கூட்டு இஜ்திஹாத்: அறிமுகமும் பிரயோகமும்

0
9

ஆசிய பிராந்தியத்துக்கான பத்வாவுக்கும், வழிகாட்டலுக்குமான சட்ட மன்றத்தின் தேவை

  • உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத்

அறிமுகம்

கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முஸ்லிம்கள், ஹிந்துக்கள், பௌத்தர்கள் ஆகியோர் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இப்பிராந்தியத்தில் சில நாடுகள் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளாக உள்ளன. உலக முஸ்லிம் சனத்தொகையில் பெரிய இடத்தை வகிக்கும் இந்தோனேசியா இப்பிராந்தியத்தில் உள்ள ஒரு பெரிய நாடாகும். 261 மில்லியன் மக்களைக் கொண்ட இந்நாட்டில் முஸ்லிம்கள் 87 வீதமாக உள்ளனர்.

212 மில்லியன் மக்களைக் கொண்ட பாகிஸ்தான் இப்பிராந்தியத்தில் உள்ள மற்றொரு பெரிய முஸ்லிம் நாடாகும். இவர் களில் 94 வீதமானோர் முஸ்லிம்களாவர். இதுபோன்று பங்களாதேஷ் அடுத்த பெரிய முஸ்லிம் நாடாகும். இங்கு சுமார் 163 மில்லியன் மக்களில் 90 வீதமானவர்கள் முஸ்லிம்களாவர். அத்துடன் மாலைதீவு, மலேசியா, புரூனையிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.

இவற்றில் பல நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்றனர். 2011 ஆம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம் இந்தியாவில் சுமார் 172 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். இது இந்திய சனத்தொகையில் முதலாவது பெரிய சிறுபான்மைச் சமூகமாகும். உலகில் மிகப் பெரிய முஸ்லிம் சிறுபான்மையினராக இந்திய முஸ்லிம்கள் உள்ளனர்.

இலங்கையைப் போன்று தாய்லாந்தில் ஓரளவு அதிகமாக முஸ்லிம்கள் உள்ளனர். சுமார் 10 வீதம் முஸ்லிம்கள் இவ்விரு நாடுகளிலும் காணப்படுகின்றனர். இலங்கையில் முஸ்லிம்கள் கிழக்குப் பிராந்தியத்தில் செறிவாக வாழ்வது போன்று தாய்லாந்தின் தென் பகுதியில் வாழ்கின்றனர்.

அத்துடன் சிங்கப்பூர் இப்பிராந்தியத்தில் முக்கியமான நாடாகும். இது பொருளாதார ரீதியில் வளர்ந்த ஒரு நாடாகப் பார்க்கப்படுகின்றது. இங்கு வாழும் சுமார் 5.6 மில்லியன் மக்களில் 14 வீதம் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றும் பூட்டான், நேபாளம், கம்போடியா, மியன்மார், லாவோஸ் போன்ற நாடுகளில் மிகக் குறைவான முஸ்லிம்கள் உள்ளனர். இவ்வகையில் உலக முஸ்லிம் சனத்தொகையில் இப்பிராந்திய முஸ்லிம்களின் வகிபாகம் அதிகமாக இருப்பதைக் காணலாம்.

ஒருமித்த பல அம்சங்கள்

இந்த அனைத்து நாடுகளிலும் பல ஒத்த விடயங்கள் உள்ளன. உலக சனத்தொகை யில் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருந்தா லும் இப்பிராந்தியத்தில் அவர்கள் விகிதாசாரத்தில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.

இப்பிராந்தியத்தில் வாழும் மக்களுக்கு மத்தியில் மதத்திற்கு முக்கியத்துவம் உள்ளது. மஸ்ஜித்கள், கோவில்கள், பன்சலைகள் அதிகமாக இருக்கின்றமை இதற்கான அடையாளங்களில் ஒன்றாகும். ஆனால் இன்று நாஸ்திக மற்றும் மதச்சார்பில்லா சிந்தனைகள் வளர்ந்து வருவதை அவதானிக்க முடியுமாக உள்ளது.

