கிந்தோட்டை தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மௌனம் காப்பதேன்?

0
0

 – லத்தீப் பாரூக் –

காலி கின்தோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட விதத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பற்றி ஏன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாய்மூடி மௌனம் காக்கின்றார்? முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகளையும் கடைகளையும் காடையர் கும்பல் அடித்து நொறுக்கி தீயில் பொசுக்கி கொள்ளை அடித்தும் உள்ளனர். பள்ளிவாசல்களைத் தாக்கி உள்ளனர். பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர் மற்றும் பிரதேச அரசியல் வாதிகளால் திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட விதத்தில் வெளி இடங்களில் இருந்து கூலிக்கு கொண்டு வரப்பட்ட காடையர் கும்பலாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரதேச முஸ்லிம்கள் இப்போது நம்புகின்றனர்.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி பூஸா மற்றும் றத்கம ஆகிய இடங்களில் இருந்து பஸ்களிலும் லொறிகளிலும் காடையர்கள் கூட்டம் அழைத்து வரப்பட்டுள்ளது. அவர்களுக்கு சில உள்ளுர் வாசிகள் முஸ்லிம்களின் வீடுகளையும் கடைகளையும் பள்ளிவாசல்களையும் ஏனைய இடங்களையும் அடையாளம் காட்டி உள்ளனர்.

இந்தத் தாக்குதல் சிங்கள முஸ்லிம் உறவுகளோடு எந்த சம்பந்தமும் அற்றது என முஸ்லிம்கள் கூறுகின்றனர். அறிவு கெட்ட, இதயமே அற்ற இனவாத அரசியல் வாதிகள் தான் இதற்கு காரணமாக இருந்துள்ளனர். முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும் நோக்கில் அவர்களின் சொததுக்கள் இந்தக் கும்பலால்தான் சூறையாடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதியான கியாஸ் என்பவர் சிங்களவர்கள் சிலரின் வீடுகளைத் தாக்கி முஸ்லிம்களும் சிங்களவர்களதை; தாக்குகின்றார்கள் என்ற குழப்பத்தை ஏற்படுத்தியதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் தாக்குதலின் பின்னால் அரசியல் செயற்பட்டுள்ளது என மக்கள் உறுதியாக நம்புவதற்கு இதுவே காரணம்.

அப்படியாயின் இந்த மோதலுக்குப் பின்னால் நின்று அவற்றைத் தூண்டிவிட்ட அரசியல் வாதிகள் யார்? தமது முகங்களை மூடிக் கொண்டு அடையாளத்தை மறைத்து லொறிகளிலும் பஸ்களிலும் இவர்களை அந்த இடத்துக்கு கொண்டு வர பணம் செலவு செய்தவர் யார்? ஏன் ஒரு ஐ.தே.க முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர் சிங்கள வீடுகளைத் தாக்கினார்? இவை தான் இன்றைய பிரதான கேள்விகள்.

பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலின் பின் முஸ்லிம்கள் இந்த நாட்டின் ஜனாதிபதி மீதும் பிரதம மந்திரி மீதும் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளனர். தமது சொத்துக்களையும் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தவறிய அரசாங்கத்தின் மீதே அவர்கள் தற்போது நம்பிக்கை இழந்துள்ளனர்.

நாட்டில் இனவாதத்துக்கும் இனவாத தாக்குதல்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பேன், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன், இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேன், ஊழலை ஒழிப்பேன் என்று ஜனாதிபதி மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கின்றார். இவற்றில் இதுவரை அவர் எதை செய்தார் என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் இப்போது அவரை நம்பி வாக்களித்த முஸ்லிம்களின் நம்பிக்கையை அவர் இழந்துள்ளார் என்பது மட்டும் நிச்சயம். அளுத்கமை பேருளை தர்காநகர் ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டிவிட்ட ராஜபக்ஷ குடும்ப சகோதரர்களை வட இவர் எந்த வகையிலும் வித்தியாசமானவர் அல்ல என்பதை புரிந்து கொள்ள முஸ்லிம்களுக்கு நீண்ட காலம் செல்லவில்லை.

