கொழும்பு துறைமுக நகரிலிருந்து சைக்கிள் பாதை அமைக்க திட்டம்

0
7

( மினுவாங்கொடை நிருபர் )

கொழும்பு துறைமுக நகர் நுழைவாயிலுக்கு அருகிலிருந்து பத்தரமுல்லை – தியத்த உயன வரை சைக்கிள் பாதைக் கட்டமைப்பை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக, நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்பவர்களை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேல் மாகாண ஆளுநர் வை.ஏ.பி.கே. குணதிலக்க குறிப்பிட்டார்.

சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சைக்கிள் பாதை அமைக்கப்படவுள்ளது.

துறைமுக நகரின் நுழைவாயிலில் ஆரம்பமாகும் இந்தப் புதிய பாதை, காலி வீதிக்கு இணையாக சாரணர் வீதியூடாக பேர வாவி திசைக்குத் திரும்பி, கங்காராம விகாரைக்கு அருகில் விகாரமகாதேவி பூங்காவை நோக்கிச் செல்லவுள்ளது.

அங்கிருந்து தாமரைத் தடாகத்தினூடாக சுதந்திர சதுக்கம், பௌத்தாலோக்க மாவத்தை, பொரளை பொது மயானத்தினூடாக பேஸ்லைஸ் வீதியைக் கடந்து பத்தரமுல்லை நோக்கிச் செல்லவுள்ளது.

இதன் முதற்கட்டத்தில் வாடகைக்கு சைக்கிள்களை வழங்கும் 11 இடங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேல் மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.

ஒரு இடத்தில் பெறும் சைக்கிளை மற்றொரு இடத்தில் மீள வழங்க முடியும் என்றும், 2021 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here