சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதா?

0
1

 – றவூப் ஸெய்ன் –

ஜனாதிபதி கூற வருவது என்ன?

கடந்த வார அரசியலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பகிரங்க உரையொன்றின்போது தெரிவித்திருந்த கருத்துக்கள் பாரிய அதிர்வலைகளை உருவாக்கியது. இலங்கை மன்றக் கல்லூரியில் ஒக்டோபர் 12 ஆம் திகதி ஜனாதிபதி ஆற்றிய உரையொன்றில், குற்றவியல் விசாரணைத் திணைக்களம் (CID), நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இது சீரியஸான சில கேள்விகளை எழுப்பியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது மைத்ரி மக்களுக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து அவர் தெளிவாக விலகிச் செல்கிறார் என்பதும், ஐ.தே.க.வுக்கும் மைத்ரிக்கும் இடையில் ஓர் அரசியல் உராய்வு ஆரம்பித்துள்ளது என்பதும் ஜனாதிபதியின் உரையிலிருந்து தெளிவாகின்றது.

மக்களுக்கிடையில் ஜனாதிபதியின் கருத்து பெரும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. குற்றவியல் விசாரணைத் திணைக்களமோ நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவோ அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இயங்க முடியாது. சட்டம் எல்லோருக்கும் சமமானது.

இந்நிறுவனங்கள் ஜனாதிபதி குறிப்பிடுவது போன்று அரசியல் மயமாக்கப்பட்டிருந்தால் அதற்கெதிரான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும். இவற்றில் பணியாற்றுகின்றவர்களில் பொறுப்புக்களும் கடமைகளும் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.

தேசிய பாதுகாப்பு, இராணுவ நிருவாகம், மற்றும் முகாமை குறித்து அறியாதவர்கள் சிந்திக்காமல் பாரிய தவறுகளை இழைக்கக் கூடும். இது குறித்து அரசாங்கம் உடனடியாகச் செயற்பட வேண்டும்.

ஜனாதிபதி தனது உரையில், “மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் உயரதிகாரிகள் எனக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் தமது பணிகளின் முன்னேற்றம் குறித்து அறிவிப்பது அவர்களின் பொறுப்பாகும். சிலர், இவை அனைத்தும் சுயாதீன ஆணைக்குழுக்கள் என்ற வகையில் அவ்வாறு அறிவிக்க வேண்டியதில்லை என நினைக்கலாம். ஆணையாளர்கள் கூட அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கப்படுகின்றனர். ஜனாதிபதி என்ற வகையில் நானே இவற்றின் தலைவர்களை நியமிக்கின்றேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி முன்வைக்கும் இக்கருத்து மிகவும் சீரியஸானது. சுயாதீன ஆணைக்குழுக்களே சுயாதீனமாக செயற்படவில்லை எனவும், அரசியல்மயப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதியே கூறுவதாயின், நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழலுக்கு எதிரான பொறிமுறை எந்தளவு அரசியல்மயப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஊழல் மோசடிக்கு எதிரான மைத்ரியின் அரசாங்கமே ஊழல்மிக்கது என்பதை அவரது சொற்கள் ஏற்றுக்கொள்கின்றன. ஜனாதிபதி இதன் மூலம் எதைச் சொல்ல வருகின்றார் என்பது தெளிவு படுத்தப்பட வேண்டும். சுயாதீன ஆணைக்குழுக் கள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன என்பதன் அர்த்தம் என்ன?

அவர் தனது உரையில், லஞ்ச ஊழல் ஆணைக் குழுவை -குறிப்பாகச் சுட்டிக்காட்டினார். அதில் இடம்பெறும் இரண்டு வழக்குகளையும் கோடிட்டுக் காட்டினார். அதில் ஒன்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷவோடு தொடர்பானது. மேலும் 3 கடற்படை கொமாண்டர்களோடு சம்பந்தப்பட்டவை. இரண்டாவது வழக்கு, ஊட கவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தி கொன்றமை தொடர்பானது.