ஒப்பீட்டு ரீதியில் இப்பிராந்தியம் இன மோதலற்ற பகுதியாகும். ஆங்காங்கு சிறு இன ரீதியான பிரச்சினைகள் இருந்தாலும் மக்கள் அமைதியாக வாழும் இடங்களே இங்கு அதிகமாக உள்ளன.

பிராந்திய முஸ்லிம்களுக்கான சட்ட மன்றத்தின் அவசியம்

இஸ்லாம் மனித சமூகத்திற்கு அருளப்பட்ட மார்க்கமாகும். முஹம்மத் (ஸல்) அவர்கள் முழு உலகத்தாருக்கும் அருளாக அனுப்பப்பட்ட தூதராவார். அல்குர்ஆன் அனைத்து மனித சமூகத்திற்கும் வழி காட்டுகின்றது. அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் அது தீர்வு சொல்கின்றது.

எனவே இப்பிராந்தியத்தில் முஸ்லிம்களாக வாழும் நாம் எப்படி தஃவா சமூக மாக வாழலாம். இங்குள்ள பௌத்த, இந்து மற்றும் ஏனைய மக்களுக்கு மத்தியில் இஸ்லாத்தை, நாகரிகத்தை தோற்றுவிக்கும் தூதாக நாம் எப்படி முன்வைக்க முடியும்? மக்கள் இன்று எதிர்நோக்கும் பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாச்சார பிரச்சினைகளுக்கு இஸ்லாம் எப்படித் தீர்வாக அமையலாம்?

முஸ்லிம் சமூகம் சிறுபான்மையாக வாழும் இப்பிரதேச நாடுகளில் அடுத்த சமூகங்களுடன் கரைந்து விடாமல் கலந்து வாழ வேண்டும், எந்த இடங்களில் இணைந்து வாழ முடியும், இஸ்லாம் சொல்லும் தனித்துவங்கள் எவை என்பது பற்றியும் சிந்திக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.

குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மை நாடுகள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதுடன், தேச அபிவிருத்தியில் பங்காளிகளாகப் பணியாற்றுவது காலத்தின் கடமையாக உள்ளது. தான் வாழும் நாட்டை மேம்படுத்த உழைப்பது கடமை என இஸ்லாம் கூறுகின்றது.

ஒதுங்கிய, மூடுண்ட சமூகமாக இல்லாது, முன்மாதிரியான சமூகமாக எப்படி வாழலாம், பிறர் தாக்கத்திற்கு உட்படுவோராக இல்லாது தாக்கம் செலுத்தும் சமூகமாக வாழ்வதற்குரிய அடிப்படைகள் எவை என்பது பற்றி இப்பிராந்திய சிறுபான்மை முஸ்லிம் சமூகங்கள் சிந்திக்க வேண்டும். மொகலாய ஆட்சியாளர்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும். இதற்கான பிக்ஹ் வடிவமைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் சில தனித்து வங்கள் உள்ளன. அவற்றின் இயல்புகளும் வேறுபட்டவை. அதன் கலாச்சாரங்கள், மரபுகளுக்கு மத்தியில் வேறுபாடுகள் உள்ளன. இவற்றை நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.

இப்பிராந்தியத்தில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் ஹனபி, ஷாபிஈ மத்ஹபுகளைப் பின்பற்றுகின்றனர். ஹனபி மத்ஹபின் வளர்ச்சியில் இந்திய அறிஞர்களின் பங்களிப்பு மகத்தானது. ‘அல் பதாவா அல் ஹிந்திய்யா’ என்ற நூல் இந்தியா அறிஞர்களின் ஆழ்ந்த அறிவுக்கு ஒரு அடையாளம். இது ஹனபி மத்ஹபின் மூல நூல்களில் ஒன்று.

இவ்வகையில் இப்பிராந்தியத்தில் வாழும் அறிஞர்களை உள்ளடக்கிய வகை யில் ‘பிராந்திய சட்ட மன்றம்’ தோற்று விக்கப்பட வேண்டும். இதில் ஷரீஆத் துறைசார் அறிஞர்களுடன் ஏனைய துறை சார் அறிஞர்களும் உள்வாங்கப்பட வேண் டும்.

