கொவிட் 19 சட்ட ஆய்வு கூடம். இலங்கை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

0
4
  • பியாஸ் முஹம்மத்

பெரும் தொழில்நுட்ப வசதிகளை கொண்ட நாடுகளையும் மிஞ்சி கொரொனா வைரஸ் கட்டுப்பாடு செயற்பாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் இலங்கையும் முன்னணியில் உள்ளதென உலக சுகாதார ஸதாபனத்தின் இலங்கைக்கான  பிரதிநிதி ராஷியா பெண்டிஷே தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொற்று நோய் பரவல் தொடர்பான கண்காணிப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்க ந​டைமுறைப்படுத்தியுள்ள திட்டம் சாத்தியமளித்துள்ளதென தெரிவித்துள்ள அவர், அதற்கான தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளா​ர்.

உரிய நேரத்தில் வைரஸ் பரவலை தடுப்பதற்கான செயற்பாடுகளை இலங்கை வைத்திய நிபுணர்கள் முன்னெடுத்திருந்தனர் எனவும்,  பரிசோதனை, வைத்தியசாலைகளை புதிதாக நிறுவல் உள்ளிட்ட செயற்பாடுகளில் இலங்கையின் செயற்பாடு பாராட்டத்தக்க வகையில் இருந்ததெனவும் தெரிவித்தார்.அத்தோடு வெளிநாட்டில் இருப்பவர்களை அ​ழைத்துவந்து அவர்களை தனிமைப்படுத்தி சரியான முறையில் முகாமைத்துவம் செய்யப்படுவதாகவும், அரசாங்கத்துடன் மற்றைய தரப்புகள் இணைந்து செயற்பட்டிருக்காவிட்டால் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்காதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட் 19 ஐக் கட்டுப்படுத்துவதில் இலங்கை பெற்றுள்ள பெருமைக்கு அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட மற்றத் தரப்புக்களில் நாட்டின் பொதுமக்களுக்குப் பிரதான பங்கிருக்கிறது. அவை இராணுவக் கட்டுப்பாடுகளாக இருக்கட்டும் அல்லது சுகாதார விதிமுறைகளாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் மக்கள் முன்வந்து அரசாங்கத்துக்கு ஒத்துழைக்காதிருந்தால் இந்த வெற்றிகள் எப்படியும் சாத்தியமாகியிருக்காது என்பது மட்டும் உண்மை.

இராணுவத்தினரதும் சுகாதாரத் துறையினதும் கட்டுப்பாடுகளுக்கும் ஒழுங்குவிதிகளுக்கும் அப்பால் நீதித் துறையின் பங்களிப்பும் இந்த வெற்றியில் வேண்டப்பட்டதொன்றாக இருந்த போதிலும் அதனுடைய பங்களிப்பு போதுமானதாக இருக்கவில்லை. கொரோனா காலங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் கூட சட்டரீதியானது அல்ல என்று ரஞ்சன் ராமநாயக்க வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் வாதிட்டு அதனை உறுதிப்படுத்தினார். பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இது சட்டமல்ல என்பதை அறிக்கையொன்றின் மூலம் வெளிப்படுத்தியது. தேர்தல் திருவிழா தொடங்கி அரசியல்வாதிகளால் மக்கள் தெருவுக்கு இழுக்கப்படும் வரை மக்கள் சட்டமே அல்லாத இந்தச் சட்டத்தை மதித்து நடந்தார்கள் என்பது மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய விடயம். முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுடைய ஊர்வலத்தில் தொடங்கி தற்போதைய பாராளுமன்றத்துக்கான ஊர்வலம் வரை அரசியல்வாதிகள் மனம் போன போக்கில் நாட்டுச் சட்டத்தை மீறி வருகிறார்கள். அனுராதபுரத்தில் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்த தனது கட்சிக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சுகாதார விதிகளை மீறி அமைந்தபோது சுகாதார விதிகள் சட்டமாக்கப்படாமல் இதனைக் கட்டுப்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். ஆனால் 17 ஆம் திகதி சுகாதார விதிகள் வர்த்தமானியில் பிரகனப்படுத்தப்பட்ட பின்னரும் கூட அதே கூட்டங்கள் அதே பாணியில் அதே முக்கியஸ்தர்களால் நடத்தப்பட்டு வந்த பின்னரும் தேர்தல்கள் ஆணைக்குழு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தான் இருக்கிறது. குறிப்பான ஜனாதிபதி கலந்து கொள்ளும் கூட்டங்களில் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 500 பேருக்கும் அதிகமான மக்கள் திரள்கிறார்கள். ஆனால் ஜனாதிபதி எந்தக் கட்சியினதும் தலைவரல்ல. அப்படி இருந்தும் இந்த விடயத்தில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது ஒரு கட்சிக்கு வழங்கப்படும் விஷேட வரப்பிரசாதமாகவே அமைகிறது. இது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை சந்தேகத்துக்குட்படுத்துகிறது.

