பறிபோய் விடுமா கொழும்பு அல்-அமீன் வித்தியாலயம்?

1
0

தொகுப்பு :: மிப்றாஹ் முஸ்தபா

ஆவணப்படம் :: அனஸ் அப்பாஸ்

தலைநகரின் கேந்திரமாகத் திகழும் காலி முகத்திடலின் அண்மையில் அமைந்துள்ள ஒரு பாடசாலைதான் அல்-அமீன் வித்தியாலயம். 1946ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 70 ஆவது வருடப் பூர்த்தியை இந்த ஆண்டு நிறைவு செய்திருக்கிறது.

தலைநகரிலுள்ள 17 முஸ்லிம் பாடசாலைகளுள் மிகப் பெறுமதியான நிலத்தில் உள்ள ஒரே பாடசாலையும் இப்பாடசாலைதான். தற்போது இங்கு அதிபராகக் கடமையாற்றும் திருமதி எம்.யூ. சானாஸ் கடந்த வருடம் இப்பாடசாலையை பொறுப்பேற்கும் போது இப்பாடசாலையில் வெறும் 72 மாணவர்கள்தான் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் கொம்பனித் தெருவில் காணப்பட்ட அனைத்து முஸ்லிம் குடியிருப்புக்களையும் அரசாங்கம் அகற்றியமையால் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்ற இப்பாடசாலையிலிருந்து அதிகமான மாணவர்கள் விலகிச் சென்றனர்.

தலைநகரின் முக்கிய இடத்தில் அமைந்துள்ள இப்பாடசாலையில் குறைந்தளவிலான மாணவர்களே கல்வி கற்கின்றனர் என்ற காரணத்தை வைத்து இப்பாடசாலையின் காணியை அபகரிப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னைய அரசாங்கத்தினால் நேரடியாகவும் திரை மறைவிலும் மேற்கொள்ளப்பட்டன.

மேல் மாகாண முதலமைச்சராக இருந்த போது பிரசன்ன ரணதுங்க தனது பரிவாரங்களுடன் இப்பாடசாலைக்கு விஜயம் செய்து பெறுமதிமிக்க இடத்தில் சொற்ப மாணவர்களோடு இயங்கி வருகின்ற இப்பாடசாலையை மூடி விட வேண்டும் என்று தெரிவித்துச் சென்ற வரலாற்றையும் இலகுவில் மறந்து விட முடியாது.

இந்தப் பாடசாலை மூடப்பட்டு விட்டது என்ற மனோநிலையே மக்களிடம் காணப்பட்டது. இதனால் பிள்ளைகளை இந்தப் பாடசாலைக்கு சேர்ப்பதில் பெற்றோர்கள் தயக்கம் காட்டினர். இங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக வீழ்ச்சி அடைந்தது. இந்தப் பெறுமதியான இடத்தில் 72 மாணவர்களுக்கு ஒரு பாடசாலை தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருந்தது. அந்த வகையில் இந்தப் பாடசாலையை காப்பாற்ற வேண்டுமானால் இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் பாடசாலை நிர்வாகத்திற்குக் காணப் பட்டது.

குறித்த இடத்தில் இப்பாடசாலையை தக்க வைத்துக் கொள்வதற்கு பல்வேறு முயற்சிகள் சமூகத்தால் மேற்கொள்ளப்பட்டன. இதனடியாக இப்பாடசாலையின் புதிய மாணவர் அனுமதி தொடர்பான துண்டுப் பிரசுரங்களை பாடசாலை நிர்வாகம் விநியோகித்தது. இந்த வருடத்தில் 50 வீதமான மாணவர்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்பாடசாலை செயற்பட்டது.

அதன் பிரதிபலனாக தற்போது இப்பாடசாலை யில் 124 மாணவர்கள் கல்வி கற்று வருவதோடு 22 ஆசிரியர்களும் கடமையாற்றுகின்றனர். தரம் 1 முதல் 11 வரையிலான தமிழ், சிங்கள மொழி மூலமாக மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்கக் கூடிய வசதியும் காணப்படுகின்றது. என் றாலும் இப்பாடசாலையில் சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கு விஞ்ஞான, இஸ்லாம் பாட ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது.

சிங்கள மொழி மூலமான இஸ்லாம் பாடத்துக்கான ஆசிரியர் பற்றாக்குறையை கவனத்தில் எடுத்த ஜம்இய்யதுல் உலமா சபை மௌலவி ஒருவரை தற்காலிகமாக நியமித்திருக்கிறது.

1000 மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய வகையில் சகல விதமான வளங்களும் காணப்படுகின்ற  இந்தப் பாடசாலையின் ஒரு சில வகுப்புக்களில் நான்கைந்து மாணவர்கள் கல்வி கற்கின்ற துரதிஷ்டமான நிலையே காணப்படுகின்றது. எனவே தான் இந்தப் பாடசாலையை மூடுவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கிறது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கக் கூடிய அதிகமான மாணவர்களின் விண்ணப்பங்கள் இடப்பற்றாக்குறை காரணமாக நிராகரிக்கப்படுகின்ற நிலையில் அத்தகைய மாணவர்களை இப்பாட சாலையில் சேர்ப்பதன் மூலம் எமது சமூகத்துக்கென்று தலைநகரின் முக்கிய இடத்தில் இருக்கின்ற இப்பாடசாலையை பாதுகாக்க முடியும்.

அந்தவகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் உதவியோடு இப்பாடசாலைக்கு மாணவர்களின் நுழைவு வீதத்தை அதிகரிப்பதற்காக பாடசாலை நிர்வாகம் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுவதோடு, அரசாங்கம் வழங்குவதற்கு மேலதிகமாக சீருடையும் வழங்கப்படுகின்றது.

போக்குவரத்து சிரமங்களினால் அதிகமான பெற்றோர்கள் இப்பாடசாலைக்கு தமது பிள்ளைகளை அனுப்பத் தயங்குகின்றனர் என்பதனால் ஜம்இய்யதுல் உலமாவின் நிதி உதவியோடு இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றும் இப்பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக இங்கு கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதன் காரணமாக தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

வறுமை கல்விக்குத் தடையாக அமையக் கூடாது என்ற வகையில் இலங்கை வரலாற்றில் எந்தப் பாடசாலைகளிலும் கிடைக்காத மதிய போசனம் இப்பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றது. பாடசாலை ஒரு சமூகத்துக்கு எந்தளவு தூரம் முக்கியத்துவமானது என்பதனை சமூகம் உணர்ந்திருப்பது மகிழ்ச்சி தரும் விடயமாகும்.

அந்தவகையில் தலைநகரின் கேந்திர முக்கியத்துவமிக்க, கல்வி கற்பதற்கு ஏதுவான அமைதியான ஒரு சூழலில் இப்பாடசாலை அமைந்திருப்பது விசேட அம்சமாகும்.

எனவே 70 வருடங்கள் பழைமை வாய்ந்த பெறுமதி வாய்ந்த சொத்தான இப்பாடசாலையை பாதுகாப்பது எமது சமூகத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here