சப்ரியின் டை கோட்டுக்குள் மறைந்த ஷாபி விவகாரம்

0
35

டொக்டர் ஷாபி விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்  சமிந்த விஜேசிரி முன்வைத்த வாய்மூல வினாவுக்குப் பதிலளித்த நீதியமைச்சர் அலி சப்ரி இது மற்றுமொரு வழக்கு மாத்திரமே எனப் பதிலளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி வாய்மூல விடைக்காக முன்வைத்த வினாவில் குருநாகலை போதனா வைத்தியசாலையில் டொக்டர் ஷாபி எனப்படுபவர் சிங்களப் பெண்களை கருவளம் இழக்கச் செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அமைச்சர் அறிவாரா ? அந்த வைத்தியருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வழக்கில் அவர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளின் பெயர்களையும், இதுவரை அந்த வைத்தியருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் இந்த விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட தாய்மாருக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அவர் சபைக்கு அறிவிப்பாரா ? இல்லையெனில் ஏன் ? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில் தான் நீதி அமைச்சரே அன்றி நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வழக்குகளினதும் சட்டத்தரணிகளைப் பதிவு செய்து வைப்பவரல்ல எனத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிரி, சபாநாயகர் அவர்களே, உங்களுக்கு அரசாங்கம் அமைப்பதற்கான சிங்கள பௌத்த மக்களிடம் இருந்த பெரிய எதிர்ப்பலையாக ஷாபி சஹாப்தீன் விவகாரம் காணப்பட்டது. முன்னைய அரசாங்கம் செய்த தவறுகளுக்கு தண்டனை வழங்கும்படி நாங்கள் கோரியிருக்கிறோம். அதேபோல டை கோட் அணிந்துள்ள அமைச்சரவர்கள் அந்த அரசாங்கத்தினதும் இந்த அரசாங்கத்தினதும் விடயங்களில் எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்ப்போமே எனத் தெரிவித்தார்.

அப்போது ஆவேஷம் அடைந்த நீதியமைச்சர் அலிசப்ரி தனது ஆடை தொடர்பில் யாரும் தீர்மனமெடுக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்ததோடு இங்கு இனவாதத்தை தூண்ட வேண்டாம் எனவும் இனவாதத்தை தூண்டிவிட்டு இங்கு நல்லிணக்கம் பேச வர வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

தனது நடத்தையினால் யாருக்கும் பாதிப்பேற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்புக் கோருவதாக நீதியமைச்சர் தெரிவித்ததைத் தொடர்ந்து டொக்டர் ஷாபி தொடர்பிலான கேள்விகள் பதிலளிக்கப்படாமல் நகர்ந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here