ட்ரம்பின் துரும்பு: இலங்கை கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

0
0

அமெரிக்காவின் தேர்தலில் டொனல்ட் ஜோன் ட்ரம்ப் வெற்றி பெற்றிருப்பது பல்வேறு கருத்தாடல்களை உலக அரங்கில் தோற்றுவித்திருக்கிறது. பலரது எதிர்பார்ப்புக்களையும் ஆரூடங்களையும் பொய்யாக்கும் விதத்தில் அமெரிக்க மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். 1940 இலிருந்து ஜனநாயகக் கட்சி மூன்று தடவைகள் வென்றதில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஹிலாரியின் தோல்வி அமைந்திருக்கிறது.

முதல் தடவை ஜனாதிபதியானவர்களில் அதிகம் வயது கூடியவர், அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கான எந்த அரசியல் அனுபவமும் இல்லாதவர், வெகுளிப் பேர்வழி, பெண் பித்தர்… எனப் பல விமர்சனங்கள் இருந்தபோதும் டொனல்ட் ட்ரம்ப் மீது அமெரிக்க மக்கள் நம்பிக்கை வைத்தமைக்கு உள்நாட்டு விவகாரத்தில் அவர் செலுத்திய அக்கறைதான் காரணமாக இருந்திருக்கிறது.

உலகத்துக்கே ஜனாதிபதியாகி விட வேண்டும் என்று ஹிலாரியும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளும் பேராசை வைத்தபொழுது, தனது சொந்த நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதை தனது நோக்காக தேர்தல் காலங்களில் விபரித்தமைதான் ட்ரம்பின் வெற்றிக்கு வழியமைத்திருக்கிறது.

பொதுவாக அமெரிக்க ஜனாதிபதியாகுபவர்கள் தமது வெளியுறவுக் கொள்கையையும் உலக சமாதானம் என்ற போர்வையில் தமது சொந்த நலன்களையுமே முன்னிலைப் படுத்திப் பேசுவார்கள். ஆனால் ட்ரம்ப், அமெரிக்க உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுத்தார். கிராமப் புற மக்களது பிரச்சினைகளைப் பேசினார். வரிகளைக் குறைப்பதனூடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டுமென்றார். தொழில்நுட்ப உபகரணங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தல், இதன் மூலம் உள்நாட்டு வேலைவாய்ப்பினை அதிகரித்தல், அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் பொருட்டு வெளிநாட்டு ஊழியர்களைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றி னூடாக அமெரிக்காவை மீளவும் கட்டியெழுப்புவதான Make America Great Again என்ற அவரது கோஷம் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.

ட்ரம்பின் வெற்றி நமது நாட்டுத் தலைவர்களுக்கும் பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. அண்மைக் காலங்களில் வெளிநாட்டுத் தூதுக் குழுக்கள் இலங்கை மீது படையெடுப்பது அதிகரித்திருக்கின்றது. அதேபோல ஜனாதிபதியையும் பிரதமரையும் தமது வாசஸ்தலங்களை விட விமான நிலையங்களிலே தான்  தற்பொழுதெல்லாம் அதிகமாக சந்திக்கக் கிடைக்கிறது. இந்த வெளிநாட்டு மயமாக்கலினால் நாட்டுக்கு உதவிகள் கிடைப்பதனை விட வெளிநாடுகளின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளே நாட்டுக்குள் படிப்படியாக ஊடுருவி வருகின்றன.

ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்குகள் அரசியலமைப்பில் உள்வாங்கப்படவிருக்கின்றன. சர்வதேச அழுத்தங்களினால் பயங்கரவாத முறியடிப்புச் சட்டம் நாட்டு மக்களுக்குத் திணிக்கப்படவிருக்கிறது. வெளிநாட்டுத் துணையுடனான ஹைபிரிட் நீதிமன்றம், சர்வதேச வேண்டு கோளுக்கிணங்கிய காணாமல் போனோர் அலுவலகம்,   ஜீ.எஸ்.பி. வரிச்சலுகைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின்  நிபந்தனைகள்…  என ஏகாதிபத்திய சக்திகளின் வாய்களுக்கு தீனி போடுவதே அரசாங்கத்தின் பிரதான பணியாக மாறி வருகிறது.

உள்நாட்டிலே மக்களது வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கான முயற்சிகளும், நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் மந்த கதியிலேயே நடைபெறுகின்றன. நாட்டின் அமைதியைக் குலைக்கும் இனவாதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதை விட்டு விட்டு, பிராந்திய சமாதானத்துக்கென அண்டை நாடுகளுடன் கைகோர்க்கும் கைங்கரியமே இந்த நாட்டுத் தலைவர்களால் அரங்கேற்றப்படுகிறது.

உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு வெளிநாட்டுச் சக்திகளைத் திருப்திப்படுத்தும் விதமாக நாட்டை வழிநடத்துவதற்காக தேர்தல் காலங்களில் மக்களது ஆணையைக் கேட்ட பொழுதெல்லாம் இலங்கை மக்கள் அதனை நிராகரித்திருக்கிறார்கள். இதனால் சில ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்திருக்கிறார்கள். அமெரிக்க மக்களைப் போலவே இலங்கை மக்களதும் தேவை தமது சொந்த நாட்டின் விவகாரங்களில் அக்கறை செலுத்துகின்ற தலைவர்களே.

மக்களது இந்த உணர்வுகளைப் புரிந்து செயற்பட்டதனால் தான் ட்ரம்ப் அமெரிக்க மக்களின் தலைவரானார் என்பது எமது நாட்டுத் தலைவர்களும் புரிந்துகொள்ள வேண்டிய பாடமாகும். இதை விடுத்து வெற்றிலை மெல்லும் இலங்கை மக்களுக்கு சுவிங்கம் கொடுக்க முனைவது தோல்வியிலேயே முடியும்.

Related image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here