அக்கரைப்பற்றில் வேட்பாளர் அதாவுல்லாவின் ஊர்வலம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது கிழக்கிலும் தெற்கிலும் நடக்கின்ற ஊர்வலங்கள் தண்டனைக் கோவை, தனிமைப்படுத்தல் சட்டம், பொலிஸ் ஒழுங்குவிதிகள் அனைத்துக்கும் முரணானவை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கொரோனா காலத்தில் இது சட்டவிரோதமானது என்பதை பொதுமக்கள் தான் முறைப்பாடு செய்கிறார்கள் என்கின்ற அளவுக்கு நாட்டு மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். ஊடகவியலாளர் இந்தக் கேள்வியைக் கேட்டதற்குக் காரணம் அதனை மீண்டும் மீண்டும் வாய்திறந்து சொல்வதற்காகவல்ல. என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவே. நாட்டில் சட்டம் இருக்கிறது, ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றன என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் உடல் எரிக்கப்பட வேண்டும் இலங்கை அரச மருத்துவர் சங்கம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ததன் பின்னர் அது சட்டமாக்கப்பட்டது. உலகின் எந்த நாடும் இவ்வாறானதொரு சட்டத்தை இயற்றியிருக்கவில்லை. இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கு முக்கிய காரணம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை பூமியில் புதைப்பதனால் நிலத்துக்கடியில் வைரஸ் பரவும் என இலங்கையின் மருத்துவர்கள் முன்வைத்த பரிந்துரையாகும். இது விஞ்ஞானத்துக்கு முரணானது என இலங்கையின் சட்டத்தரணிகள், குறிப்பாக முன்னாள் நீதியரசர் சட்டக் கலாநிதி ஸலீம் மர்சூப் தலைமையிலான குழுவினர் எடுத்துச் சொல்லியும் அரச வைத்தியர்கள் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கவில்லை.

இந்த வகையில் கொரோனா தொடர்பில் சட்டமியற்றக் கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கான தகுதியும் அறிவும் கொண்ட வைத்தியர்களின் பற்றாக்குறை நாட்டிலே இருக்கிறது. தாம் அரசியல் அழுத்தத்துக்கு உட்பட்டோ இனவாத சக்திகளுக்குக் கட்டுப்பட்டோ இந்தப் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை என அரச மருத்துவர்கள் இதுவரை எங்குமே கருத்து வெளியிடாத நிலையில் இந்த முடிவுக்குத் தான் வரவேண்டியிருக்கிறது. அடுத்ததாக சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சட்டத்தை அமுல்படுத்துபவர்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கொவிட் 19 ஐக் கட்டுப்படுத்துவது என்பது வெறும் அறிக்கையாக மட்டுமே இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனால் கொரோனாவுக்கான சட்டமியற்றுதலில் உலக நாடுகளின் அறிவும் அனுபவமும் இலங்கைக்கு அவசியப்படுகின்றது.

கொவிட் 19 சட்ட ஆய்வு கூடமொன்று (Covid 19 Law Lab) ஜெனீவாவிலுள்ள உலக சுகாதார நிறுவனத்தில் நேற்று முன்தினம் (22) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பன்டமிக்கை முகாமை செய்வதற்கான பலமான சட்டக் கட்டமைப்பொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் 190 க்கு மேற்பட்ட நாடுகளின் சட்ட ஆவணங்கள் இங்கு சேகரிக்கப்பட்டு பகிர்வதற்கு வசதியளிக்கப்பட்டுள்ளது. நாடுகளில் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் தனிநபர்களினதும் சமூகங்களினதும் சுகாதாரத்தையும் நலனையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைத்துக் கொள்ள வசதியளிப்பது இதன் நோக்கமாகும். அத்துடன் இந்தச் சட்டங்கள் சர்வதேச மனித உரிமை நியமங்களை ஒழுகி நடப்பதை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும்.

www.COVIDLawLab.org என்பதனூடாக இந்த ஆய்வு கூடத்தில் பிரவேசிக்க முடியும். ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் செயற்திட்டம் (UNDP) உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்ஐவிஃஎய்ட்ஸுக்கான ஐநாவின் இணைந்த செயற்திட்டம் (UNAIDS)  ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் தேசிய மற்றும் சர்வதேச சுகாதாரச் சட்டங்களுக்கான ஓநீல் நிறுவனம் ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