எவ்வாறாயினும் இன்னொரு அளுத்கமை சம்பவம் இடம்பெறும் என முஸ்லிம்கள் ஒரு போதும் எண்ணவில்லை. முழு நாட்டையும் தமது போலி வாக்குறுதிகளால் ஏமாற்றிய ரணில் மைத்திரி தலைமையில் மீண்டும் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறும் என அவர்கள் ஒரு போதும் எண்ணவில்லை. 2015 ஜனவரியில் இந்த அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டது முதல் அதன் நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது முஸ்லிம்கள் தமது சொத்துக்களையும் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள தாங்களே நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். முஸ்லிம்களைத் தாக்குவது, அவர்களின் சொத்துக்களை அழிப்பதும் சூறையாடுவதும் ராஜபக்ஷ மற்றும் ரணில் மைத்திரி அரசுகளுக்கு இரத்த விளையாட்டாக மாறியுள்ளது.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே அரசுகளின் கொள்கைகள் காணப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான தீமைகளின் அச்சாக செயற்படும் வாஷிங்டன், லண்டன், டெல்அவிவ் என்பனவற்றின் முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை முஸ்லிம்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று தசாப்தங்களாக உலக நாடுகளில் முஸ்லிம்கள் இம்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதும் இதே திட்டத்தின் கீழ் தான்.

தனது மேற்குலகம் சார்ந்த மற்றும் இஸ்ரேல் சார்ந்த கொள்கைகளுக்காக நன்கு அறியப்பட்டவர்தான் ரணில் விக்கிரமசிங்க. 2003ல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈராக்கை ஆக்கிரமிப்புச் செய்த போது அதை கண்டிக்க நினைத்த தனது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘அதை கண்டிக்க நினைத்தால் அரசாங்கத்தை விட்டு வெளியேறி விட்டு அதை கண்டியுங்கள்’ என்று கூறியவர்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
அதனைத் தொடர்ந்து ராஜபக்ஷ அரசும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் விரோதமாக பிரமாணம் செய்துள்ள எதிரிகளான இஸ்ரேலுக்கு தனது கதவுகளைத் திறந்து விட்டது. இந்த அரசு இஸ்ரேலுக்கு செங்கம்பளம் விரித்துள்ளது. அவர்கள் தான் மத்திய கிழக்கு பயங்கரவாதத்தின் ஞானத் தந்தைகள். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் உலகம் முழவதும் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்ட பிரதான சூத்திரதாரிகள். இந்த நடவடிக்கைகள் தான் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் உலகில் தவறான பார்வைக்கு உற்படுத்தியதோடு இஸ்லாம் வன்முறைகளோடு இரண்டறக் கலந்தது என்ற மாயையும் ஏற்படுத்தியது.

மியன்மாரின் கொலை வெறி பிடித்த அரசுக்கு இன்றும் ஆயுதங்களை விநியோகித்து வருவது இஸ்ரேல் தான். முஸ்லிம்களுக்கு எதிரான மியன்மாரின் படுகொலை படலம் இன்னும் தொடர இதுவே பிரதான காரணம். இந்த நடவடிக்கைகளுக்கு பக்க பலமாக குஜராத் முஸ்லிம்களின் இரத்தக் கறையில் தோய்ந்து போன முஸ்லிம்களுக்கு விரோதமான இந்தியப் பிரதமர் நரோந்திர மோடி இருக்கின்றார். மியன்மார் படுகொலைகள் உச்ச கட்டத்தில் இருந்த போது அங்கு விஜயம் செய்து அந்த அரசுக்கு தனது ஆதரவை நேரடியாகவும் பகிரங்கமாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த தீமையின் அச்சோடு தொர்புகளை வைத்துக் கொண்டு நல்லாட்சி என தம்மை அழைத்துக் கொள்ளும் இந்த அரசு மியன்மாரில் இடம்பெற்ற முஸ்லிம்களின் படுகொலையை கண்டிக்கவும் தவறி விட்டது. இதுதான் இன்றைய அரசின் வெளிநாட்டுக் கொள்கை.

ஆனால் அண்மையில் அமெரிக்காவின் லெஸ் வெகாஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கேள்வியுற்றதும் எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் இதயங்கள் அப்படியே உருகிவிட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்து டுவிட்டர் மூலம் ஜனாதிபதி சிறிசேன வெளியிட்ட தகவலில் ‘இது மிகவும் கொடூரமான ஒரு குற்றம். பாதிக்கப்பட்டவர்களின் அன்புக்கு உரியவர்களுக்கு எனது அனுதாபங்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நெருக்குதல் மிக்க காலப்பகுதியில் அமெரிக்க மக்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று உருகி வழிந்திருந்தார்.

