ஒழிந்திருக்கும் பூதம்! ஒழித்து வைத்திருப்பது யார்?

0
0

இனவாதத்தைத் தூண்டி வரும் ஞானசாரவை கைதுசெய்வதற்கு பல்வேறு பொலிஸ் குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு அறிவித்துள்ளது. ஆனால், பதுங்கியிருக்கும் ஞானசாரவோ பகிரங்கமாக பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கிறார். ஊடகவியலாளர்களை சந்திக்கும் ஞானசாரவை பொலிஸாரால் ஏன் கைது செய்ய முடியவில்லை?

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அழைப்பாணை பிறப்பிக்கப் பட்டுள்ள இந்த மதகுருவை சட்டமும் ஒழுங்கும் ஏன் கண்டுகொள்ளத் தவறுகின்றது? ஒரு சிறுபான்மை குற்றவாளியை கைதுசெய்வதில் பொலிஸார் எவ்வளவு தீவிரம் காட்டுவர். ஆனால், நிதியமைச்சரும் சட்டம் ஒழுங்குகள் அமைச்சரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரை நிகழ்த்தும் இந்தக் குற்றவாளிக்கு ஒரு சட்டம், முஸ்லிம்களுக்கு இன்னொரு சட்டமா என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களை ஏமாற்றுகின்றதா? அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு ஏதேனும் அர்த்தம் உள்ளதா? கடந்த இரண்டு ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனவாதச் செயல்பாடுகள் கடந்த ஒரு மாதத்தில் 20 இற்கு மேற்பட்ட சம்பவங்களாக விசாலித்துள்ளன.

சாதாரண சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டி விட்டு, பச்சையாகவே இனவாதத்தை உமிழும் தலை மழித்த இந்த மதகுருவை சட்டம் ஏன் காப்பாற்றுகின்றது? இதுதான் மிகுந்த விவாதத்திற்குரிய விடயம்.

மஹிந்தவின் அரசு போன்று நல்லாட்சி அரசாங்கமும் இனவாதத்தை மூலதனமாகக் கொண்ட அரசுதான். மஹிந்தவின் ஆட்சி இதை விடவும் நல்லது என்பன போன்றன மனப்பாங்கு பொதுப் புத்தியில் பதியும் அளவுக்கு நிலைமைகள் எல்லை மீறிச் செல்கின்றன. இதன் தொடர்ச்சி இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் மஹிந்த ஆதரவு அலையொன்றை சிறுபான்மை மத்தியில் -குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில்- உருவாக்கி விடவும் கூடும்.

நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளைக் கண்டுகொள்ளாமைக்கான அரசியல் உள்நோக்கம் என்ன என்ற கேள்வி ஆய்வாளர்களைக் குடைந்து கொண்டிருக்கின்றது. சுமாராக இன்றைய இன வாத நடவடிக்கைகள் சட்டப்படி நிகழ் வது போலவே தோன்றுகின்றது. அரசாங்கத்தில் ஊடுருவியுள்ள சில விஷமிகள் இனவாதத்தை பரப்பும் மதகுருக்களுக்கு நேரடியாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக அரசாங்கத்தில் முக்கிய பதவி வகிக்கும் ஒரு அமைச்சரின் வீட்டிலேயே ஞானசாரர் அடைக்கலம் பெற்றுள்ளதாக சட்டத்துறை வட்டாரங்களில் செய்திகள் கசிகின்றன. இந்த அமைச்சர் சில மாதங்களுக்கு முன்னர் ஞானசாரரின் முஸ்லிம்-எதிர் பிரச்சாரத்தைப் பாராளுமன்றத்தில் ஒலித்தவர். ஞானசாரருடன் பல கூட்டங்களில் கலந்துகொண்டவர்.  சாரரின் தொல்பொருளியல் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னணியில் இருந்தவர். மஹிந்த அணியுடன் இன்றுவரை நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவர். ஞானசாரரின் இனவாதத்தை சந்தைப்படுத்தி வரும் இவரது வீட்டிலேயே அந்தப் பூதம் தங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்த இடத்தில் ‘அல்லாஹு அக்பர்’ புத்தகப் புகழ் சம்பிக்கவையும் நாம் மறந்து விட முடியாது. ஜனநாயகமயப்பட்ட ஒரு மிதவாதி போன்று தன்னைக் காட்டிக் கொண்டிருக்கும் அவர் காக்கும் கள்ள மௌனமே அவருக்கும் ஞானசாரருக்கும் இடையிலான தொடர்பை உறுதி செய்கின்றது. அவர் ஸ்தாபித்த ஜாதிக ஹெல உறுமய எனப்படும் அதி தீவிர சிங்கள இனவாத அமைப்பின் மடியில் வளர்ந்தவைகளே இன்றைய பொது பல சேனாவும் சிங்கள ராவயவும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

