சிலாவத்துறை முச்சந்தியில் ஏன் பாதுகாப்புக் கடவை ? காதர் மஸ்தான் கேள்வி

0
1

(முஜிபுர் ரஹ்மான்)

மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் இராணுவம் மர நடுகைகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தர்.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. முசலிப் பிரதேச செயலகக் கட்டிடத்தில் (17.09.2020) வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முசலிப் பிரதேச செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், திலீபன் உட்பட முசலிப் பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள், திணைக்கள அதிகாரிகள் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இராணுவம் பொது மக்களின் விளையாட்டு மைதானம், குடியிருப்புப் பகுதியை அண்டிய பிரதேசங்கள் மற்றும் வீதி ஓரங்களில் மக்கள் பாவனைக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மர நடுகைகளில் ஈடுபடுவதால் தமக்கு பல பாதிப்புக்கள் ஏற்படுவதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

பொது மக்களின் கருத்துக்கு பதிலளிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், இராணுவம் பொது மக்களின் இடங்களை ஆக்கிரமிப்பதற்காக வேண்டி இவ்வாறு மர நடுகையில் ஈடுபடுபவதை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கருத்துத் தெரிவிக்கையில், அவ்வாறே சிலாபத்துறை பிரதான சந்தியிலுள்ள முச்சந்தியிலும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடவைகளை நியமித்துள்ளனர். இது பொது மக்களுக்கு பல அசௌகரிகங்களை ஏற்படுத்துகின்றன. அதேபோல் நான் வரும்போதும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தியதால் குறித்த சந்தி நெரிசலுக்கு உட்பட்டது. இவ்வாறான முச்சந்தியில் ஏன் சோதனைச் சாவடிகளை இராணுவத்தினர் ஏற்பாடு செய்துள்ளார்கள் என பொலிசாரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு பொலிசார் தங்களுக்குத் தெரியாது என பதிலளித்தமையைக் கூறி பாராளுமன்ற உறுப்பினர் ஆதங்கப்பட்டார். 

மேலும், கடற்படையினர் முக்கிய கிராமங்களை ஆக்கிரமித்துள்ளனர். அத்தோடு, மக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் மக்களின் விவசாய நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாது என மக்கள் ஆதங்கப்பட்டு தெரிவித்தனர்.

அத்தோடு, கடற்படையினர் மணல் அகழ்வுகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், பிரதேச மக்களின் அத்தியாவசியத் தேவைகளான வீடு கட்டுதல் மற்றும் ஏனைய கட்டிட தேவைகளை நிறைவேற்றுவதற்காக மணலைப் பெற்றுக் கொள்ள முடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here