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் இதற்கு சற்றும் சளைக்காத விதத்தில் உருகி வழிந்தார்.
ஆனால் மியன்மாரில் உலகில் மிகவும் ஆத்திரமூட்டப்பட்ட தாக்குதல் என வர்ணிக்கப்படும் சுமார் 13 லட்சம் முஸ்லிம்களுக்கு எதிரான இன ஒழிப்பு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது இவர்களின் மனிதாபிமானத்தை அடகு வைத்திருந்தார்களா அல்லது வேறு யாருக்காவது வாடகைக்கு விட்டிருந்தார்களா?

ரணில் – மைத்திரி கூட்டரசை ஏற்படுத்துவதில் அதிலும் குறிப்பாக சுமார் 24க்கும் மேற்பட்ட தோல்விகளுக்குப் பின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உயிரூட்டுவதில் முஸ்லிம்களின் வாக்குகள் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதை ரணில் – மைத்திரி ஆகிய இருவரும் முற்றாக மறந்து விட்டனர்.

இது ஒரு அழிவு. இஸ்ரேல் தமக்கே உரிய சொந்த நிகழ்ச்சி நிரலோடு இங்கு மீண்டும் குடியேறி உள்ளனர். அநேகமான அரசியல் வாதிகளுக்கும் அநேகமான பிரதான பிரிவு ஊடகங்களுக்கும் இது புரிவதில்லை. இஸ்ரேல் எங்கு கால் எடுத்து வைக்கின்றதோ அங்கு அவர்கள் செய்யும் முதலாவது பணி இஸ்லாத்தை மாசு படுத்தக் கூடிய கூலிப் படைகளை இனம் கண்டு அவர்களுக்கு தேவையானதை கொடுத்து அவர்களை வாடகைக்கு அமர்த்தி அவர்கள் மூலம் முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடக் கூடிய வழிமுறைகளைக் கண்டறிவதுதான்.
இதே வழிமுறையை அவர்கள் இலங்கையிலும் பின்பற்றுவர்கள் என்பதே அவர்களைப் பற்றி நன்கு அறிந்த, விடயம் தெரிந்த முஸ்லிம்களுக்கு எற்பட்டுள்ள பிரதான அச்சமாகும். சிங்கள சமூகத்துக்குள் உள்ள இனவாதிகளை முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் தூண்டிவிடுவார்கள் என்பது நியாயமான ஒரு சந்தேகமாகும்.

முஸ்லிம்களை அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொல்வது தான் இன்றைய உலகின் புதிய ஒழுங்கு. 1979ல் சோவியத் யூனியன் சிதைவுற்ற பிறகு உலகின் ஒரே ஏகபோக வல்லரசாக அமெரிக்கா தோற்றம் பெற்றதில் இருந்து இதே நிலைதான். முஸ்லிம் நாடுகள் அன்று முதல் ஆக்கிரமிக்கப்பட்டன. ஈவு இரக்கமின்றி இந்த நாடுகள் மீது குண்டுகள் போடப்பட்டன. அப்பாவி முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இவை எல்லாமே பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் தான் நடத்தப்பட்டன. இன்றும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இஸ்ரேல் அமெரிக்க திட்டத்தில் பிரிட்டன் பிரான்ஸ் ரஷ்யா இந்தியா என்பனவும் இணைந்துள்ளன. இந்தியாவின் BJP அரசு அதன் பங்காளிகளான இந்து தீவிர வாத அமைப்புக்களான RSS உற்பட பல அமைப்புக்கள் இதில் இணைந்துள்ளன.

இந்த சக்திகளின் பின்னணி ஆதரவுடன் தான் மியன்மார் அரசு றாக்கின் மாநிலத்தில் றோஹிங்யா முஸ்லிம்கள் மீதும் தனது வன்முறைகளைக் கட்டவிழத்து விட்டது.