நாட்டில் ஏகப்பட்ட முஸ்லிம்களின் கடைகள் தீக்குத் தீனியாக்கப்படுகின்றன. புனிதஸ்தலங்களான பள்ளிவாயல்கள் கல்வீச்சுக்கு இரையாகின்றன. வீடுகள் தாக்கப்படுகின்றன. வென்னப்புவவில் இனவாதிகளால் எரியூட்டப்பட்ட முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான கடைப் பொருட்களின் பெறுமதி சுமார் 90 கோடி என மதிப்பிடப்படுகின்றது. இது போன்று எத்தனை கடைகள் இனவாதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டன?

இத்தனை நடைபெற்றும் அரசு மெத்தனமாக நடந்துகொள்வது பாரிய சந்தேகத்தையே எழுப்புகின்றது. முஸ்லிம் எதிர் இனவாத செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு நல்லதல்ல என்பதை மைத்திரி உணர்ந்தே இருக்கின்றார். அப்படியிருந்தும் இது குறித்துக் கலந்துரையாடுவதற்கு முயன்ற முஸ்லிம் அமைச்சர்களை அவர் சந்திக்க மறுத்ததேன் என்ற கேள்வி இயல்பானதே.

அரசும் அமைச்சுமே இவற்றுக்கெல்லாம் பொறுப்பு என்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் மொட்டையாகக் கூறிவிடுவதனால் இனவாதிகளின் அட்டகாசம் ஓய்ந்து விடாது. சாகல ரத்ணநாயக்கவின் இந்தக் கூற்று வெளியாகி ஓரிரு மணித்தியாலங்கள் கடந்த நிலையில் கண்டி மாவட்டத்திலுள்ள தந்துர எனும் முஸ் லிம் கிராமம் இனவாதிகளின் தாக்குதல்களுக்கு உட்பட்டது. ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் ஞானசாரருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது என சுட்டிக் காட்டிய தருணத்திலேயே முக்கிய அமைச்சரின் வீட்டில் ஞானசாரர் அடைக்கலம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

மே 20 ஆம் திகதி குருநாகலை இப்பாகமுவைக்கு சமீபமாக உள்ள இட மொன்றில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஞானசாரரை தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் பதிவு காணொளியாக தற்போது பரவி வருகின்றது. சட்டத்தையும் ஒழுங்கையும் மீறும் ஒரு மதகுருவை கைதுசெய்து தண்டிக்காமல் அவரை தாஜா பண்ணும் நோக்கில் சட்டம் ஒழுங்கு அமைச்சரே தொலைபேசியில் உரையாடுவது எவ்வளவு பெரிய வினோதம்.

மதகுருவோடு உரையாடிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்னை ‘மிரட்டும் பாணியில் பேச வேண்டாம். தேரராக நடந்துகொள்ளுங்கள்’ என்று விநயமாக வேண்டுகின்றார். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் எழுப்பும் கேள்வி ஒன்றேயொன்றுதான். இலங்கையில் சகல பிரஜைகளுக்குமான சட்டமும் ஒழுங்கும் நடைமுறையில் உள்ளதா என்பதே அந்தக் கேள்வி. முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு ஒரு சட்டம், சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தலை மழித்த மதகுருவுக்கு ஒரு சட்டம் என்று சட்டத்திலும் ஒழுங்கிலும் காட்டப்படும் பாகுபாடே இனத் துவேசத்தில் வேர்க் காரணமாகும்.

ராவய ஆசிரியர் தலைப்பு சொல்வது போன்று அந்த பூதத்தைக் கட்டிப் போட வேண்டும். ஆனால், அமைச்சரின் வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ள பூதத்தை யார் கட்டிப் போடுவது என்பது தான் பலரும் எழுப்பும் கேள்வி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here