ஒரு சிலரால் கேள்விக்குறியாகி வரும் இலங்கையின் சட்ட ஒழுங்கு

0
2
ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு அதன் சட்ட ஒழுங்குகள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியது இன்றியமையாததாகும். இச்சட்ட ஒழுங்குகள் பாரபட்சமின்றி அமுல்படுத்தப்படும் போதுதான் அந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சமத்துவமாகவும் வாழ முடியும் என்பதை உறுதிபடக் கூறமுடியும்.
ஆனால் இலங்கையின் சட்ட ஒழுங்குகள் அவ்வாறு இருக்கின்றனவா? என்றால் “இல்லை” என்ற பதிலைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகின்றது.
அந்த வகையில் அதன் தொடர்ச்சியாக கடந்த (23/10/2018) செவ்வாய்க்கிழமை மயிலம்பாவளியில் ஒரு அரச மரத்தை சட்ட ரீதியாக வெட்டுவது தொடர்பாக ஒரு தேரர் ஒரு உயர் அதிகாரியான பிரதேச செயலாளருடன் பொலிஸ் அதிகாரிகளுக்கு முன்பாகவே நடந்து கொள்ளும் விதமானது மிகவும் அருவருக்கத்தக்கதாகவும், ஒரு மத தலைவராக அவரைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாத நிலையையும் தோற்றுவிக்கின்றது.
இது போன்ற நிலைமை ஒரு கோயில் குருக்களாலோ அல்லது கிறிஸ்தவ மத போதகராலோ அல்லது ஒரு மெளலவியாலோ தோற்றுவிக்கப் பட்டிருந்தால் இந்நேரம் நாடு அல்லோல கல்லோலப் பட்டிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
என்றாலும் இது போன்ற சம்பவங்கள் நாட்டின் சட்ட ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் முன்னிலையில் நடப்பதை பார்க்கும் போது பொலிஸாருக்கே இல்லாத அதிகாரம் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதா என புருவங்கள் உயர்வதை தடுக்க முடியாதுள்ளது.
அவ்வாறு அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டிருந்தால் அது பாராளுமன்றத்தால் சட்டமாக்கப்பட்டு நாட்டிலுள்ள சகல தரப்பினருக்கும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நான் அறிந்த வகையில் அவ்வாறானதொரு ஏற்பாடு சட்டத்தில் இருப்பதாக இது வரை அறிந்ததேயில்லை.
அல்லது இவர்களாகவே தங்களுக்கு அவ்வாறான அதிகாரங்கள் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு செயற்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு செயற்படுபவர்களை அங்கொடைதான் அன்புடன் வரவேற்க வேண்டுமே தவிர; சட்டத்தைப் பாதுகாக்க கடமைப்பட்டவர்கள் அவர்கள் செய்வதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அது மாத்திரமல்ல இவ்வாறான அடாவடித் தனங்களுக்கு எதிராக சிறுபான்மை இனங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சம்பவம் நடந்தது ஒரு மாற்றுத் தரப்பாருக்குத்தானே என்று முஸ்லிம் சமூகமோ முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடாவடித்தனத்தைப் பார்த்து அது எங்களுக்கு நடக்கவில்லைதானே என்று இந்து சமூகமும் இருப்போமாயின் அதைவிட முட்டாள்தனமான காரியம் எதுவும் இருக்க முடியாது.
சமகால இலங்கை சம்பவங்களைப் பொருத்தவரைக்கும் இலங்கையில் மீண்டும் ஒரு இன மோதல் வெடிக்க வேண்டும் என பாடுபடும் கடும் போக்கு அமைப்பாளர்கள் மிக சொற்பமானவர்களே. ஆனால், மிகவும் பெரும்பாலான மக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழவே ஆசைப்படுகின்றனர் என்பதே எனது கணிப்பு.
இது உண்மையாயின், குழப்பம் விளைவிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வர நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டுமே தவிர, எது நடந்தாலும் பரவாயில்லை நாம் எந்தப் பிரச்சினைக்கும் போகாது இருக்கின்றோம்தானே என அமைதியாக இருக்க முடியாது. பல குழப்பவாதிகளின் கூக்குரலை விட ஒரு நல்லவனின் மௌனம் சமூகத்தில் பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.
எது எவ்வாறாயினும் சட்டமும் ஒழுங்கும் சகலருக்கும் சமமாக பிரயோகிக்கப்பட வேண்டும். அதைப் பாதுகாக்க வேண்டியவர்கள் சிறுபான்மை இனத்தை மாற்றாந் தாய் பிள்ளைகளாக பார்ப்பார்களாயின் எதிர்காலத்தில் மீண்டும் இலங்கைக்கு ஏற்படப் போகும் பாரிய அழிவை தவிர்க்க முடியாது போய்விடும்.
எனவே, சட்டம் ஒழுங்குகளை பாதுகாக்க ஒன்றிணைந்து செயற்படுவோமாக.
MLA.Samad (BBA) (JP)
via Newsview

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here