சட்ட மன்றத்தின் நோக்கங்கள்:

பிராந்தியத்தில் பொதுவாக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள், வழிகாட்டல்களை வழங்குதல்.

இஸ்லாம், ஷரீஆ சட்டம் தொடர்பில் எழுப்பப்படும் பல்வேறு சந்தேகங்கள், பிரச்சினைகள் மற்றும் தீவிரவாத சிந்தனைகளை எதிர்கொள்ளல். இதற்குத் தேவையான பதில்களை முன் வைத்தல்.

ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல். அவற்றைத் தூண்டுதல். இவ் வாய்வுகள் மூன்று பரப்புகளில் இடம்பெறலாம். இவற்றின் முன்மொழிவுகளை வெளியிடல்.

ஒன்று: பொதுவாக இப்பிராந்திய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதற்கான தீர்வு முன்மொழிவுகள்,

இரண்டு: பிராந்திய நாடுகளின் மேம்பாடு, மற்றும் இந்நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அதற்கான தீர்வு முன் மொழிவுகள்,

மூன்றாவது: குறிப்பாக முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அதற்கான தீர்வு முன்மொழிவுகள், பிராந்திய உலமாக்கள், அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்தல்.

இஸ்லாமிய எழுச்சியையும், குறிப்பாக இளைஞர்களையும் வழிகாட்டும் வகையில் இஸ்லாத்தின் நடுநிலையான சிந்தனையைப் பரப்புதல்.

இஸ்லாமிய சட்டத்தின் உயர்வையும், அது மனித சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு வழிகாட்டக் கூடிய வகையில் அதில் பொதிந்துள்ள சிறப் பம்சங்களையும் எடுத்தியம்புதல்.

ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம்களை மையப்படுத்தி 1997 ஆம் ஆண்டு பத்வா வுக்கும், ஆய்வுக்குமான ஐரோப்பிய சபை ஸ்தாபிக்கப்பட்டது. இது ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதுடன், அவர்களை சமூக வாழ்வில் ஈடுபடுத்து வதற்கான வழிகாட்டல்களை கொடுத்து வருகின்றது.

பத்வாவின் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்ட மூலாதாரங்களான அல் குர்ஆன், சுன்னா, இஜ்மா, கியாஸை முற்படுத்தல்

கருத்து வேறுபாடுள்ள ஏனைய சட்ட மூலாதாரங்களையும் பத்வாவின் போது எடுத்துக் கொள்ளல்.

ஒரு மத்ஹபுடன் மாத்திரம் சுருங்காது நான்கு மத்ஹபுகளையும் கருத்திற் கொண்டு, மிகப் பொருத்தமான கரு த்தை சரியான ஆதாரங்களை மையப் படுத்தி தெரிவு செய்தல். தேவையின் போது நான்கு மத்ஹபுகளுக்கு அப் பால் ஸஹாபாக்கள், தாபியீன்கள், பிற்காலத்தில் தோன்றிய ஏனைய முஜ்தஹித்களின் கருத்துக்களையும் எடுத்தல்.

ஷரீஆவின் நோக்கங்களான மகாஸிதையும், நடைமுறை நிலைமைகளையும் கருத்திற் கொண்டு பத்வாக்களைச்          சொல்லல்.

இஸ்லாத்தின் இலகுத்தன்மை, மனித நலன் என்பதை பத்வாவின் போது கவனத்திற் கொள்ளல்.

இவ்வகையில் தென் மற்றும் கிழக்காசியாவை மையப்படுத்திய ‘பத்வாவுக்கும், வழிகாட்டலுக்குமான சட்ட மன்றம்’ தோற்றுவிக்கப்பட வேண்டும். எந்த அரசாங்கத்தின் கீழும் இயங்காது சுதந்திரமாக இது இயங்க வேண்டும். தகுதியான அனுபவமுள்ள உலமாக்கள், அறிஞர்களை இணைத்த வகையில் இந்த சட்ட மன்றம் உருவாக்கப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here