இலங்கை அரசின் அலட்சியப் போக்கை பயன்படுத்தி இந்த தீய சக்திகள் இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறான இனச் சுத்திகரிப்பு வன்முறைகளை கட்டவிழ்த்து விடலாம் என முஸ்லிம்கள் அச்சமடைய மூல காரணம் உலகின் இந்த நிலைமைதான். மியன்மாரில் வன்முறைகளுக்கு காரணமாக அமைந்த அஷின் விராத்து தேரருடன் உள்ளுர் சக்திகளுக்கு வெளிப்படையாக உள்ள தொடர்புகள் இந்த அச்சத்துக்கு மேலும் வலுவூட்டுகின்றன.

கடந்த மூன்றாண்டுகளின் நிலைமையையும் அதிகரித்து வரும் வன்முறைகளையும் அவதானிக்கின்ற போது உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் என்ன செய்தார்களோ அதை இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக செய்வதற்கு சிங்கள் கூலிப்டையினரை தூண்டி விடக்கூடும்.

ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இனவாத அரசியல், உலகில் ஒரு காலத்தில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு உதாரணமாகத் திகழ்ந்த இந்த சொர்க்க பூமி நாசமாக்கி விடும். இன நல்லிணத்தையும் அது சிதைத்து விடும்.

சுதந்திரத்தக்குப் பின் ஏழு தசாப்தங்கள் கழிந்தும் கூட உலகில் மிகவும் மோசமாக நிர்வகிக்கப்பட்ட கட்டுப்படுத்த முடியாத ஊழல் நிறைந்த நாடு என்ற நிலையில் இலங்கை இருக்கவும் இதுவே பிரதான காரணம். ஊடகங்களை எடுத்துக் கொணடால் ஒவ்வொரு நாளும் ராஜபக்ஷ அரசு செய்த ஏதாவது ஒரு ஊழலை வெளிக் கொண்டு வரும் அதேவேளை இந்தப் புதிய ஆட்சியின் ஏதாவது ஒரு ஊழலும் தினசரி அரங்கேற்றப்பட்ட வண்ணமே உள்ளன. இதுதான் ஊழலுக்கு முடிவு கட்டுவோம் என சூளுரைத்துக் கொண்டு பதவிக்கு வந்த இந்த அரசின் இன்றைய மிகக் கேவலமான நிலையாகும்.

ரணில் – மைத்திரி அரசில் நம்பிக்கை வைத்த மக்கள் இன்று பெரும் ஏமாற்றத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நாட்டுக்குத் தேவைப்படும் மூன்றாவது சக்தி ஒன்று பற்றி அவர்கள் தற்போது ஆராயத் தொடங்கி உள்ளனர்.

சிங்கள சமூகத்தின் பொறுப்பு மிக்க அலகுகள் முன்வந்து இந்த சமூகத்தையும் நாட்டையும் இனவாத காடையர் கும்பலிடம் இருந்து காப்பாற்றுவதற்கான நேரம் வந்துள்ளது என்பதே பல்வேறு தரப்பினரதும் கருத்தும் எதிர்ப்பார்ப்பும் ஆகும். காரணம் இந்தக் கும்பல் இந்த நாட்டையே கொலைகளமாக்கும் ஆற்றல் கொண்டதாகக் காணப்படுகின்றது.

ஊழல் அரசியல்வாதிகளினதும் அந்த ஊழலுக்கும் மோசடிக்கும் எந்த வகையிலும் சளைக்காத முல்லாக்களிடமிருந்தும் அவர்கள் கிளப்பும் சர்ச்சையில் இருந்தும் விடுபட வேண்டிய காலமும் நேரமும் முஸ்லிம் சமூகத்துக்கும் வந்து விட்டது. முஸ்லிம் சமூகம் இந்தப் பிடிகளில் இருந்து விடுபட்டு பொறுப்பு மிக்க பெரும்பான்மை சமூகத்தின் அலகுகளுடன் இணைந்து இந்த சமூகத்தையும் பிரதான பிரிவோடு மீள் இணைக்க வேண்டும்.

நாட்டின் நலன் கருதி இந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இஸ்லாத்தை சிதைத்து உலகம் முழுவதும் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் பலம்மிக்க பூகோள சக்திகள் இப்போது தெற்காசிய முஸ்லிம்கள் மீது தமது கவனத்தை திசை திருப்பியிருக்கின்ற நிலையில் இலங்கையும் இன்னொரு கொலைகளமாக மாற்றப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here