக்கை, முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் மிகவும் பாதகமான பல விடயங்களை உள்ளடக்கியிருப்பதாக குறித்த குழுவின் அங்கத்தவர்களுள் ஒருவராயிருந்து மறைந்த பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையில் முஸ்லிம் சமூகத்துக்குப் பாதகமான பல விடயங்களையும் சுட்டிக் காட்டி, இதனால் மாகாண சபைகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவதற்கான வாய்ப்புக்களையும் அவர் எடுத்துக் காட்டியிருந்தார். இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது தான் குழுவின் அங்கத்தவராகிய அவரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

இந்த நிலையிலேயே சிறுபான்மைக் கட்சிகளுடன் ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்புக் கட்சிகளும் இணைந்து இந்த அறிக்கையைத் தோல்வியடையச் செய்துள்ளன. தேர்தலுக்கும் இந்த அறிக்கை தோல்வியடைவதற்கும் உள்ள உறவுகள் எப்படிப் போனாலும், குறித்த அறிக்கையை ”மற்றுமொரு” வழியில் அங்கீகாரம் பெறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயற்சித்து வருவது வருந்தத்தக்கதாகும். பிரதான கட்சிகள் எந்த நோக்கத்தில் இந்த அறிக்கையை தோல்வியடையச் செய்திருந்தாலும், சிறுபான்மைக் கட்சிகளின் அவதானத்தின்படி இந்த அறிக்கை சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெரிதும் பாதிப்பதாகும். குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகம் இதனால் பெரியளவு பாதிக்கப்படப் போகிறது.

இந்த நிலையில் இந்த அறிக்கையை மீளவும் கொண்டுவரும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அந்தக் கட்சியை நம்பி இருக்கும் முஸ்லிம் தரப்பினர் மீது சேறுபூசுவதாக அமைந்திருக்கின்றன. இந்த அறிக்கை முஸ்லிம்களுக்குப் பாதகமானது என்று பல தடவைகள் எடுத்துரைக்கப்பட்ட போதும், பாராளுமன்ற விவாதத்தின் போது பலரும் சுட்டிக் காட்டியபோதும், இந்த அறிக்கையை நிறைவேற்றிக் கொள்வதில் சுதந்திரக் கட்சி காட்டி வருகின்ற ஆர்வம் சிறுபான்மை இனங்கள் தொடர்பான அதனுடைய கொள்கையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த நிலையில்

தோற்கடிக்கப்பட்ட இந்த அறிக்கையில் முஸ்லிம்களுக்குப் பாதகமாகவுள்ள விடயங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமைகளுக்கு எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பு சுதந்திரக் கட்சியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் மீது இருக்கிறது.  அவர்கள் தமது சமூகத்தின் மீதான இந்தக் கடமையைச் செய்வதற்கு துணிவு பெற வேண்டும்.

இந்த அறிக்கையை மீளவும் ஆராய்வதற்கென பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவில் கலாநிதி நௌபல் அவர்களும் உள்ளார். வில்பத்து, முசலி உட்பட இலங்கை முஸ்லிம்களின் நிலப்பிரச்சினைகளில் தலையிட்டு அவற்றை விஞ்ஞானபூர்வமாக முன்வைக்கின்ற திறமையும் அனுபவமும் அவரிடம் இருக்கின்றது. நில நிர்ணயம் தொடர்பில் மறைந்த பேராசிரியர் ஹஸ்புல்லா தொட்டுக் காட்டிய முஸ்லிம்களுக்குப் பாதகமான விடயங்கள் தொடர்பில் இவர் தமது கவனத்தைக் குவித்துச் செயற்பட வேண்டும். எல்லையற்றுத் தொடருகின்ற எல்லை நிர்ணயப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு இவரது முயற்சிகள் உதவி செய்ய வேண்டும் என்ற சமூகத்தின் பெரும் எதிர்பார்ப்பினை இவர் நிவர்த்திக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here