நன்கு வரையப்பட்ட சட்டங்கள் பலமான சுகாதார முறைகளைக் கட்டியெழுப்புவதற்கு உதவுகின்றன. பாதுகாப்பானதும் தாக்கமுள்ளதுமான மருந்துகளையும் தடுப்பு மருந்துகளையும் மதிப்பீடு செய்வதற்கும் அனுமதி வழங்குவதற்கும் இந்தச் சட்டங்கள் உதவுகின்றன. இதன் மூலம் பாதுகாப்பானதும் சுகாதாரமானதுமான வேலைத்தளங்களையும் பொதுவெளிகளையும் உருவாக்குவதற்கான செயற்பாடுகளை இதன் மூலம் நடைமுறைப்படுத்த முடியுமாகிறது.

கொவிட் 19 உலகளாவிய தொற்று என்பதனால் அதனைத் தடுப்பதற்கு உலக நாடுகள் ஒருமித்த சட்டங்களை இயற்றுவது அவசியமாகிறது. அதற்கு ஒவ்வொரு நாடும் பின்பற்றிய சட்டங்கள் தொடர்பில் ஏனைய நாடுகள் அறிந்திருப்பதும் இந்தப் பணியை இலகுவாக்குகிறது. அதேபோல தத்தமது நாடுகளுக்கான சட்டங்களை இயற்றும் பொழுது ஏனைய நாடுகளின் அறிவையும் அனுபவங்களையும் பெற்றுக் கொள்ள முடியுமாயிருப்பது இந்தச் சட்ட ஆய்வுகூடத்தின் முக்கியமான விடயமாகும்.

இலங்கை இதுவரை மூன்று வழிகாட்டல்களை இந்தச் சட்ட ஆய்வுகூடத்தில் பகிர்ந்துள்ளது. தனியாள் பாதுகாப்பு உபகரணங்களைக் (PPE) கையாள்வதற்கான வழிகாட்டல்கள், கொவிட் 19 காலப்பகுதியில் சிறைக்கூடங்களுக்கான வழிகாட்டல்கள், முகக்கவசம், கையுறை, தொற்றுநீக்கிகள் தொடர்பான சுகாதார அமைச்சின் நிலைப்பாடு என்பனவே அவை. கொவிட் 19 தொடர்பில் இலங்கை ஒரே ஒரு சட்டத்தையே நிறைவேற்றியுள்ளது. கொவிட் 19 காரணமாக மரணித்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட வேண்டும் என்பதே அதுவாகும். (தேர்தல்களுக்கான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய ஒழுங்குவிதிகள் அண்மையில் வந்ததாகும்). இந்தச் சட்டம் மனித உரிமையை மீறுவதாகவும் விஞ்ஞானத்துக்கு முரணாக இருப்பதாகவும் பல தரப்புக்களினாலும் சுட்டிக் காட்டப்பட்டது. கொவிட் 19 சட்ட ஆய்வு கூடத்தில் இந்தச் சட்டம் இடம் பெறவில்லை.

விஞ்ஞானம், சான்றுகள் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டங்களும் கொள்கைகளுமே மக்களை சுகாதார சேவைகளை அணுகச் செய்து அவர்களை கொவிட் 19 இலிருந்து பாதுகாக்கின்றன. இது அவர்கள் களங்கப்படுத்தப்படுவதில் இருந்தும் பாரபட்சம் காட்டப்படுவதில் இருந்தும் வன்முறைகளில் இருந்தும் பாதுகாக்கிறது. இவ்வாறான கொள்கைகளையும் சட்டங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு கொவிட் 19 சட்ட ஆய்வு கூடம் உதவுகிறது என யுஎன்டிபியின் நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் கூறுகிறார்.

கொவிட் 19 பரவல் காலத்தில் இலங்கையில் முஸ்லிம்கள் மீது பாரபட்சங்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்லட், ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 44 ஆவது கூட்டத் தொடரில் ஆரம்ப உரை நிகழ்த்தும் போது சுட்டிக் காட்டியிருந்தார். ஆகவே பக்கச்சார்பின்றி கொவிட் 19 ஐக் கட்டுப்படுத்துவதை மட்டுமே நோக்காகக் கொண்ட சட்டமியற்றுவது தொடர்பில் இலங்கைக்கு ஏனைய நாடுகளின் அனுபவம் அவசியப்படுகிறது.

