“கலந்துரையாடல் மூலம் உடன்பாடுகளுக்கு வந்து எல்லோரும் ஒன்றிணைந்து இந்தச் சவாலுக்கு முகம்கொடுக்க வேண்டும்.”

0
1

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

முழு உலகிலும் பொது மக்கள் கருத்து அடிக்கடி மாற்றத்தை வேண்டி நிற்பதை நாம் வரலாறு நெடுகிலும் அவதானித்துள்ளோம். கறுப்பினத்தவரான ஒபாமா மாற்றத்தை கருப்பொருளாகக் கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் மூலமே அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவானார். ஒபாமா ஆட்சிக்கு வந்து சிறிது காலத்தின் பின்னரே வெள்ளை மேலாதிக்கவாத சிந்தனை படைத்த ஒருவர் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவார் என்கின்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்ததையும் நாம் அவதானித்து வந்தோம். அது இன்று நிதர்சனமாகியுள்ளது. வெள்ளையின அடிப்படைவாதிகளின் எழுச்சியினால் டொனால் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். 

ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளது ஒத்துழைப்பின்றியே அவர் அதிகாரத்திற்கு வந்தார். இவரது கொள்கையும் இந்நாடுகளுக்கு பாதிப்பாக அமைகின்ற கொள்கையாக காணப்பட்டது. அண்மையில் நடைபெற்ற அமெரிக்க காங்கிரஸ் தேர்தலில் ட்ரம்பின் ரிபப்லிகன் கட்சியை தோற்கடித்து ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றது. ட்ரம்ப் விரோதக் கருத்துக்களை வகிக்கும் ஜனநாயகக் கட்சியின் அலெக்சான்ரியா ஒகாசியோ கோடேஸ் (Alexandria Ocasio – Cortez)> இல்ஹான் உமர் (Ilhan Omar)>  ரஷீடா டைப் (Rashida Tlaib) போன்றவர்கள் காங்கிரஸ் சபை உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள். அடுத்த கட்டமாக இடம்பெறப் போகின்ற மாற்றத்திற்கான அறிகுறிகளே இதிலிருந்து புலப்படுகிறது.

2015 முதல் 2019 வரையில் இலங்கையின் ஆட்சியில் ஜனாதிபதி பிரதமர் போராட்டம் காரணமாக நிலையான ஆட்சிக்கான மக்கள் விருப்பை நாம் ஜனாதிபதித் தேர்தலுக்கூடாக அவதானித்தோம். அதற்குள் நிலையான ஆட்சிக்கு ஓரளவு ஏகாதிபத்தியவாதமும் விற்பனை செய்யப்பட்டு அதற்குள் ஒருசிலர் மேற்கொள்ளும் முயற்சிகளையும் கண்டோம். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தின் கால எல்லையும் துண்டிக்கப்பட்டு தேர்தலுக்குச் செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில் முழு உலகையும் உலுக்கி வருகின்ற கொரோனா வைரஸூம் இலங்கையை ஆக்கிரமித்திருக்கிறது. இவ்வைரஸ் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே சீனாவின் வூஹான் நகருக்குள் வந்துள்ளது. அது தொடர்பிலான முதலாவது கண்டுபிடிப்பு டிசம்பர் மாதத்திலேயே இடம்பெற்றுள்ளது. வூஹான் நகர் 2020 ஜனவரி மாதத்திலேயே முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டது. முழு நகரும் பூட்டப்பட்டது. வூஹான் நகர் 4 மாத காலம் பூட்டப்பட்டதனைத் தொடர்ந்து தற்பொழுது பழைய நிலைக்கு படிப்படியாக திரும்பிக்கொண்டுள்ளது. சீனாவின் பொருளாதாரப் பலத்துடனேயே அப்பிரதேசம் மீண்டு வருகிறது.

கொரோனா தொற்று நோயின் மூன்றாவது கட்டத்தை சிங்கப்பூர் எதிர்கொண்டு வருகிறது. முதலாவது கட்டத்தில் சுமார் 300 பேர் நோய்த் தொற்றுக்குள்ளானதாக கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவிலிருந்து வருகை தந்தவர்களே இவ்வாறு நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். இரண்டாவது கட்டமாக வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த சிங்கப்பூர் நாட்டவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது.

எமது நாடு ஆரம்பம் முதலே அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் விடுத்த அறிவுறுத்தல்களை ஏற்று நடந்துகொண்டிருந்தால் இந்நிலைமையை கூடுதலான அளவில் கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்பதே உண்மை.  பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதத்தில் இந்நோயின் கொடூரத்தன்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முன்வைத்த கருத்துக்களை அரசாங்கம் பாரதூரமானதாகக் கருதவில்லை.

