சிறுபான்மை பிரதி நிதித்துவங்களை குறிவைக்கும் புதிய உள்ளூராட்சி தேர்தல் முறை

0
0

– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் –
விகிதாசார மற்றும் வட்டார தேர்தல் முறையின் கீழ் 2016 மார்ச் மாதம் இடம் பெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தகள் சிறுபான்மை சமூக பிரதிநிதித்துவங்களில் எதிர்மறையான தாக்கத்தைக் கொண்டிருக்கும்.
அரசியலமைப்பின் மீதான 13 சீர்திருத்தச் சட்டத்திற்கு அமைய மாகாண சபைகளின் காட்டுப்பட்டிற்குள் வரும் உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் முறையில் மாத்திரமன்றி அவற்றின் எல்லைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற சட்டமூலம் சகல மாகாண சபைகளினதும் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் 2011 ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இது குறித்து ஆராய எதிர்க்கட்சிகள் கால அவகாசம் கோரியதையடுத்து சட்டமூலங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.
வடமாகாண சபை ஆளுனரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் ஆளுனரின் அனுமதி பெறப்பட்டமை இன்றும் சட்ட ரீதியிலான சர்ச்சைகளை கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
உத்தேச உள்ளுராட்சி திருத்தச் சட்டத்திற்கான அங்கீகாரம் 19/10/2010 செவ்வாய் கிழமை கிழக்குமாகாண சபையில் நிறைவேற்றப் பட்டது. மாகாணசபையில் உள்ள 37 உறுப்பினர்களில் ஆளும் தரப்பில் உள்ள 20 பேரில் 18 பேர் ஆதரவாக வாக்களித்ததுடன் (2 பேர் சமூகமளிக்வில்லை) எதிர் தரப்பில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் நடுநிலை வகித்ததுடன் 6 பேரில் 5 தமிழ் உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிக்க எதிர்கட்சித் தலைவர் தயாகமகே சபையில் இருந்த போதும் வாக்களிக்கவில்லை.
சட்டத் திருத்தத்தை சபாநாயகர் சபையில் வைக்கையில் ஜனாதிபதி 10 தினங்களுக்குள் பரிசீலித்து நிறைவேற்றி அனுப்பிவைக்குமாறு கோரியுள்ளதாகதெரிவித்து சமர்ப்பித்தார். இது தொடர்பாக 14 நாள் அறிவித்தலோ, 7 நாள் அறிவித்தலோ வழங்கப்படவில்லை.
முஸ்லிம் தலைமைகளின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேறிய சட்டமூலம்:
தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைகளை இணைத்து தயாரிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் ஆளும் தரப்பு,எதிர்த்தரப்பு கட்சிகளின் ஆதரவுடன் 10/10/2012 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்ட மூலத்திற்கான திருத்தங்களை -தேசிய காங்கிரஸின் தலைவர்- மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா முன்வைத்தார். வாக்கெடுப்பு எதுவும் இன்றி திருத்தங்களுடன் தேர்தல் சட்டம் நிறைவேற்றப் -பட்டதோடு, இதனூடாக உள்ளூராட்சி தேர்தல்களில் விருப்பு வாக்கு முறை முற்றாக ரத்துச் செய்யப்படுகிறது.
அமைச்சர் ஹகீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாது தலைமையிலான மக்கள் காங்கிரஸ் என சகலரும் மேற்படி சட்டமூலத்தை ஆதரித்துவாக்களித்தனர்.
அமுலுக்கு வரும் புதிய முறை
புதிய தேர்தல் திருத்தத்தின் பிரகாரம் உள்ளூராட்சி சபைகளுக்கு தொகுதிவாரி முறை மூலம் 70 வீதமானவர்களும் விகிதாசார முறை மூலம்30 வீதமானவர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். தேர்தல் தொகுதி எல்லையை நிர்ணயிப்பதற்காக எல்லை நிர்ணயம் செய்ய தேசிய குழு வொன்றும் பிரதான குழுவுக்கு உதவியாக மாவட்ட நிர்ணய குழுக்களும் அமைக்கப்படும். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக 25 வீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளதோடு கட்சி வேட்பாளர் 5 ஆயிரம் ரூபாவும் சுயேச்சைக்குழு வேட்பாளர் 20 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.
வேட்பு மனுதாக்கல் செய்யும் காலம் 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதோடு வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்குகள் எண்ணப்படும். குறித்த தேர்தல் தொகுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகளில் 20 இல் ஒரு பங்கிற்கு குறைவான வாக்குகள் பெறும் வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடைமையாக்கப்படும்.