இச்சம்பவங்களைக் குறிப்பிட்ட அவர், அதிகாரி கள் எந்த இடத்தில் தவறுவிட்டுள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. இவ்வழக்குகளின் விபரங் களை தனக்கு அறிவிக்கவில்லை என்பதை அவர் குறிப்பிட்டார். அது எவ்வாறு அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கவில்லை.

ஊழல் மோசடிக்கு எதிரான பொறிமுறையை அவர் குறைத்து மதிப்பிடவில்லை என்பது தெளிவானது. ஏனெனில், அவரது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் அதுவும் ஒன்று. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீள அறிமுகப் படுத்தியவரும் அவரே. அதன்படி நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழித்து, சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவதாக மக்களுக்கு அவர் வாக்குறுதியளித்தார்.

100 நாள் வேலைத் திட்டத்தில் கடைசி இலக்காக இருந்தது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது. ஆயினும், நல்லாட்சி எனப்படும் புதிய அரசாங்கம் தோன்றி, 500 நாட்கள் கடந்த நிலையிலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவில்லை. அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் முக்கியமானவை நிறைவேற்றப்பட வில்லை. இந்நிலையில், சுயாதீன ஆணைக் குழுக்கள் சுயாதீனமானச் செயற்படவில்லை என்று அவர் அங்கலாய்ப்பது நல்லாட்சி அரசாங் கம் பற்றிய மக்கள் நம்பிக்கையை உடைத் தெறிவதாக உள்ளது. ஏற்கனவே, குறிப்பிடப் பட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை என்பது தொடர்பாக முன்வைத்த அறிக்கைகள் ஊழல் மோசடி ஒழிப்பு குறித்த மக்கள் நம்பிக்கையின் மீது மண்ணை வாரியுள்ளது.

அதன் பின்னணியிலேயே லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது ராஜினாமா கடிதத்தை (17 ம் திகதி) ஜனாதிபதி மைத்ரிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதியின் உரையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு குறித்த அதிருப்தி தெளிவாக முன்வைக்கப்பட்டு ஐந்து நாட்களின் பின்னர் தில்ருக்ஷியின் இராஜினா கடிதம் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று ஆணையாளர்கள் இவ்வாறு ராஜினா கடிதங்களை கையளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லஞ்ச ஊழல் ஆணையாளரின் ராஜினாமா குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் பல்வேறு வகையான புரளிகளை எழுப்புகின்றபோதும், ஜனாதிபதியின் கூற்றே இதற்குரிய உடனடிக் காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

தில்ருக்ஷியை நியமித்தது பிரதமர் ரணில் என்பது குறிப்பிடத்தக்கது. தில்ருக்ஷி ராஜினாமாவுக்கான காரணத்தை ஊடகங்களிடம் தெரிவிப்பதற்கு மறுத்து விட்டார். எவ்வாறாயினும், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஆணைக்குழு உட்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களே ராஜினாமாவுக்கான உடனடிக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மொத்தத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தகர்த்தெறிவதான ஜனாதிபதியின் கூற்று அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ரணில்-மைத்ரிக்கு இடையிலான முரண்பாட்டின் ஆரம்பமே இது எனவும், இதன் இறுதி விளைவு நல்லாட்சி அரசாங்கத்திற்குள் பாரிய சிக்கலை உருவாக்கும் எனவும் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஊடகங்களால் தான் பிழையாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாக ஜனாதி பதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் ஐ.தே.க.வுக்கிடையிலான உள்ளார்ந்த அரசியல் உராய்வுகளின் பிரதிபலிப்பே ஜனாதியின் இக்கூற்று என்பது மிகவும் தெளிவானது. இதன் அரசியல் விளைவுகள் என்னவாக இருக்கப் போகின்றது என்பது இன்னும் மங்கலாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here