கிழக்கிலிருந்து ஜெமீலுக்கு ஒரு கடிதம்

0
0

மக்காவிலிருந்து கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு திறந்த கடிதமொன்றை எழுதியுள்ளார். சாய்ந்தமருதுக்கு நகர சபையை பெற்றுக் கொடுப்பதில் அமைச்சர் ஹக்கீம் கவனம் செலுத்தவில்லை என்பதோடு சாய்ந்தமருது மக்களுக்கு சேவை செய்வதற்கு தனக்கு உரிய அதிகாரம் அதாவது அமைச்சர், முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்ற பிரதான இரு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அண்மைக்காலமாக ஜெமீல் அதீத மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பது இக்கடிதத்தின் மூலம் உணர முடிகின்றது. இதன் விளைவாக அவர் அரசியலில் பிழையான முடிவுகளை எடுத்துவிடக் கூடாது என்ற எதிர்பார்ப்பிலே இக்கடிதம் எழுதப்படுகின்றது.
சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றமொன்றை பெற்றுக் கொடுப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு ஜெமீல் அரசியலில் முதிர்ச்சியற்றவர் என்பதைக் காட்டுகின்றது. அதேநேரம் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றமொன்றை பெற்றுக்கொடுக்க முயன்றதை முஸ்லிம் காங்கிரஸ் தடுத்தது என்றும் விமர்சிக்கப் படுகின்றது.
அதாஉல்லாஹ் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றமொன்றை பெற்றுக்கொடுப்பதை வேணுமென்றே தேர்தல் வரைக்கும் தாமதப்படுத்தி, அரசியல் காய்நகர்த்தலை செய்ய முயற்சித்ததன் விளைவே அது கைகூடாமல் போக பிரதான காரணம் என்று அவரோடு இருந்த கல்முனை மாநகரசபை முன்னாள் மேயர் சிராஸ் குறிப்பிட்டிருந்தமை ஜெமீல் அறிந்திருக்கக் கூடும்.
முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றமொன்றை பெற்றுக் கொடுக்க அமைச்சர் கரு ஜெயசூரியவுடன் பேசி அதற்கான முன்னெடுப்புகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், நல்லாட்சி தோன்றி வெறும் நூறு நாட்களுக்குள் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்ற கோரிக்கை இந்தளவு வலுப்பெறுவதற்கான காரணம் அரசியல் சூழ்ச்சிகள் என்பதை ஜெமீல் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் கிராமத்துக்கு கட்சியல்ல, அது தேசிய கட்சி என்ற வகையில் அனைத்து ஊர்களையும் அவர்களது அபிலாசைகளையும் உள்வாங்கித்தான் அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய நிலைப்பாட்டில் உள்ளது என்பதை பாமரன் கூட அறிவான். மருதமுனை மற்றும் கல்முனை மாநகர சபைக்குற்பட்ட தமிழ் சகோதரர்களும் கூட தமக்கான உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
அவ்வாறு இருக்கும் போது எடுத்தேன் கவிழ்த்தேன் என இவ்விடயத்தை முஸ்லிம் காங்கிரஸ் அணுகுவது சாணக்கிய அரசியலாக இருக்காது. இந்தக் கருத்திலே ஹாபிஸ் நசீர் அஹமத் கிழக்கு முதலமைச்சராக நியமனம் செய்யப்படும் வரைக்கும் நீங்களும் இருந்தீர்கள். ஆனால் இப்போது சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றமொன்றை பெற்றுக்கொடுக்க உயிர் துறப்பேன் என்ற கோஷத்தை கையில் எடுத்துள்ளீர்கள். நீங்கள் இன்னும் சற்று பொறுமையாக இருந்தாலே அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் நிஜாமுதீனுக்கு தேசியப்பட்டியல் வழங்கி சாய்ந்தமருது மக்களை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கௌரவித்துள்ளது என்பதை சாய்ந்தமருது மக்களும் பள்ளிவாயல்களும் இன்னும் நினைவில் வைத்திருப்பர். ஆனால் உங்களுடைய பிரச்சினை சாய்ந்தமருதுக்கான நகர சபை கோரிக்கை அல்ல, உங்களுக்கு அரசியல் அதிகாரமான முதலமைச்சர் பதவி கிடைக்காமையேயாகும்.
