சிலாபத்துறை முச்சக்கர சாரதிகளுக்கு நீதி கிடைக்குமா?

0
1

  – முஜீபுர் ரஹ்மான் –

வடக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முசலிப் பிரதேச மக்கள், 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த உடன் படிக்கையின் பின்னர் மீளக்குடியேறினார்கள். பின்னர் 2006 ஆம் ஆண்டு மீள்குடியேறிய மக்களை விடுதலைப் புலிகள் மீண்டும் பலவந்தமாக வெளியேற்றினார்கள். அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு, விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னரே இப்பிரதேச முஸ்லிம்கள் மீண்டும் மீள்குடியேறினார்கள். அவ்வாறு மீள்குடியேறியவர்களில் இப்பிரதேச மக்களும் உள்ளடங்குவர்.

இவ்வாறு மீள்குடியேறியவர்கள் பல்வேறு தொழில் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். எனவே, நாளாந்த வாழ்வாதாரப் பிரச்சினை களைத் தீர்ப்பதற்காகவே பெரும்பாலான இளைஞர்கள், குடும்பத் தலைவர்கள் தங்களிடமிருந்த சொற்ப பணத்தை முதலிட்டு ஒரு முச்சக்கர வண்டியைக் குத்தகை அடிப் படையில் பெற்று நாளாந்தம் கிடைக்கும் பணத்தின் மூலமே வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

சிலாபத்துறை முச்சக்கர வண்டிப்   பிரச்சினை

2009 ஆம் ஆண்டு மீள்குடியேறியதன் பின்னர் இப்பிரதேசத்திலுள்ள பிரதான தொழில்களான மீன்பிடி, விவசாயம் ஆகியற்றுடன் முச்சக்கர வண்டி ஓட்டுவதும் முக்கிய தொழிலாக மாறுகிறது. பின்தங்கிய இப்பிரதேசத்திற்கான போக்குவரத்து இன்னும் சீராக்கப்படவில்லை. எனவே, முச்சக்கர வண்டியின் பயன்பாடு முக்கியத்துவம் பெறுகின்றது. அதன் மூலமே இரவுகளிலும், ஏனைய நேரங்களிலும் நோயாளிகள், பாடசாலை மாணவ-மாணவிகள் முதல் அவசரத் தேவையுடையவர்கள் தங்கள் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

இதனடிப்படையில், சிலாபத்துறையிலுள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சிலாபத்துறையிலிருந்து முருங்கனுக்கு அவசரத் தேவையுடைய ஆட்களை ஏற்றி இறக்குவது வழக்கம். அவ்வாறு ஏற்றி இறக்கியதன் பின்னர் முருங்கனிலிருந்து சிலாபத்துறை நோக்கிச்  செல்லும்போது முருங்கன் சந்தியில் சிலாபத்துறை செல்வதற்கு யாராவது இருந்தால் அவர்களை ஏற்றிச் செல்வதும் வழக்கம்.

இவ்வாறு செயற்படுவதற்கு முருங்கன்   முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தொடர்ந்தும் எதிர்த்து வந்துள்ளார்கள். அதனடிப்படையில் சில சிலாபத்துறை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.

இதன் தொடர்ச்சியாகவே, அன்று வியாழக்கிழமை (11.02.2016) மாலை 2.00 மணியளவில் சிலாபத்துறையிலிருந்து ஒருவர்  முச்சக்கர வண்டியில் முருங்கனுக்குச் சென்று திரும்பும்போது முருங்கனில் உள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஒருவாறு அவர்களிடம் இருந்து தப்பிச் சென்ற சிலாபத்துறை முச்சக்கர வண்டிச் சங்க உறுப்பினர், அவரின் சங்க உறுப்பினர்களிடம் தனக்கு நடந்தவற்றைக் கூறிக் கொண்டிருந்தபோது, முருங்கன் முச்சக்கர வண்டிச் சங்க உறுப்பினர் ஒருவர் சிலாபத்துறைக்கு வந்துள்ளார். அவரை சிலாபத்துறை முச்சக்கர வண்டி உறுப்பினர்கள் மறித்துப் பிடித்து, முருங்கனில் நடந்தவற்றை விசாரித்துள்ளனர். அதன்போது ஏற்கனவே முருங்கன் முச்சக்கர வண்டி உறுப்பினர்களால் தூற்றப்பட்ட சிலாபத்துறை முச்சக்கர வண்டி சாரதி உட்பட அவரின் சகாக்கள் அவரைத் தூற்றியுள்ளனர்.