50 வீதம் வாக்குகள் பெறும் கட்சியின் செயலாளர் அல்லது தலைவர், உள்ளூராட்சி சபை தலைவர், உப தலைவரை தெரிவு செய்வார். இரு தடவைகள் வரவு செலவுத் திட்டம் தோல்வி அடைந்தால் தலைவர் பதவி விலக வேண்டும் உட்பட பல விடயங்கள் இந்த தேர்தல் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறுபான்மைக் கட்சிகள் அல்லது சிறிய கட்சிகளுக்கு ஏற்படும் இழப்புக்கள்
சட்ட மூலத்தில் 5% வெட்டுப்புள்ளி அறிமுகமாகின்றது. அதாவது, போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் குறைந்தப்பட்சமாக 5% வாக்குகளை பெற்றிருந்தாலேயே கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளப்படும்.
இதில் வட்டாரங்கள் மூலமாக 70 விகித பிரதிநிதிகளும், விகிதாசாரம் மூலமாக 30 விகித பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுவார்கள்.
தேர்தலின் போது வட்டாரங்களின் மூலமாக வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்குத் தொகைகைளை கழித்துவிட்டு, தெரிவு செய்யப்படாத வேட்பாளர்களின் வாக்குத் தொகைகள் சேகரிக்கப்படும்.
அந்த தொகைகள் வேட்பாளர்களின் கட்சிகளுக்கு வழங்கப்படும். இதன் மூலமே இந்த 30 விகித விகிதாசார தெரிவு நடைமுறையாகின்றது. இச்சந்தர்ப்பதில்தான் 5 விகித வெட்டுப்புள்ளி சிறுபான்மை கட்சிகளை பாதிக்கின்றது. ஏனெனில் ஒவ்வொரு வட்டாரத்திலும் 5 விகித வாக்குகளை பெறாத வேட்பாளர்களின் வாக்குகள் இந்த கணக்கெடுப்பில் சேர்த்துகொள்ளப்படாது.
இதனால் சிறுபான்மை கட்சிகளின் வாக்குத் தொகை கணிசமாக குறையும். ஆகவே நேரடியாக வட்டாரங்களின் மூலமாக வெற்றிப்பெற முடியாத சிறுபான்மை வேட்பாளர்கள் விகிதாசார முறையின் கீழும் தெரிவு செய்யப்பட முடியாத நிலைமை ஏற்படும். இது சிறுபான்மை கட்சிகளையும், சிறிய கட்சிகளையும், சுயேட்சைக் குழுக்களையும் வெகுவாக பாதிக்கும்.
அதேவேளையில் அரசியற் கட்சி வேட்பாளர்கள் ரூபா 5,000, சுயேட்சைக் குழு வேட்பாளர்கள் ரூபா 20,000 முற்பணமாக ஒவ்வொரு வட்டாரத்திற்கும் செலுத்த வேண்டும்.
இச்சட்ட மூலம் பெரும்பான்மை கட்சிகளுடன் கட்டாயமாக கூட்டு சேர வேண்டிய ஒரு நிர்பந்தத்தை சிறிய கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றது.சிறுபான்மை கட்சிகள், பெரும்பான்மை கட்சிகளுடன் விரும்பி கூட்டு சேர்வது என்பது வேறு, பலவந்தமாக கூட்டு சேர்க்கப்படுவது என்பது வேறு.
ள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கான புதிய எல்லை நிர்ணயம்
அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் புதிய எல்லை நிர்ணயங்களுக்கு அமைவாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கான புதிய எல்லை நிர்ணயங்களை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வர்த்தமானியில் அறிவிக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயப் பணிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே கூறியுள்ளார் இன்னும் ஓரிரு தினங்களில் அது தொடர்பிலான அறிக்கையை அமைச்சரிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் புதிய எல்லை நிர்ணயங்களுக்கு அமைய உள்ளுராட்சி மன்ற பிரிவுகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
எல்லை நிர்ணய சபைகள் அமைக்கப்பட்டு நாடாளாவிய ரீதியில் ஆலோசனைகள் பெறப்பட்ட வேளையில் எந்தவொரு முஸ்லிம் அரசியல் கட்சியும் முஸ்லிம்களது பிரதிநிதித்துவங்களை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான எந்தவொரு ஆலோசனையையும் முன்வைக்காததலும், பாதகமான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தாததாலும் அதிகப்படியான சபைகளில் இம்முறை முஸ்லிம்களது பிரதிநிதித்துவம் கணிசமான அளவு பாதிக்கபப்டுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here