கற்றலும் எதிர்பால் கவர்ச்சியும்

0
3

முறைசார் கல்வியில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவிகளின் கற்றல் செயற்பாட்டில் எதிர்பால் கவர்ச்சி ஏற்படுத்தும் எதிரிடையான தாக்கம் குறித்து சில ஆய்வுகள் நடந்துள்ளன. இன்றைய சமூக அமைப்பில் எதிர்பால் கவர்ச்சியைத் தூண்டும் காரணிகள் பல. சமூக வலைத் தளங்களின் பெருக்கம் அதன் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது. கூட்டுக் குடும்ப அமைப்பு, அதீத நகர மயமாக்கம், நெருக்கமான குடியிருப்புகள், மாறி வரும் பெண்கள் உடையமைப்பு, சினிமா, தொடர் நாடகங்கள் என எதிர்பால் கவர்ச்சியைத் தூண்டும் காரணிகளின் பட்டியல் நீண்டு செல்கின்றது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல் அமைவது பாடசாலைகளில் காணப்படும் ஆண்-பெண் கலவன் வகுப்பறைகளாகும். பெரும்பான்மையான கலவன் பாடசாலைகளில் தரம் 7 இற்குப் பின்னர் எதிர்பால் கவர்ச்சி சார்ந்த சிக்கல்கள் மாணவர்களின் கற்றலை பல்வேறு வழிகளில் பாதிக்கின்றது.

சினிமாக் கைத்தொழில் இளசுகளை மையப்படுத்தியே திரைப்படங்களை தயாரித்து வெளியிடுகின்றது. பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்து வகை கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியரை கேலி செய்யும் காட்சிகளோடு மாணவ-மாணவிகள் காதல் செய்யும் காட்சிகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

வகுப்பறைகளில் காதல் அரும்பு விட்டு வளர்கின்றது. சினிமாவின் செயற்கை இருட்டில் காட்டப்படும் காதல் காட்சிகளை நிஜ உலகில் காண்பதற்கு மாணவர்கள் உந்தப்படுகின்றனர். அதனால் அனாவசியமான விடயங்களில் மனதைக் குவித்து, தமது கல்வியைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர். ஏற்கனவே நாம் கற்றலில் கவனம் வகிக்கும் பங்கினை விரிவாக ஆராய்ந்தோம்.

மாணவர்களின் கவனத்தை திசை திருப்பும் பலமான காரணிகளில் ஒன்றாகவே எதிர்பால் கவர்ச்சி அமைந்துள்ளது. கட்டிளமைப் பருவத்தில் சுரக்கும் ஹோமோன்களின் தாக்கமே இதற்குப் பின்புலமாக உள்ளது. கற்றலில் மிகப் பெரும் கவனக் கலைப்பான் இதுவென்றே அடையாளப்படுத்தலாம். இலட்சியத் துடிப்பும் மன வலிமையும் அற்ற மாணவர்கள் இந்த வலையில் இலகுவாக விழலாம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கலவன் வகுப்பறைகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் (தரம் 7,8 ஐச் சேர்ந்தவர் கள்) ஓர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 35 பேர் ஏதோவொரு வகையில் எதிர்பால் கவர்ச்சிசார் பிரச்சினைக்கு உட்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் பெரும்பான்மையும் கற்றலில் பின்னடைந்திருந்தனர்.

உயர் வகுப்பு மாணவர்களிடையே இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே மாணவர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். ஹோமோன்களின் தாக்கத் திற்கு உட்பட்டு, கற்றலையும் உயர் பெறுபேறுகளையும் அதற்கு விலை யாகக் கொடுத்து எதிர்கால வாழ்வை மொத்தமாகவே பாழ்படுத்த வேண்டியதில்லை. இது ஒரு வயதுக் கோளாறு. அதிலிருந்து மாணவர்கள் தப்பித்துக் கொள்ளலாம். மன உறுதியோடும் நம் பிக்கையோடும் கற்றலில் கவனம் செலுத்தலாம்.

கற்கும் காலங்களில் சினிமாவை அதிகம் பார்ப்பதை தவிர்ப்பதோடு, ஆன்மீக விடயங்களில் மாணவர்கள் அதிகம் ஈடுபாடு கொள்ள வேண்டும். அப்போதே இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். அனாவசியமான இந்த நெருக்கடியினால் பாடசாலைக் கல்விக்கே இடையில் முற்றுப் புள்ளி வைத்த மாணவர்கள் உள்ளனர். சில மாணவர்கள் பாடசாலைகளையே அடிக்கடி மாற்றிக் கொள்கின்றனர். குடும்ப ரீதியான தகராறுகளுக்கும் இது இட்டுச் சென்றுள்ளது.

பருவத்தை அறிந்து பயிர் செய்தல் வேண்டும். மாணவ பருவத்திலுள்ளவர்களின் பணி திறமையாகக் கற்பதே. கற்பதில் மனம் முக்கியமானது. அதன் ஒருமுகப்பாடும் கவனக் குவிவும் இழக்கப்படும்போது வினைத்திறனுள்ள கற்றலை எதிர்பார்க்க முடியாது. எனவே, மாணவர்கள் இவ்விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here