எல்லை மீள்நிர்ணயத்தையும் கோட்டை விட்டுவிடாதிருக்க….

0
0

Editorial – MP 378

அடுத்த தேர்தல் தான் அரசியல்வாதிகளுக்குப் பாடம் புகட்டுவதற்கான சரியான தருணம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் சமூகங்களால் தான் அரசியல் கெட்டுப் போயிருக்கிறது. தமக்கு மக்களால் வழங்கப்பட்ட அரசியல் அதிகாரத்தை வைத்து தமது சுயலாபங்களைப் பெற்றுக்கொள்வதேயன்றி சமூகத்தைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ எந்த அக்கறையுமின்றிச் செயற்படுவதற்கு மக்களே அவர்களுக்கு லைசென்ஸ் கொடுக்கின்றார்கள். தங்களுக்குக் கிடைக்கின்ற எச்சில்களுக்காக வாலையாட்டிவிட்டு மீண்டும் அடுத்த தேர்தலுக்காக இந்த மக்கள் காத்திருக்கிறார்கள்.

தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்ற முக்கியமான அரசியல் தீர்மானங்களின் போது அரசியல் தலைமைகள் நடந்து கொள்கின்ற பொறுப்பற்ற விதம் பற்றித் தட்டிக் கேட்கும் திராணியில்லாத சமூகமாகவே இலங்கை முஸ்லிம் சமூகம் இருக்கிறது. சமூகத்தை ஆபத்தில் தள்ளிவிடக் கூடிய பல்வேறு தீர்மானங்களுக்கும் எந்தத் தயக்கமும் இன்றி முஸ்லிம் தலைமைகள் கைதூக்கி ஆதரவு தெரிவிப்பதை முதுகெலும்பில்லாத ஒரு சமூகம் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதியின் மட்டற்ற அதிகாரத்தை அதிகரித்து வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக்கக் கூடிய வகையில் கொண்டுவரப்பட்ட 18 ஆம் திருத்தத்துக்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். பின்னர் அந்த அதிகாரத்தைக் குறைப்பதற்குக் கொண்டு வரப்பட்ட 19 ஆம் திருத்தத்துக்கும் இவர்கள் ஆதரவளித்தனர். எந்த விதமான நிலைப்பாடுகளுமின்றி தமது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதை மட்டும் குறியாக வைத்தே இவர்கள் செயற்படுகின்றனர் என்பதை 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு கிழக்கு மாகாண சபை தெரிவித்த ஆதரவு தெளிவாக எடுத்துக் காட்டியது. இன்னும் ஒரு வருட காலம் பதவியில் இருப்பதற்காகவே மாகாண சபைகளின் அதிகாரத்தைக் குறைப்பதற்கான திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப்பட்டது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவமே சிறுபான்மைக்குத் தீர்வு என்பதையும், புதிய தேர்தல்கள் சட்டத்தினால் சிறுகட்சிகளுக்குப் பாதிப்பு என்பதையும் வாய்கிழியக் கத்தி, பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி விட்டு 50:50 தீர்வுக்கு ஆதரவாகவும் வாக்களித்து விட்டு வருகிறது இந்த அரசியல் தலைமைகள்.

இந்த இலட்சணத்தில் அடுத்து முன்வைக்கப்படவிருக்கின்ற எல்லைமீள்நிர்ணயத்தில் இந்த அரசியல் வியாபாரிகள் முஸ்லிம் சமூகத்துக்கு எதையாவது பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்க்குமானால் அது முஸ்லிம் சமூகத்தின் முட்டாள்தனமேயன்றி வேறில்லை. இந்த நிலையில் வங்குரோத்தாகிப் போன முஸ்லிம் தலைமைகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை விட சிவில் அமைப்புக்கள் ஒன்று திரண்டு தமக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்தாக வேண்டும்.

எல்லை மீள்நிர்ணயத்தினால் சிறுபான்மைச் சமூகங்கள் பெரியதொரு பாதிப்பை நிச்சயமாக எதிர்நோக்கியிருக்கும் நிலையில், இந்தப் பணிக்காக சமூகத்தில் உள்ள சிவில் நிறுவனங்கள் இணைந்து, இதற்கென ஒரு தனியான அமைப்பை ஏற்படுத்திச் செயற்பட வேண்டும். இந்தப் பணியில் மக்கள் காட்டுகின்ற விரைவும் காத்திரமான செயற்பாடுகளும் தான் முஸ்லிம் சமூகத்துக்கு தீர்வைப் பெற்றுத் தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here