சமூகத்தை உலுக்கிவிடட்டும் ஆதிலின் ஆன்மா!

0
2

ஒரு ஆன்மீக தலைவரின் மறைவு முழு நாட்டிலும் துயரத்தை மேலெலச் செய்து அதன் வடுக்கள் ஆற முன்னரே சர்வதேசத்தையும் சேர்த்து துயரத்தால் உலுக்கிவிட்டது ஆதில் பாக்கீர் மாக்காரின் மரண சேதி!

பாக்கிர் மாக்கார் பேருவளை மருதானையை பிறப்பிடமாகக்கொண்டவர். பேருவளை சீனங்கோட்டையில் திருமணம் செய்தார். சட்டத்தரணியாக இருந்தவர். இலங்கை அரசியல் வரலாற்றில் இடம்பிடித்தவர். பாராளுமன்றத்தில் சபாநாயகராகவும் வீற்றிருந்தார். பேருவளையிலேயே கடைசிவரை வாழ்ந்து மரணித்தார்.

அவரது மகனார்தான் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார். தந்தையை போன்று அரசியலில் ஈடுபாடு கொண்டவர். ஒரு சட்டத்தரணி.
முக்கிய அமைச்சுப்பதவிகளையும் வகித்தவர். கண்டிப்பகுதியில் திருமணம் முடித்தார். தற்போது குடும்பத்தார் சகிதம் கொழும்பில் வாழ்கின்றார்.

அவரது ஐந்து மகன்மாரில் (அஸாப், அஸாம், பாதில், ஆதில், இன்சாப்) நான்காமவர்தான் ஆதில். இவரும் சட்டத்தரணி மாத்திரமல்லாமல் அரசியல் சார்ந்த கற்கைகளில் ஈடுபாடுடையவர்.

மிகவும் இளம் வயதில் முழு நாட்டு மக்களின் பார்வையையும் தன் பக்கம் ஈர்ந்தெடுத்த ஆதில் கொழும்பு, ரோயல் கல்லூரியில் கல்வி கற்கும் காலத்திலே திறமையுள்ள மாணவராகவும், துடிப்பானவராகவும் இருந்தவர். சிறு வயதிலேயே கல்வியிலே உயர்நிலையை அடைந்து, தலைமைத்துவம் சார்ந்த பல்வேறு அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்தவர்.

இளைஞர் சமூகத்துக்கு அவர் தன்னால் முடிந்தளவில் பணியாற்றி இருக்கின்றார். இளம் சட்டத்தரணியான அவர், ஐக்கிய நாடுகள் அமையத்தின் இளைஞர் அமைப்பின், இலங்கைப் பிரதிநிதியாக இருந்து, இளைஞர்களுக்கு வழிகாட்டியவர். தலைமைத்துவ பண்பிலே சிறந்து விளங்கியதனால் இளைஞர் பாராளுமன்றத்துக்கும் தெரிவானார்.

கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி பொருளாதாரத் துறையில் பட்டப்படிப்புக்காகப் புலமைப்பரிசில் பெற்று லண்டன் சென்றிருந்தார்.

சட்டத்தரணி ஆதிலுக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வழங்கிய ஒரு வருட புலமைப்பரிசிலைப் பெற்றே அவர் லண்டன் சென்றார். ஒரு வருடத்தில் ஒரு மாதம் கூட முடிவதற்குள் ஆதிலுக்கு இறைவனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

கொழும்பு றோயல் கல்லூரி, ஆசியாக்கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற ஆதில் லண்டன் எல்.எல்.பி. பட்டம் பெற்று இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து தனது குடும்பத்தில் மூன்றாம் பரம்பரையின் ஒரே சட்டத்தரணியானார்.

படிக்கும் காலத்திலிருந்து தனது தந்தையின் அரசியல் மற்றும் சமூகப்பணிகளுக்கு உதவி வந்த ஆதில், தந்தை இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நேரடி அரசியலிருந்து ஒதுங்கிய பின் மேற்கொண்ட சமூகப் பணிகளுக்கு உறுதுனையாக செயற்பட்டார்.

பலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கம் தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் பாக்கார் நிலையம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பின்னணியிலிருந்து சிறப்பான பங்களிப்பை செய்தார்.
நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பவதற்காக பாக்கீர் மாக்கார் நிலையம் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக ஆற்றிய வருகின்ற பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு தன் அன்பு தந்தைக்கு ஒரு முக்கிய இணைப்பாளராக இவர் பணிபுரிந்தார்.

நல்லாட்சி அரசு பதவியேற்றபின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழுள்ள தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக அவர் நியமிக்கப்பட்டார். தேசிய இளைஞர் சேவை மன்றம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதற்பணிப்பாளர் சபையின் தனது தந்தை ஒரு அங்கத்தவராக இருந்ததமையால் ஆதில் அதன் வளர்ச்சிக்கு மன்றத் தலைவர் எரங்கவுடன் இணைந்து சிறப்பான பங்களிப்பை செதார்.

தேசிய இளைஞர் சேவை மன்றம் தலைவர் அவரை தொடர்புகொண்டு இந்த அமைப்புக்கு உங்கள் உதவி கண்டிப்பாக தேவை. உங்களுக்கு சர்வதேச தொடர்புகள் அதிகமாக இருப்பதால் உங்கள் உதவி பயனுள்ளதாக அமையும் என்று கூறி சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாக நியமித்தார். தேசிய இளைஞர் சேவை மன்றம் அவருக்கு வழங்கிய பிரியாவிடை உரை இங்கு நினைவுகூறத்தக்கது.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ளும் இரு பிரதிநிதிகளில் ஒருவராக தெரிவு செயப்பட்டார்.

அப்போதைய இளைஞர் விவகார அமைச்சசராக இருந்த டலஸ் அழகப்பெரும இத் தெரிவுபற்றி குறிப்பிட்டபோது, உங்களுடைய குடும்ப அரசியலையும் பார்க்காது உங்களுக்குள்ள திறமையின் காரணமாகவே உங்களை இத்தூதுக்குழுவிற்கு தெரிவுசெய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இனைளஞர்களாகிய எங்களை மெல்ல வழிகாட்டும் ஐ.தே.கவுக்கு அகவை 70 என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை நாட்டில் மும்மொழி பத்திரிகையிலும் கிட்டிய அண்மைக் காலத்தில் வெளியாகியிருந்தது.

தீவிர சமயப்பற்று கொண்ட ஆதில் தனது பெற்றார் திருமணம் பற்றி பேசும் போது ஏழைக்குடும்பமொன்றிலே தான் திருமணம் செய்ய விரும்புவதாகவும், சமயரீதியாக தன்னை வழிகாட்டக்கூடிய ஒருவரே தனது துணைவியாக பெற விரும்புவதாகவும் கூறியதை அறியக்கிடைத்தது.

இறுதியாக, ஒக்டோபர் 12 ஆம் திகதி லண்டன் பல்கலைக்கழகத்தில் தனது அறையில் திடீர் சுகவீனம் காரணமாக மரணமானார் ஆதில். அந்த 26 வயதுடைய ஜனாஸா ஒக்டோபர் 26 அன்று இலங்கை கொண்டுவரப்பட்டு, கொழும்பு ஜாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசியல்வாதி ஒருவரின் பிள்ளை எப்படி வளர வேண்டும் என்பதற்கு ஆதில் ஓர் சிறந்த உதாரணம். அன்னாரை இறைவன் பொருந்திக்கொள்வானாக! இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் குடும்பத்திற்கும் உங்கள் பிரார்த்தனைகளை வேண்டியவனாக.. அல்லாஹும் மஹ்பிர்லஹு வர்ஹம்ஹு!

 – அனஸ் அப்பாஸ் –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here