இந்நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே முருங்கன் முச்சக்கர வண்டி உறுப்பினர்கள் மற்றும் அங்குள்ளவர்கள் முருங்கன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். மாலை 5.30 மணியளவில் சிலாபத்துறைக்கு விரைந்த முருங்கன் பொலிஸார், சிலாபத்துறை முச்சக்கர வண்டி உறுப்பினர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த முருங்கன் முச்சக்கர வண்டி உறுப்பினரை விடுவித்து, இருவருக்குமிடையில் இணக்கத்தை ஏற்படுத்தி, சுமுகமான முறையில் தீர்த்து விட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் மாலை 6.40 மணியளவில் சிலாபத்துறையைச் சேர்ந்த பரீது முஹம்மது ஸாஜிர் (34 வயது) 6 பிள்ளைகளின் தகப்பனார். சிலாபத்துறையிலிருந்து தனது முச்சக்கர வண்டியில் (Nஙி ஙுகீ 2621) முருங்கனுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்று தனது கடமையை முடித்துவிட்டு திரும்பும் போது, முருங்கனில் உள்ள முச்சக்கர வண்டி உறுப்பினர்கள் அவரைத் தாறு மாறாகத் தாக்கியுள்ளனர். இறுதியில் அங்கிருந்த ஒரு தமிழ் சகோதரரால் பாதுகாத்து அனுப்பப்பட்டுள்ளார்.

பின்னர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காக சென்றபோது முதலில், பொலிஸார் முறைப்பாட்டைப் பெறுவதற்கு மறுத்துள்ளனர். பின்னர் முருங்கன் ஆஸ்பத்திரிக்குச் சென்று, தான் சிலரினால் தாக்கப்பட்டுள்ளதைக் கூறி தனக்கு மருந்து வழங்குமாறு கேட்டபோது, பொலிஸாரிடம் சென்று முறைப்பாட்டு அறிக்கை யுடன் வருமாறு முருங்கன் ஆஸ்பத்திரியில் கோரியுள்ளார்கள்.

பின்னர் முருங்கன் பொலிஸாரிடம் சென்று ஆஸ்பத்திரியில் இவ்வாறு கூறுகிறார்கள் என்று கூறியதன் பின்னரே பொலிஸார் அவர்களின் வாகனத்தில் கொண்டு சென்று முருங்கன் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளார்கள். பின்னர் காயத்திற்கு மருந்திடப்பட்டு, முருங்கனிலிருந்து மன்னார் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இன்றுவரை (அச்சுக்கு செல்லும் வரை) மன்னார் தள வைத்தியசாலையில் வைத்து வைத்தியம் நடைபெறுகிறது. ஆனால், இவரைத் தாக்கியவர்களை இன்னும் கைது செய்யவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரச்சினைக்கான தீர்வு

மறுநாள் (வெள்ளிக்கிழமை 12.02.2016) காலை முதல் பகல் 12 மணி வரை முருங்கன் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் சிலாபத்துறை முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் இடையில் சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில், மன்னார் மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கான பொறுப்பாளர், முருங்கன் பொலிஸ் நிலையப் பொறுப்பாளர், சிலாபத்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் ஆகியோரின் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நீண்ட வாக்குவாதங்களின் அடிப்படையில் இரு தரப்பினரும் சில முடிவுகளை எட்டினர். ஆனால், அம்முடிவுகளை சிலாபத்துறை முச்சக் கர வண்டி உரிமையாளர்கள் மனதார ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சமூக நல்லிணக்கத்திற்காக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதாவது, சிலாபத்துறையை நோக்கிச் செல்பவர்கள் மன்னார் – வவுனியா வீதியில் உள்ள முருங்கன் பள்ளிவாசலுக்கு முன்னால் நிற்க வேண்டும். அவர்களை சிலாபத்துறையில் இருந்து செல்லும் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் செல்லலாம். மாறாக சிலாபத்துறை வீதியில் நிற்பவர்களை சிலாபத்துறை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் செல்ல முடியாது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், சிலாபத்துறை வீதியில் ஒரு பஸ் தரிப்பிடம் கட்டுவதாகவும், அதன் பின்னர் சிலாபத்துறை வீதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் உள்ளவர்களை ஏற்றிச் செல்லலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here