சுகாதாரம் உலகளாவியது. அந்தவகையில் சட்டக் கட்டமைப்புக்களும் சர்வதேச கடப்பாடுகளுக்கு இயைந்த வகையில் நடைமுறையில் உள்ள மற்றும் புதிதாக உருவாகின்ற பொதுச் சுகாதார அபாயங்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில் அமைய வேண்டும். உறுதியான அத்திவாரமுள்ள சுகாதாரத்துக்கான சட்டமொன்றின் தேவை முன்னெப்போதையும் விட இப்போது உணரப்படுகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேஸ் இந்தச் சட்ட ஆய்வுகூட ஆரம்பத்தின் போது தெரிவித்தார்.

தீங்கு விளைவிக்கும் வகையிலான சட்டங்கள் களங்கம் ஏற்படுத்துதலையும் பாகுபாட்டையும் அதிகரிக்கச் செய்யலாம். அது மக்களின் உரிமைகளை மீறுவதாகவும் பொதுச் சுகாதாரத்துக்கான மக்களின் எதிர்வினைகளை குறைத்து மதிப்பிடுவதாகவும் அமையலாம். பன்டமிக்குக்கான எதிர்வினைகள் காத்திரமானதாகவும் மனிதாபிமானதாகவும் நிலையானதுமாக இருப்பதை உறுதி செய்வதற்கு கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட மக்களின் கெளரவத்தையும் மனித உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கான கருவியாக அரசாங்கங்கள் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என யுஎன்எய்ட்ஸின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வின்னி பியானிமா இதன்போது தெரிவித்தார்.

இவர் குறிப்பிடுவது போல பாதிக்கப்பட்ட மக்களின் கௌரவத்தை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கையின் சட்டம் அமையவில்லை என்பதை கொவிட் 19 இனால் இறந்த முஸ்லிம்களின் உடல்கள் இறந்த உடல்களுக்கு அவர்கள் வழங்கும் கௌரவத்தை வழங்கவிடாத வகையில் சட்டமியற்றப்பட்டமை எடுத்துக் காட்டுகிறது. இது தொடர்பில் உயர்நீதமன்றத்தில் பல வழக்குகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

கொவிட் 19 சட்ட ஆய்வு கூடம் என்பது தொற்றுநோய்க்கு எதிர்வினையாற்றும் வகையில் நாடுகள் செயல்படுத்திய சட்டங்களின் தரவுத்தளமாகும். அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துதல், தனிமைப்படுத்தல் செயற்பாடுகள், நோய் கண்காணிப்பு, முகக்கவசம், சமூக இடைவெளி, மருந்து மற்றும் தடுப்பூசிகளை அணுகுவது இதில் அடங்கும். இன்னும் பல நாடுகளும் கருப்பொருள்களும் இதனுடன் இணைக்கப்படும் பொழுது இந்தத் தரவுத்தளம் தொடர்ந்து வளரும்.

கொவிட் 19 க்கான வெவ்வேறு சட்ட கட்டமைப்புக்கள் பற்றிய ஆய்வுகளும் இதில் இடம் பெறும். இந்தப் பகுப்பாய்வுகள் பொதுச் சுகாதாரச் சட்டங்களின் மனித உரிமைப் பாதிப்புகள் குறித்து கவனம் செலுத்துகின்றன. மேலும் கொவிட் 19 தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் சமூக பொருளாதார மீட்பு முயற்சிகளுக்கான அவர்களின் உடனடி எதிர்வினைகளை வழிநடத்துவதற்கான சிறந்த நடைமுறைகளை அடையாளம் காண நாடுகளுக்கு உதவுகிறது. உரிமைகள் அடிப்படையிலான சட்டக் கட்டமைப்பைச் செயல்படுத்துவதன் மூலம் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை அடைவதற்கு நாடுகளுக்கு உதவுவதற்கென நிறுவப்பட்ட உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு சட்டத் தீர்வுகள் வலையமைப்பின் (UHC Legal Solutions Network) பணியை இது கட்டியெழுப்புகிறது. 

எனவே இலங்கையைப் பொறுத்தவரை இந்த சட்ட ஆய்வு கூடம் முக்கியமானதாகும். மக்களின் கௌரவத்தையும் சுகாதாரப் பாதுகாப்புக்களையும் மதித்து சட்டமியற்றுவதற்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல சுகாதாரத் துறையின் வெற்றிகரமான செயல்பாடுகளையும் ஏனைய நாடுகளும் அறிந்து கொள்ளும் வகையில் இலங்கை இந்த ஆய்வு கூடத்தில் பகிர்ந்து உலகளாவிய இந்தத் திட்டம் வெற்றி பெறுவதற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here