கருக்கலைப்பு சம்பந்தமான இஸ்லாத்தின் நிலைப்பாடு

0
10

 – முஹம்மத் பகீஹுத்தீன் –

குடும்பம் என்பது ஒரு சமுகத்தின் மூலக்கரு. அது மானிட சமுகத்தின் அடிக்கல். மானிட சமுகத்தின் சிறிதாக்கப்பட்ட வடிவம் தான் குடும்பம் என்பர்.

இஸ்லாத்தைப் பொருத்தவரையில், குடும்பம் என்ற நிறுவனத்தை மிகவும் புனிதமாhன ஒன்றாகக் கருதுகிறது. இஸ்லாம் இயற்கை மார்க்கம் என்ற அடிப்படையில், அது மனித அபிவிருத்தியில் இயற்கை வரம்பை மீறாமல் செய்றபடும் குடும்ப அமைப்புக்கு அதிகூடிய முக்கியத்துவத்தினை வழங்கியுள்ளது. எனவேதான் திருமணம் முடித்து குடும்பமாக வாழ்வதை மனித இயல்புக்கு அப்பால் அதனை ஒரு வணக்கமாக இஸ்லாம் பார்க்கிறது.

குடும்ப வாழ்வின் நோக்கம்

குடும்ப வாழ்வின் நோக்கங்களில் ஒன்று ஸாலிஹான சந்ததியை உருவாக்குவதாகும். சீரான சமூக கட்டமைப்பை உருவாக்குவதும் அதன் நோக்கங்களில் ஒன்றே. ஒரு சமூகத்தின் இருப்பு குடும்ப வாழ்வில் தங்கியுள்ளதால் அதனை பாதுகாப்பது இன்றியமையாது.

தூய்மையான சந்ததி நிலைபெறுவதற்காக திருமணம் என்ற ஒழுங்கை கடைபிடிக்குமாறும் அதனை முக்கிய ஒரு சுன்னாவாகவும் விதித்துள்ளது. மனித இனம் நிலைபெற வேண்டுமென்பது திருமண அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும். இனப்பெருக்கத்தின் மூலமே மனித இனம் நிலைக்க முடியும். இஸ்லாம் இனப்பெருக்கத்தை விரும்பி உற்சாகப்படுத்துகின்றது.

மேற்கத்திய நாடுகளில் குடும்பம்

மேற்கத்திய சமூகம் வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிக்கும் மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டை மக்கள் மத்தியில் திணித்துள்ளது. இதனால் மேற்கத்திய சமூகம் தனிநபர் சுதந்திரத்தை புனிதப்படுத்துகிது. அதன் விளைவாக திருமண வரம்பிற்கு அப்பாற்பட்ட கள்ள உறவுகளும், விபச்சாரமும் பெருகி கருக்கலைப்பும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேற்குலகில் குடும்பம் என்ற கட்டமைப்பு அவசியமில்லை என்ற மனோபாவம் வளர்ந்துள்ளதால் எதிர்கொள்ள முடியாத பல சவால்களுக்கு மேற்குலகு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறது. கட்டுப்பாடற்ற குடும்ப வாழ்வு மனோபாவத்தினால் பாடசாலைப் பருவத்திலேயே சின்னஞ் சிறு வயதுடைய சிறுமிகள் பல முறைகள் கருக்கலைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விபச்சாரத்தின் மூலம் பிறக்கின்ற இத்தகைய குழந்தைகளை கவனிக்கக்கூடிய பொறுப்பு தாயின் மீது விழுவதால் கருக்கலைப்பு செய்வதற்கான அனுமதியை மேற்கத்திய நாடுகள் வழங்குகின்றன.

மேற்குலம் முஸ்லிம் சமூகத்தின் ஆரோக்கியமான குடும்ப அமைப்பை சிதைப்பதற்காக முஸ்லிம் நாடுகளிலும் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க வேண்டுமென்று திட்டம் தீட்டுகின்றனர். இதன்மூலம் முஸ்லிம்களின் குடும்ப கட்டமைப்பை தகர்த்தெறிந்து, முஸ்லிம்களை இஸ்லாத்தைவிட்டும் வெகுதூரமாக்க வேண்டுமென்று எத்தனிக்கிறார்கள்.

கருக்கலைப்பு பற்றிய ஷரீஆவின் பார்வை

கருக்கலைப்பு என்பது கருவை கருப்பையிலிருந்து வெளியேற்றுவதாகும். பிரசவ காலம் பூர்த்தியாவதற்கு முன்பு கருவை கருப்பையிலிருந்து வெளியேற்றுவதையே கருக்கலைப்பு என்பதாக இஸ்லாமிய அறிஞர்கள் வரையறுக்கின்றனர்.