இப்படி முன்வைக்கப்பட அறிவுறுத்தல்களை சிறிதளவேனும் கவனத்திற்கொள்ளாமல் இலங்கை கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட்ட நாடு என்பதாக சுற்றுலாத்துறை தொடர்ந்தேர்ச்சியாக பிரச்சார நடவடிக்கைகளை கூட முன்னெடுத்தது. தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலையில் அரச ஊடகங்களும் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்ற சில ஊடகங்களும் உண்மை நிலையை மறைத்து சகல விடயங்களும் நன்றாகத்தான் உள்ளது என்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டுள்ளதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

அன்றாடம் தமக்கான உணவுகளை தேடிக்கொண்டிருப்பவர்களும் ஏழை மக்களும் அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கையில் பணமுள்ளவர்கள் ஒரு வார காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் சேகரித்துக் கொண்டுள்ளார்களே ஒழிய ஏழை மக்களின் கவலைகள் குறித்த யதார்த்தத்தை சமூகத்துக்கு வெளிப்படுத்த வழியின்றி உள்ளனர்.

பாராளுமன்றம் பூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் செப்டம்பர் வரையில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த உறுப்பினர்கள் ஒரு புறத்தில் தள்ளப்பட்டுள்ளனர். மக்களுக்கு பொறுப்புக்கூறல் அற்ற வெளிப்படைத் தன்மையில்லாத அரசியல் சுற்று நிரூபத்தின் படி சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிவில் சமூகத்தின் குரல்களுக்கு இடமில்லாமல் போயுள்ளது. சாதாரண மக்களின் குரல்களுக்கும் இடமில்லை.

இப்படியானதொரு சூழல் இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டத்தின் மூலம் பிரஜைகளுக்கும் பொறுப்புச் சொல்லக்கூடியவர்களுக்கும் இடையில் மிகப்பாரிய இடைவெளியொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் அபாயகரமான நிலைமையாகும். இன்று முழு உலகமும், மனித குலமும் முகம்கொடுத்து வருகின்ற இந்நெருக்கடி நிலைமைக்கு நாடெனும் வகையில் எம்மால் பிரிந்து நின்று செயற்பட முடியாது. இதற்கு நாம் ஒரே தேசம் எனும் வகையில் முகம்கொடுக்க வேண்டும்.

இந்தியா உள்ளிட்ட இதர நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற கிழங்கு, பருப்பு, வெங்காயம் போன்ற உணவுப்பொருட்கள் எதிர்வரும் காலப்பகுதியில் நிறுத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளது. இப்பின்னணியில் ஊடரடங்குச் சட்டம் மற்றும் சில நகரங்களை பூட்டியிருப்பதன் மூலம் எமது நாட்டின் விவசாயப் பயிர்ச் செய்கை வீழ்ச்சியடையாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது. இதன் மூலம் ஏற்படக்கூடிய மனிதாபிமான நெருக்கடிகள் தீவிரமடைகின்ற போது மக்கள் மத்தியில் சந்தேகம், அச்சநிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

இத்தகைய சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டுமெனில் ஜனநாயக அடிப்படைகளுக்கு அமைய கலந்துரையாடல்கள், கருத்துப் பறிமாறல்களுக்கு இடமளிக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். குறுகிய அரசியல் சுற்று நிரூபங்களுக்கு பின்னால் செல்லாமல் அனைத்து அரசியல் தரப்புக்களையும் உள்ளடக்கி எமக்கு முன்னால் உள்ள இவ்வனர்த்தத்திற்கு கூட்டாக முகம்கொடுக்கக்கூடிய வகையில் பொறுப்புவாய்ந்தவர்கள் கவனம் செலுத்துவது கட்டாயமானது.

எனவே கலந்துரையாடல் மூலம் ஒரு உடன்பாட்டிற்கு வந்து ஒரு தேசமான எல்லோரும் ஒன்றிணைந்து இந்தச் சவாலுக்கு முகம்கொடுப்பதற்கு தூரநோக்குடன் செயற்பட வேண்டும். அவ்வாறின்றி இவ்வனர்த்தத்தை கேடயமாகப் பயன்படுத்தி பிரபல ஊடகங்களை தமக்கு சாதகமான முறையில் பயன்படுத்தி கடும் ஏகாதிபத்தியவாதத்திற்கு செல்வதற்குள்ள வழிகளை புரிந்து செயற்படாமல் இருந்தால் எமது சமூகத்தில் சட்ட ஆதிக்கம், தனித்துவம், பெறுமதி போன்ற ஜனநாயக விடயங்கள் சவாலுக்கு உள்ளாவதையே அவதானிக்க முடியுமானதாக இருக்கும்.

நாம் விழ்ப்புடனும் நல்ல சிந்தனையோடும் இருக்க வேண்டும். பொறுப்புடனும் தூரநோக்குடனும் செயற்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here