ஜம்இய்யதுல் உலமாவுக்கு ஒரு மடல்!

1
2

 – எம்.ஏ. இனாயத்துல்லாஹ் –

இஸ்லாத்தின் அடிப்படையான எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவதையும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதித்தூதர் மற்றும் அல்லாஹ்வின் உண்மை அடியான் என முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு, நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதே இஸ்லாம் ஆகும். இவ்விடயத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இதனையே எம் பெருமானார் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையிலும் குறிப்பிட்டார்கள்.

“மக்களே! உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதரின் வழிமுறையையும் விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால் ஒருபோதும் வழி கெட மாட்டீர் கள்! (முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மார்க்கம் என்ற அடிப்படையில் சொன்னவை, செய்தவை அனைத்தும் அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்ட வைதான். அல்லாஹ் அறிவித்துக் கொடுக்காத எந்த ஒன்றையும் மார்க்கத்தின் பெயரால் அவர்கள் வழிகாட்ட மாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தன் மனோஇச்சைப்படி பேசமாட்டார். அவர் பேசுபவை அல்லாஹ்வால் அறிவிக்கப் பட்டவைதான் என்று திருக்குர்ஆனின் 53: 2,3,4 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

நபி(ஸல்) அவர்கள் மார்க்கம் என்ற பெயரில் சுயமாக எதையாவது சொல்லி இருந்தால் அவரை வலக்கரத்தால் பிடித்து, அவரது நாடி நரம்பைத் துண்டித்து விடுவேன் என 69:44,45,47 வசனங்களில் அல்லாஹ் எச்சரிக்கிறான். நபி (ஸல்) அவர்களின் பணி அல்லாஹ் சொல்வதை எடுத்துச் சொல்வதே தவிர சொந்தக் கருத்தைச் சொல்வதல்ல என்று 5:92, 13:40, 64:12, 24:54 முதலிய வசனங்கள் கூறுகின்றன.

எனவே, நபியின் சொல்லைவிட மேலான சொல் எதுவும் இருக்க முடியாது.

முஹம்மது நபி (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்பதால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது போல் அவர்களுக்கும் (தூதருக்கும்) கட்டுப்பட வேண்டும் என்றே அல்குர்ஆன் கூறுகின்றது. (3:32) நபிக்குக் கட்டுப் படாதவர்கள் முஸ்லிம்கள் அல்லர் என்ற அளவுக்கு கடுமையாக மேற்படி குர்ஆன் வசனங்கள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் வார்த்தையான குர்ஆனும் நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரமான ஆதார பூர்வமான ஹதீஸ்களும் எதனைக் கூறுகின்றனவோ அதற்கே இஸ்லாமிய சமுதாயம் கட்டுப்பட வேண்டும். யாருக்கும் வக்காலத்து வாங்கக்கூடாது. திருமறை குர்ஆனின் பல இடங்களிலும் அல்லாஹ் தனக்கும் தன் தூதரான முஹம்மத் (ஸல்) அவர் களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்களை பின்பற்றுமாறும் சிறப்பித்துக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள் ‘அல்லாஹ்’ உங்களை விரும்பு வான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!. அல்லாஹ்வுக்கும் இத்தூதருக் கும் கட்டுப்படுங்கள். நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்பமாட் டான்” எனக் கூறுவீராக! “அல் குர்ஆன் 3:31:32.

அப்தல்லா பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள், “உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தைகளில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நடத்தையாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள (மறுமை நாளானது) வந்தே தீரும். உங்களால் (இறைவனைத்) தோற்கடிக்க முடியாது.” (புகாரி : 7277)

எவரைப் பார்த்து நாம் படிப்பினை பெற வேண்டும், நம்மைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இறைவன் குறிப்பிட்டானோ அப்படிப்பட்ட அல்லாஹ்வின் தூதரும் நமக்கு இது குறித்து உபதேசிக்காமல் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “என் சமுதாயத்தார் அனைவரும் சுவர்க்கம் செல்வார்கள், ஏற்க மறுத்தவரைத் தவிர” என்று கூறினார்கள். மக் கள் அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கீழ்படிந்தவர் சொர்க்கம் புகுவார். எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், நூல் : புகாரி 7280

எனவே, அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் தமது அக்காரி யத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல் லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டுவிட்டார். (அல்குர்ஆன் 33:36) என்ற குர்ஆனின் கட்டளைப் பிரகாரம் நாம் செயற்பட்டால் இரண்டாம் கருத்திற்கு இடமே இருக்காது. பிரச்சினைகளும் தோன்றாது.

