சவூதியின் முதல் பெண் விமானி அனாதி ஸகரிய்யா அல் ஹிந்தி

0
3

பெண்கள் குறித்து மிக இறுக்கமான போக்கினைக் கடைப்பிடித்து வரும் சவூதி அறேபியாவில் வணிகம் சார் விமானக் கைத்தொழில் துறையில் அந்நாட்டின் முதல் பெண் விமானியாக அனாதி ஸகரிய்யா அங்கீகாரம் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டிலேயே பெண்கள் வரலாற்றில் முதன் முதலாக உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு அரசாங்கம் அனுமதியளித்திருந்தது. மத்திய கிழக்கு அறபு நாடுகளில் இதுவரை பெண்களுக்கு வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் தர மறுக்கும் ஒரேயொரு நாடு எனக் கருதப்படும் சவூதி அறேபியாவில் பெண்கள் விமானம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை ஒரு வகையில் மிக முன்னேற்றகரமானது. இன்னொரு வகையில் மிகவும் முரண்பாடானது.

அனாதி 1978 செப்டம்பரில் புனித மக்கா நகரில் பிறந்தார். 38 வயதான இவர், 2005 ஜூன் 15 இல் ஜோர்தான் தலைநகர் அம்மானிலுள்ள வணிகம் சார் விமான கைத்தொழிலுக்கான மத்திய கிழக்கு எகடமியின் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்தார். இளவரசர் வலீத் பின் தலாலின் வணிகக் கம்பனிகளோடு 10 வருட ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ள இவர், அவரது தனிப்பட்ட விமானத்தில் விமானியாகப் பணியாற்றுவதற்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளார்.

ஒப்பீட்டு ரீதியில் இளவரசர் வலீத் பின் தலால் சவூதி அறேபியாவில் பெண்களுக்கு அதிக உரிமை வழங்கப்பட வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றார். அந்த வகையில் அனாதியின் விமானத் துறை பயிற்சிக்கு வலீதே நிதி ஆதரவு வழங்கினார். அவர் பட்டம் பெற்று வெளியேறியபோது உரையாற்றிய வலீத், அனைத்துத் துறைகளிலும் சவூதி பெண்கள் பணியாற்றுவதற்கு தான் முழு ஆதரவு அளிக்கப் போவதாக கருத்து வெளியிட்டிருந்தார்.

ஆனால், தலாலின் இந்நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஊடகங்கள், பூமியில் கார் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படாத பெண்கள், இந்நாட்டில் வானத்தில் விமானம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பது மிகப் பெரும் முரண் நகை எனச் சுட்டிக்காட்டியுள்ளன.

2014 இல் அனாதி விமானிக்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றார். ஆண்கள் போன்று பெண்களும் இதுபோன்ற துறைகளில் பணியாற்றலாம் என்கின்றார் அவர். ஆரம்பக் கல்வியை உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் கலைத் துறையிலேயே பூரணப்படுத்திய இவர், பின்னர் விமானத் தொழில் துறைக்கு மாறினார்.

இதேவேளை, இவரைத் தொடர்ந்து யாஸ்மின் முஹம்மத் அல் மைமானி எனப்படும் சவூதி அறேபியப் பெண் ஜோர்தான் விமானக் கல்லூரியில் பயின்று நாடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here