பிரத்தியோகமான மருந்து சாப்பிடுதல், சுமை தூக்குதல், மருத்துவரை அணுகி கருக்கலைப்பு செய்யக் கோருதல், போன்ற முறைகளில் கருவைக் கலைக்கலாம். கருக்கலைப்பு என்பது கருவிற்கு ரூஹ் கொடுக்கப்படுவதற்கு முன்போ அல்லது பின்போ நடக்கலாம்.

கருவிற்கு ரூஹ் கொடுக்கப்படுவதற்கு முன்னர் கருக்கலைப்பு செய்வது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது. கருத்தரித்த பின்புள்ள படிநிலைகளைப் பொறுத்து சிலர் அதை அனுமதிக்கவும், சிலர் அதை தடை செய்யவும் செய்கின்றனர்.

கருத்தரித்து நாற்பது நாட்களுக்கு முன்னர் செய்யப்படும் கருக்கலைப்பை பொறுத்தவரை அது அனுமதிக்கப்பட்டதாகும். கருவின் மீதான தாக்குதலாக அல்லது சிசுக் கொலையாக இது கருதப்படமாட்டாது. நாற்பது நாட்களுக்கு முன்னர் உள்ள கட்டம் ‘நுத்பா’ படிநிலை என வழங்கப்படுகிறது. இந்நிலையில் கருவை கலைப்பதானது அது முதிர்கருவாக மாறுவதற்கு முன்பு கலைப்பதாகும். அதனை குழந்தை பிறப்பை தடுப்பதற்காக மேற்கொள்ளும் அஸ்ல் செய்வது என்ற நிலைக்கு ஒத்ததாகவே சில அறிர்ஞர்கள் பார்க்கின்றனர். ‘அஸ்ல்’ என்பது ஆண் தனது இந்திரியத்தைப் பெண்ணின் கர்ப்பவறையைப் போய் அடைய விடாது தடுத்துக் கொள்வதைக் குறிக்கும். இன்னும் சில அறிஞர்கள் இந்நிலையிலும் நியாயமான காரணங்கள் எதுவுமின்றி கருக்கலைப்பு செய்வது ஹராம் எனக் கூறியுள்ளனர்.

முஸ்லிம் அறிஞர்களின் ஒருமித்த கருத்தின்படி ரூஹ் கொடுக்கப்பட்ட பின்பு கருவைக் கலைப்பது ஹராமாகும். இதற்கு ஆதராரமாக பின்வரும் ஹதீஸ் காணப்படுகிறது.

‘பனூ லிஹ்யான்’ குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் (வயிற்றிலிருந்த) சிசு, (மற்றொரு பெண் அடித்ததால்) இறந்து பிறந்தது. அதற்கு நஷ்ட ஈடாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டுமென இறைத்தூதர் அவர்கள் தீர்ப்பளித்தார்கள். (அபூ{ஹரைரா(ரலி), புகாரி,முஸ்லிம்) இங்கு ஒரு உயிருக்கு பகரமாக நஷ்ஈட்டை வழங்குமாறு நபிகளார் பணித்துள்ளார்கள்.

ஆயினும், ஷரீஆ அனுமதிக்கும் நியாயமான காரணங்களுக்காகக் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு அனுமதி வழங்குகின்றது. நபிகளாரின் காலத்தில் குடும்பக்கட்டுப்பாட்டிற்குரிய வழிமுறையாக அமைந்தது ‘அஸ்ல்’ எனும் செயற்பாடாகும். ‘அஸ்ல்’ என்பது ஆண் தனது இந்திரியத்தைப் பெண்ணின் கர்ப்பவறையைப் போய் அடைய விடாது தடுத்துக் கொள்வதைக் குறிக்கும். நபித்தோழர்கள் இம்முறையைக் கையாள்வோராய் இருந்துள்ளனர். ‘அல்குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த வேளையில் நாங்கள் ‘அஸ்ல்’ செய்வோராய் இருந்தோம்.’ என ஜாபிர் (ரலி) கூறியுள்ளார். (ஆதாரம் – புஹாரி, முஸ்லிம்)

மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் உமர் (ரலி) அவர்களது அவையில் ‘அஸ்ல் பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டது. அங்கு வீற்றிருந்த ஒருவர், ‘அது சிறிய கொலை என நம்பப்படுகிறது’ என்றார். அவ்வேளை அங்கிருந்த அலி (ரலி), ‘அதுகொலையல்ல. அது கொலையாக அமைய (குறித்த கரு) ஏழு கட்டங்களைக் கடந்திருக்க வேண்டும். அவையாவன: களிமண் சத்து, இந்திரியத்துளி, இரத்தக்கட்டி, எலும்புத்தொகுதி, சதையமைப்பு, வேறு (முழு) உருவம்’ என்றார்கள். இதனைக் கேட்ட உமர் (ரலி) ‘அலியே, உண்மை சொன்னீர், அல்லாஹ் உமக்கு நீண்ட ஆயுளை அளிப்பானாக’ எனக் கூறினார்.