உங்களுடைய முதலமைச்சர் கனவு நனவாகிப் போகாததால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கக் கூடும். இருப்பினும் யதார்த்ததை நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். மட்டக்களப்பு, முஸ்லிம் காங்கிரஸ் அதிக சவால்களை எதிர் கொள்ளும் பலவீனமானதொரு மாவட்டம். அதேநேரம் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக்கொள்வதில் அன்றிருந்த சவால்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த நிலையில் கட்சியின் முடிவு ஹாபிஸ் நசீர் ஆக இருந்தது.
இன்று ஹாபிஸ் நசீர் தமது முதலமைச்சர் பதவி ஊடாக மிகக் குறுகிய காலப் பகுதிக்குள் பல்வேறு வேலைதிட்டங்களை திறம்பட செய்துவருகின்றார் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இந்த இடத்தில் கட்சித் தலைமையின் முடிவு சரியாகவே அமைந்திருக்கிறது. அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினரை பெறக் கூடியளவு வாக்குகளை கொண்டும் எம்.பி. யை இழந்து நிற்கும் சம்மாந்துறைக்கு மாகாண அமைச்சு வழங்கப்பட்டமையும் நியாயம் என்பதை உங்களது மனசாட்சி மறுக்காது.
உங்களுக்கு கட்சியால் வழங்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்ற பொறுப்பை எந்தளவு வினைத்திறனுடன் செயலாற்றினீர்கள் என்பதை சற்று சிந்தியுங்கள். ஒரு சமூகத்தின், கட்சியின் முதுகெலும்பு இளைஞர்கள். நீங்கள் திறம் படைத்தவர் என்றிருந்தால் குறைந்த பட்சம் அம்பாறையில் மட்டுமாவது இளைஞர்களை ஒன்று திரட்டி மூலை முடுக்கெல்லாம் உங்களது பெயரை ஒலிக்கச் செய்திருக்கலாம். உங்களால் குறைந்த பட்சம் 10 பேரையாவது இளைஞர் காங்கிரஸில் இணைக்க முடிந்ததா என்ற கேள்வி எழுப்புவதை தவிர்க்க முடியாதுள்ளது. இவ்வாறு பல்வேறு கேள்விகளை உங்களை நோக்கி தொடுக்க முடியும்.
உங்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குவது அல்ல இக் கடிதத்தின் நோக்கம். நீங்கள் அரசியல் தற்கொலைக்கு நிகரான தீர்மானங்களை எடுத்துவிடக் கூடாது என்ற அக்கறையே இக்கடிதத்தின் நோக்கம். மயில் கட்சி உங்களுக்கு கதவு திறந்திருக்கக் கூடும் அல்லது குதிரைக்காரர் சவாரி செய்ய அழைத்திருக்கக் கூடும். குதிரையில் சவாரி செய்த அனுபவம் சிராஸிடம் நிறையவே இருக்கும். தேர்தலின் பின்னர் மயில் மற்றும் குதிரைக்கு தஞ்சம் புக கூடு இருக்குமா என்ற சந்தேகம் இப்போதே மக்களிடத்தில் எழுந்துள்ளது.
கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் உங்களுடைய சொந்த வீடு முஸ்லிம் காங்கிரஸ்தான். தலைமையோடு மனம் திறந்து பேசுங்கள். தீர்வு நிச்சயம் கிட்டும். மக்காவில் இருந்து பிழையான முடிவுகளை எடுத்தவர் என வரலாற்றில் பெயர் எடுக்காமல் இருக்க பிரார்த்திக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here