தவறு என்று தெரிந்த பின்னும் என் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினால் நமக்கும் யூதர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். தெளிவான நயவஞ்சகத்தனமாகி விடும். ஒரு கருத்தை மக்கள் முன் வைக்கும்போது அது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கருத்தைப் பிரதிபலிக்கிறதா? குர்ஆன் ஹதீஸுக்கு உட்பட்டுள்ளதா? அல்லது மாறுபட்டுள்ளதா என்பதை சிந்தித்துப் பார்ப்பதே இஸ்லாமிய பண்பாகும்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சில நடவடிக்கைகள் தீர்மானங்கள் கருத்து வேறுபாடுகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கி உள்ளன என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. இந்நிலை நீடிப்பது சௌகரியமானதல்ல. எதிர்காலத்தில் பல தீய விளைவுகளை எங்கள் நாட்டில் முஸ்லிம்கள் மத்தியில் தோற்றுவிக்கலாம். குறிப்பாக ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் குலைத்து பிரிவினைகளைத் தோற்றுவிக்கலாம். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். கொள்கைள் வேறுபடலாம் உள்ளங்கள் வேறுபடக்கூடாது என்பதெல்லாம் பயான்களுக்கு மாத்திரமா என மக்கள் கேட்கின்றனர். இவை செயலில் காட்டப்பட வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர்.

தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளை நபிகளாரின் வாழ்க்கை முறை என்கிறோம். அப்படியாயின் தீர்மானங்களின்போது குர்ஆன் சுன்னாவுக்கல்லவா முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனக் கூறுபவர்கள் எங்கள் மத்தியில் உள்ளனர். ஜம்இய்யதுல் உலமா வழிதவறிச் செல்கின்றதா என இவர்கள் கேட்கின்றனர். இது சமூகம் தழுவிய அமைப்பாக இருக்க வேண்டும் என்பதையே அதிகம் பேர் விரும்புகின்றனர். அண்மையில் உருவாக்கப்பட்ட இத்திஹாதுல் உலமா உஸ்ஸலபிய்யீன் தனது கருத்துக்களுடன் முரண்படாத உலமாக்களை மாத்திரம் இணைத்துக் கொண்டு தனியாகப் பயணிக்கின்றது என மக்கள் சுட்டிக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மார்க்கம் சொல்வது ஒன்று மௌலவிகள் சொல்வதும் செய்வதும் வேறொன்று; அவர்கள் முன்வைப்பது உலமாக்களின் மனோ இச்சைதான். மௌலவிகளின் முழு நேரத் தொழில் மார்க்கத்தை மறைப்பதுதான் போன்ற குற்றச்சாட்டுகள் இன்று உலமாக்கள் மத்தியிலேயே முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான உலமாக் களை நோக்கி அல்குர்ஆன் இவ்வாறு கேட்கின்றது.

“அல்லாஹ்விடமிருந்து தனக்குக் கிடைத்த   சான்றை மறைப்பவனை விட அநீதி இழைத்த வன் யார்? நீங்கள் செய்வதை அல்லாஹ் கவ னிக்காதவனாக இல்லை” (அல்குர்ஆன் 2:140)

நம்மிடம் பல்லாண்டுகளாக ஊறிப்போன கொள்கைகளும் சடங்குகளும் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டவை என்று தெரிய வந்தால் அடுத்த வினாடியே அவற்றை விட்டு விலகி நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக மதித்து வாழ நாம் திட  சங்கம் பூண்டு வாழ முயற்சிப்போமாக!

1 COMMENT

  1. எல்லோரும் கியாமத் நாளன்று அல்லாஹ்வின் முன்னாடி நிற்கத்தானே போறோம்… ஒரு பகுதியினறுக்கு சார்பாக கருத்துக்களை வெளியிடுபவர்கள் மட்டும் அதிலிருந்து விதி விலக்கல்ல…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here