நியாயமான காரணங்களுக்காகக் குடும்பக் கட்டுப்பாடு செய்வதனை இஸ்லாம் அனுமதித்திருப்பினும், கருச்சிதைவை அது அனுமதிப்பதில்லை. அக்கருவானது ஹராமான முறையில் தரித்திருப்பினும் சரியே, ஒரு கருவை அதற்கு ரூஹ் ஊதப்பட்டதன் பின்னர் சிதைப்பது ஹராமான மாபெரும் குற்றமாகும்.

ஆயினும், குறித்த கருவானது சிதைக்கப்படாது தொடர்ந்து தாயின் வயிற்றில் இருப்பது அவளின் உயிருக்கு ஆபத்தையேற்படுத்தும் என்பது உறுதியாகத் தெரியவரின் இரு தீங்குகளில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டியிருப்பின், அவற்றில் குறைந்ததைத் தெரிவு செய்தல் வேண்டும் எனும் சட்டவிதியின் அடிப்படையில் கருவைச் சிதைப்பதைத் தவிர வேறு வழியே இல்லாத போது அதற்கு அனுமதியுண்டு. ஏனெனில், கருவிலிருக்கும் சிசுவுக்காக வாழுகின்ற தாயை இழக்க முடியாது. அது அறிவுடைமையும் ஆகாது. மேலும், சிசுவானது உருக்குலைந்ததாக இருந்து, பிறந்து வாழும் பாக்கியத்தைப் பெறினும், பெரும் அவஸ்தையுடனேயே வாழும் நிலைக்கு உட்படும் என்பது விஞ்ஞான பூர்வமான உறுதியாகக் கண்டறிய முடியும் நிலையிலும் கருவைச் சிதைக்க ஷரீஅத்தில் இடமுண்டு.

ஹராமான முறையில் கருத்தரித்த சிசுவை குடும்ப கௌரவம் அல்லது குடும்பப் பிரச்சனை அல்லது மானப் பிரச்சினை காரணமாக கருச்சிதைவு செய்வதும் ஹராம் என்றே இஸ்லாமிய அறிஞர்கள் ஒரு மித்த கருத்தை வழங்கியுள்ளார்கள். ஜுஹைனா கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண்மணி தவறான முறையில் கருத்தரித்து தனக்கு தண்டனை தாருங்கள் என்று கேட்டு வந்த பொழுது குழந்தையை பெற்றெடுத்து பின்னர் பால்குடியை மறக்கும் காலம் வரை அவளுக்குரிய தண்டனையை நபி (ஸல்) அவர்கள் பிறபோட்டார்கள் என்ற செய்தி முஸ்லிமில் பதிவாகியுள்ளது. இதோபோன்று தான் காமுகர்களின் பலவந்தமான வன்புணர்ச்சிகளினால் கருத்தரித்தாலும் கருக்கலைப்பு ஆகாது என்பதே சவுதியை தளமாகக் கொண்ட பத்வாவுக்கான நிரந்தரக் கழு பத்வா வெளியிட்டுள்ளது. குற்றமிழைத்ததன் பின்னர் மானத்தை பாதுகாக்க சிசுக் கொலை செய்ய முடியாது. மானம் காத்தல் என்பது சிசுக் கொலைக்கான நியாயமான காரணம் அல்ல.

சுருக்கமாக சொல்வதாயின் கரு தாயின் கருவறையிலிருந்தால் தாய் – சேய் இருவருக்கும் ஆபத்தளிக்கும் என்பதாக தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர் மூலம் அறிய வந்தால், கரு உருவான ஆரம்ப கட்டங்களில்; கருவிற்கு ரூஹ் கொடுக்கப்படும் முன்னரோ அல்லது ரூஹ் கொடுக்கப்பட்ட பிறகோ கருக்கலைப்பை மேற்கொள்ள அனுமதியுண்டு. கருவிற்கு ரூஹ் கொடுக்கப்படுவதற்கு முன்னர் கருக்கலைப்பு செய்வது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here